இதெல்லாம் பாவம்; இதையெல்லாம் செய்தால் உனக்கு நரகம்தான் என்றெல்லாம் போதிக்கும் மதங்களால் மனிதருக்குள் எழும் குற்ற உணர்ச்சி, அவர்களை மனதளவில் பெரிதும் பாதிக்கிறது. இது குறித்து அலசும் சத்குருவின் பார்வை, சங்கரன் பிள்ளை ஜோக்குகளுடன் நம்மைச் சிந்திக்க வைக்கிறது!

Question: ஆசை பற்றி நிறைய கூறினீர்கள், ஆனால் சில சமயங்கள் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதால் ஏற்படும் குற்றவுணர்ச்சி மற்றும் பயம் பற்றி சொல்லமுடியுமா?

சத்குரு:

சங்கரன் பிள்ளை மாருதி சுஸூகி தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு மேலாளர் அறையில்தான் வேலை. ஒரு நாள், அவர் தனது இருக்கையில், சோகமே உருவாக, துயரத்துடன் அமர்ந்திருந்தார். அறைக்குள் நுழைந்த மேலாளர் இதைப் பார்த்து அவரிடம், ‘ஏன் இத்தனை கவலையாக அமர்ந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை, ‘இன்று என் அம்மா இறந்துவிட்டார்கள்’ என்றார். அதற்கு மேலாளர், ‘அப்படியெனில் ஏன் வேலைக்கு வந்தீர்கள்? லீவு எடுத்துக் கொண்டிருக்கலாமே’ என்று சொல்ல, சங்கரன் பிள்ளையோ, ‘என்ன செய்வது? என் தாய் தொலை தூரத்தில் வசித்து வந்தாள். என்னால் எப்படியும் அங்கு போக முடியாது. வீட்டில் தனியாக அமர்ந்திருந்தாலோ என்னால் துக்கத்தைத் தாங்க இயலாது. அதனால் இங்கேயே வந்துவிடலாம் என வந்துவிட்டேன்’ என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.
உங்களுக்கு உருவாகும் பாதிப்புகள் உங்கள் வேலையாலோ, குடும்பத்தாலோ அல்லது இந்த உலகினாலோ அல்ல. நீங்கள் இப்போது இருக்கும் விதம்தான் உங்கள் பாதிப்பிற்குக் காரணம். இதை சரிசெய்து கொண்டால், திடீரென எல்லாமே வேறுவிதமாய் இருக்கும்.

அதற்கு மேலாளர், ‘சரி. இன்று உனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய். இதுபோன்ற துக்க நாளில் நீ என்ன செய்கிறாய், செய்யவில்லை என்பது எனக்கு முக்கியமல்ல... உன் விருப்பம் போல் ஏதோ செய்’ என்று சொல்லிவிட்டு, தன் வேலையைப் பார்க்கலானார். இரண்டு மணிநேரம் கழித்து சங்கரன்பிள்ளைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசி முடித்த சங்கரன் பிள்ளை மேலும் துக்கத்தில் ஆழ்ந்தார். இதை கவனித்த மேலாளர், அக்கறை மேலோங்க, ‘இப்போது என்னவாயிற்று?’ என்று கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை, “என்ன துரதிர்ஷ்டம்! என் தம்பியும் இன்றே அவன் தாயை இழந்துவிட்டான்” என்றார். பாருங்கள், ஒரே நேரத்தில் இரண்டு துக்கம்!

மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தோல்வி கிடைத்தாலும் துயரம், வெற்றி கிடைத்தாலும் துயரம். இவர்களை வைத்து என்ன செய்வது? மனிதர்கள் துயரப்படாத விஷயம் என்று ஏதேனும் இருக்கிறதா? படிப்பறிவு இல்லாவிட்டாலும் துயரம், படிப்பதற்கு பள்ளிக்கூடம் அனுப்பினாலும் துயரம்; ஏழையாக இருந்தாலும் துயரம், செல்வந்தர் ஆனாலும் வருமான வரிகளை நினைத்துத் துயரம்; கல்யாணமாகவில்லை என்றாலும் துயரம், கல்யாணம் ஆகிவிட்டாலும் துயரம்; குழந்தைகள் இல்லாவிட்டாலும் துயரம், குழந்தைகள் பிறந்தாலோ, தலையை பிய்த்துக் கொள்ளும் நிலை. இப்படி வாழ்வில் ஒவ்வொரு அம்சமும் துயரமாக இருக்கிறதே என்று உங்களுக்கு மரணத்தை வழங்கினால்... அது, எல்லாவற்றையும் மிஞ்சிய துயரமாக இருக்கிறது!

