கோடை முடிந்து, பள்ளி செல்லும் நேரம் வந்துவிட்டது. புது புத்தகங்கள், புது பை, புது பேனா என்று வாங்கிக் கொடுத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களும் தயாராக வேண்டிய தருணம் இது. அதே நேரம் வரப்போகும் வருடத்தில் குழந்தைகள், அறிவாற்றல் மற்றும் அனைத்து வகையிலான வளர்ச்சியை பெறுவதை உறுதி செய்ய வேண்டிய தருணமும் கூட. இதோ சத்குருவிடமிருந்து சில வழிகாட்டுதல்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

1. படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்

படிக்கும் வழக்கத்தை ஒரு பண்பாடாக வளர்க்க வேண்டும். வாசிக்கும் பழக்கத்தால் வரும் தாக்கம், வீடியோ பார்ப்பது அல்லது கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் கிடைக்கும் தாக்கத்தை விட அதிகமாக இருக்கும். வாசிக்கும் பழக்கத்தால் மூளையும் அதன் உள்வாங்கும் திறனும் வேறு விதமாக மாறும். இளைய தலைமுறை, வீடியோ காண்பதை விட வாசிப்பதில் நாட்டம் ஏற்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். ஆம், ஒலி ஒளி சாதனங்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாலும், புத்தகம் வாசித்தல் மிகவும் நுணுக்கமும் ஆழமும் கொண்டதாகும். ஒரு சினிமா பார்ப்பதைவிட புத்தகம் வாசிப்பதில் ஆழமான தாக்கம் ஏற்படும். மக்களில் பெரும்பாலோர் தற்போது செய்துகொண்டிருப்பதைக் காட்டிலும் வாசிப்பதில் அதிக கவனம் செலுத்தினால், அவர்கள் அதிகம் அமைதியாகவும், அதிகம் சிந்திப்பவர்களாகவும், வாழ்க்கையை இன்னும் ஆழமாக பார்க்கும் தன்மையுடையவர்களாகவும் இருப்பார்கள்.

2. அறிவுத்திறனையும், குறிக்கோளையும் வளர்த்தல்

அவரவர் திறமைக்கேற்ப வாழும் அறிவு ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு. ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையின் அறிவுத்திறனை வளர்க்க கூடிய சூழலை உருவாக்கிக்கொடுத்து, அவனை புத்திசாலித்தனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க உற்சாகப்படுத்த வேண்டும். பிரச்சினை என்னவென்றால் பெற்றோர்கள் குழந்தைகளை தன் வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர, குழந்தையை அதன் போக்கில் விட முயற்சிப்பதில்லை. பெற்றோர்கள் நோக்கமே, தன் குழந்தை டாக்டராக வேண்டும் என்பதுதான். அவன் மிக அற்புதமான ஒரு தச்சனாகக்கூட ஆகலாம், ஆனால் அவன் டாக்டராக வேண்டும் என்று நீங்கள் நினைப்பது உங்களின் சேவை மனப்பான்மையினால் அல்ல. உங்கள் பார்வையில் ஒரு டாக்டருக்கோ அல்லது இஞ்ஜினியருக்கோதான் சமுதாயத்தில் மதிப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையை உங்கள் குழந்தைகள் மூலமாக வாழ முயற்சிக்காதீர்கள். இது நிச்சயம் குழந்தைகளை உருக்குலைக்கும்.

உங்கள் குழந்தை நீங்கள் செய்ததை செய்யக்கூடாது. நீங்கள் செய்யக்கூட நினைக்காததை உங்கள் குழந்தை செய்ய வேண்டும். அப்போதுதான் உலகம் முன்னேறும்.

3. ஒழுங்கை உருவாக்குவது

ஆங்கிலத்தில் டிசிப்ளின்(discipline) என்றால் “கற்றுக்கொண்டிருப்பது” அல்லது “கற்கப்போவது” என்று பொருள். நான் டிசிப்ளின் உள்ளவன் என்றால் "கற்றுக்கொள்ள விருப்பப்படுகிறேன்" என்று பொருள். அந்த நிலையில், நீங்கள் எதோ ஒரு குறிப்பிட்ட முறையை மட்டும் சார்ந்திருக்கவில்லை. டிசிப்ளின் என்பது ஏதோ ஒன்றை ஒரே விதமாக செய்வது அல்ல, ஏதாவது ஒரு விஷயத்தை இன்னும் மேம்பட செய்வது எப்படி என்று நீங்கள் தொடர்ந்து முயற்சித்து வருவீர்கள் என்றால் நீங்கள் ஒரு ஒழுங்கில் இருப்பவர் என்று பொருள்.

ஒரு குழந்தையின் வாழ்வில் சில யோகப் பயிற்சிகளைக் கொண்டுவந்தால், அக்குழந்தைக்கு ஒழுக்கம் வராமல் போகாது. அவர்கள் ஒழுக்கமாகத்தான் இருப்பார்கள். சில காரியங்களை குறிப்பிட்ட விதமாக செயல்படுத்த யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கும். வேறுவிதமாக அது வேலை செய்யாது. யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கும் வழி மிக நுட்பமானதாக இருப்பதால், நீங்கள் அதை கவனமுடன் செய்ய ஆரம்பிக்கும்போது, ஒழுக்கம் வராமல் இருக்காது.