மனிதர்கள் துயரப்படாத ஒரு விஷயத்தை எனக்குக் கூறுங்கள். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... வெற்றியோ தோல்வியோ உங்களைத் துயரத்தில் தள்ளவில்லை. உங்கள் துயரத்திற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் துயரங்களுக்கு மூலமே நீங்கள்தான், உங்கள் வேலையோ, மனைவியோ, இந்த உலகமோ அல்ல. உங்களை எப்படி வைத்துக்கொள்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் உடலும் மனமும் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கும் என்றால், உங்களுக்குத் துயரம் வர முடியுமா? உங்கள் உடலும் மனமும் நீங்கள் சொல்வதை கேட்டு நடந்தால், அவற்றை இன்பமாக வைத்திருப்பீர்களா அல்லது துன்பமாக வைத்திருப்பீர்களா? இன்பம்தான், இல்லையா?

உங்கள் உடலும் மனமும் அவ்வாறு உங்கள் பேச்சைக்கேட்டு இயங்கினால், உங்கள் வாழ்வில் துன்பம் என்பதே இருக்காது. உங்கள் பிரச்சனை இவ்வளவுதான். உங்கள் உடலும் மனமும் நீங்கள் சொல்வதைக் கேட்பதில்லை. அதை விட்டுவிட்டு உங்கள் துயரத்திற்கு பலவிதமான காரணங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். உதாரணத்திற்கு ஆசிரமத்தில் நீங்கள் தங்குவதற்கு இடமும் கொடுத்து, உங்களுக்குத் தேவையான உணவையும் குறைவில்லாமல் நாங்கள் தருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் உங்கள் வாழ்க்கை முழுவதிற்குமே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் எங்களோடு வந்து சும்மா இருக்கவேண்டும். உங்களுக்கு எந்த வேலையும் தரமாட்டோம், நீங்கள் சும்மா அங்கு அமர்ந்து ஆனந்தமாய் இருக்கவேண்டும். இது உங்களால் முடியுமா? உங்களுக்குப் பித்துப் பிடித்துவிடும்... உண்மைதானே?

உங்களுக்கு உருவாகும் பாதிப்புகள் உங்கள் வேலையாலோ, குடும்பத்தாலோ அல்லது இந்த உலகினாலோ அல்ல. நீங்கள் இப்போது இருக்கும் விதம்தான் உங்கள் பாதிப்பிற்குக் காரணம். இதை சரிசெய்து கொண்டால், திடீரென எல்லாமே வேறுவிதமாய் இருக்கும். இவ்வுலகில் இருப்பது ஒரேயொரு பிரச்சனை - அது நீங்கள் மட்டும்தான். இந்த ஒரு பிரச்சினையை சரிசெய்து விட்டால், இங்கு உண்மையில் வேறு எந்த பிரச்சனையுமே இல்லை. மற்றதெல்லாம் வெறும் விளையாட்டுத்தான். இப்பூமியில் இருப்பது ஒரே ஒரு பிரச்சனை, அது மனிதன் மட்டுமே. மனிதஇனம் முழுவதும் நாளை காணாமற் போனது என்றாலும் இந்த பூமிக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது, அது நன்றாகவே இருக்கும். அதனால் நீங்கள் இந்த ஒரு பிரச்சனையை(உங்களை) மட்டும் சரி செய்தால் போதும், வேறு எந்தப் பிரச்சனையையும் நீங்கள் சரிசெய்ய முயல வேண்டாம்.

உங்களுக்கு இருக்கும் குற்றவுணர்ச்சி எல்லாம் நீங்கள் சார்ந்த சமுதாயம் வளர்த்தெடுத்ததுதான், இல்லையா? வெவ்வேறு சமுதாயங்கள் வெவ்வேறு விஷயங்களைக் குற்றங்களாக பார்க்கின்றன. இன்னும் சொல்லப்போனால், இவ்வுலகின் ஐம்பெரும் மதங்களை எடுத்துக் கொண்டு, அவை பாவம் என்று சொல்வதை எல்லாம் ஒரு பட்டியலிட்டுப் பார்த்தால், இந்த பூமியில் நீங்கள் உயிரோடு இருப்பதும் கூட பாவம் என்றாகிவிடும். இதே வகையில் பார்த்தால், இங்கு உங்கள் பிறப்பு நிகழ்ந்திருப்பதும் கூட பாவம்தான். உங்கள் பிறப்பே பாவம் எனில், அங்கேயே எல்லாம் முடிந்து போகிறது! பிறப்பே பாவம் என்றால் வாழ்வைப்பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?

குற்றவுணர்வு மக்களில் இருந்தால்தான், அவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் இது சரியான வழி அல்ல.

ஒருநாள் கடற்கரை ஓரமாக ஒருவர் நடந்து கொண்டிருந்தார். கடற்கரையில் இளம் தொழிலதிபர்கள், ஆம், கடற்கரைகளில் வியாபாரம் செய்யும் சிறுவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? அவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் இந்த நபரிடம் வந்து, “சார், டூத் பிரஷ் சார், டூத் பிரஷ்... ஆயிரம் ரூபாய்தான் ஸார்... வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான். அந்தச்சிறுவன் பேச ஆரம்பித்தபோது அவனை புறக்கணிக்க நினைத்த அந்த மனிதர், டூத் பிரஷின் விலை ஆயிரம் ரூபாய் என்று கேட்டவுடன், கோபமடைந்தார். ‘என்னது? ஆயிரம் ரூபாயா? என்ன பகல் கொள்ளை இது? திருட்டுப் பயலே, என்னை ஏமாந்தவன் என்று நினைத்தாயா?’ என்று கோபமாகக் கத்தினார். உடனே அந்த இளம் தொழிலதிபர் கூறினான், ‘சரிங்க சார், வீட்டில் செய்த இந்த வடையையாவது வாங்கிக்கோங்க... இரண்டு ரூபாய்தான்’ என்றான். இவனை அங்கிருந்து அனுப்பிட எண்ணி, சரி என்று அந்த நபர் 2 ரூபாய்க்கு ஒரு வடையை வாங்கி, அதைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டார். வாயில் அதைப் போட்டுக் கடித்த அடுத்த நொடி, அதைக் காறித் துப்பி, ‘சே! என்ன இது மலம் போல் இருக்கிறது...’ என்றார். அதற்கு அந்த இளம் தொழிலதிபர் சொன்னான், ‘ஆம், அது அதே தான். சார், இந்த டூத் பிரஷ்... வாங்கிக் கொள்கிறீர்களா சார்?’

மக்களும் மதங்களை இப்படித்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எதைச் செய்தாலும், அதில் உங்களுக்குக் குற்றவுணர்ச்சி ஏற்படும்படி செய்வார்கள். பின்பு அதற்கென ஒரு தொகையை நீங்கள் கட்டினால், அந்த குற்றவுணர்ச்சியில் இருந்து வெளிவர ஒரு தீர்வு சொல்வார்கள். உங்கள் பிறப்பும், வாழ்க்கை வாழ்வதுமே கூட உங்களுக்கு குற்றவுணர்ச்சியை உண்டு செய்யவேண்டும். அதுதான் அவர்களின் நோக்கு. இது நடந்துவிட்டால், அவர்களின் தொழில் இடைவிடாது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்குமே! குற்றவுணர்ச்சி என்பது நம்முள் வளர்க்கப்படுகிறது. இந்தக் குற்றவுணர்வை நம்முள் வளர்ப்பதற்கு சமுதாயங்கள் மேற்கொள்ளும் ஒரு முக்கிய சாதனம் - மதம். இப்படிப்பட்ட குற்றவுணர்வு மக்களில் இருந்தால்தான், அவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் இது சரியான வழி அல்ல. இது மிக முட்டாள்தனமான, குறுகிய மனப்பான்மையோடு உருவாக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு முறை.

தங்கள் செயல்பாடுகளை மனிதர்கள் அவர்களின் விழிப்புணர்வோடு, தெளிவான சிந்தனையோடு, புத்திசாலித்தனத்தோடு முடிவு செய்யவேண்டுமே தவிர, குற்றவுணர்வு அதை நிர்ணயிக்கக் கூடாது. உங்கள் வாழ்க்கை எப்படி நடக்கவேண்டும் என்பதை உங்கள் புத்திசாலித்தனம் தீர்மானிக்க வேண்டுமா? அல்லது உங்களை ஆட்டிப்படைக்கும் பயம் தீர்மானிக்க வேண்டுமா? உங்கள் வேலை, வாழ்க்கை, திருமணம்... இதில் எதுவுமே பிரச்சனை இல்லை. எது பிரச்சனையென்றால், உங்கள் உடலும், மனதும் நீங்கள் சொல்வதைக் கேட்காமல், தற்செயலாக ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றன. அதனால் தான் வாழ்வின் ஒவ்வொரு விஷயமும் பெரும் சவாலாய்த் தோன்றுகிறது.