யோகா யோகா யோகா... தற்போது உலகில் மிகப் பிரபலமாகி வரும் ஒரே பேசுபொருள்! அதைப் பற்றி சில சந்தேகங்களுக்கு சத்குரு அளித்த பதில்கள் இங்கே...

Question: குண்டலினி சக்தி குறித்து வெளிநாட்டினரும் தற்போது நிறைய நூல்கள் எழுதி வருகிறார்களே? அப்படியென்றால் அவர்கள் யோகாவில் நம்மைவிட வேகமாக முன்னேறி வருகிறார்களா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யோகா, குண்டலினி, தந்த்ரா போன்றவை பற்றி, இந்தியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுதியதை விட, மேற்கத்திய நாட்டினர் கடந்த 25 வருடங்களில் எழுதிய நூல்கள் அதிகம். ஏதாவது ஒரு சிறிய விஷயம் கிடைத்தால் அதை வைத்து அவர்கள் உடனே ஒரு நூல் எழுதி விடுவார்கள். உள்நிலை குறித்த விஷயங்களில் இது போன்ற அணுகுமுறை மிகவும் தவறு. வெளி சூழ்நிலையில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, வார்த்தைகள் வைத்து விளையாடி, நீங்கள் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அது தவறில்லை. பொழுது போக்காக மக்கள் அதைப் படித்து விட்டுவிடுவார்கள். ஆனால் உள்நிலைப் பரிமாணம் குறித்து, குண்டலினி போன்றவை குறித்து, இப்படி புத்தகங்கள் எழுதுவது தவறு. இவற்றைப் படித்துவிட்டு, ஒன்றும் தெரியாமலேயே, தனக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

குண்டலினி என்பது பரிசோதிக்கப்படாத மின்சாரம் போல. குண்டலினி சக்தியை நீங்கள் பரிசோதிக்க நினைத்தால் அதைத் தாங்கக் கூடிய அளவிற்கு நீங்கள் உங்கள் உடல் மற்றும் மனத்தை மேன்மைப்படுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுள் உள்ள ஏதோ ஒன்று எரிந்து போகும். ஏற்கனவே முறையற்ற யோகா, திறமைக்கும் அதிகமான யோகா இப்படி பலவற்றால் பலபேர் தங்களையே எரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அமெரிக்காவில் பல இடங்களில் 'சக்கரங்கள் சமநிலைப்படுத்தும் கிளினிக்' நிறைய முளைத்து வருகின்றன. அங்கும் மக்கள் செல்கிறார்கள். அங்கே பல நேரங்களில் ஆன்மீகம் வியாபாரத்துக்கும், பொழுதுபோக்குக்குமான ஒரு விஷயமாகிவிட்டது. இது நல்லதல்ல.

Question: சத்குரு, நான் கட் அடிக்காமல் யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்தேன், ஆனால் இடையில் இடைவெளி வந்துவிட்டது, மீண்டும் விடாப்பிடியாய் எப்படி யோகா செய்வது?

சத்குரு:

நீங்கள் யோகத்தை விடாப்பிடியாய் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விடாப்பிடியாய் செய்ய வேண்டும் என்று நாம் நினைத்துச் செய்யும் செயல்கள் நம் வாழ்வில் பெரும்பாலும் வேலை செய்யாது. அதனால் நான் என் வாழ்க்கை முழுவதும் யோகாவை நிச்சயமாக செய்வேன் என்றெல்லாம் உங்களுக்குள் நீங்கள் சூளுரைத்துக் கொள்ள வேண்டாம். இன்று மட்டும் யோகா செய்யுங்கள் அதுபோதும். வாழ்க்கை வெகு சுலபமாய் இருக்கும் போது, ஏன் இப்படி உங்களை சங்கடப்படுத்திக் கொள்கிறீர்கள். “என் வாழ்க்கை முழுவதும் நான் யோகா செய்வேன்,” என்று உங்களை நீங்களே சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம். ஆனால் நான் இன்று யோகா செய்வேன் என்ற உறுதியை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். யோகம் இயல்பாய் நடக்கும்.

Question: குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து யோகாசனங்கள் கற்றுக் கொடுக்கலாம்?

சத்குரு:

எட்டு, ஒன்பது வயது வரை நாங்கள் குழந்தைகளுக்கு ஆசனங்கள் எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கு பதினான்கு, பதினைந்து வயது ஆகும் வரை நாம் எல்லா ஆசனங்களையும் கற்றுக் கொடுப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, இன்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு எல்லா யோகாசனங்களையும் கற்றுத் தருகிறார்கள். பத்மாசனம் போன்ற ஆசனங்களையெல்லாம் குழந்தைகளுக்கு, அவர்களுடைய எலும்புகள் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கற்றுக் கொடுத்தால், அவர்களுடைய கால்கள் வளைந்து போவதற்கு வாய்ப்புண்டு. அவர்கள் அதையெல்லாம் கற்றுக் கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட வயது ஆக வேண்டும். அவர்களுடைய எலும்புகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைய வேண்டும். அதன்பின்தான், அவர்களுக்கு ஆசனங்கள் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான ஈஷா யோகா பயிற்சி வகுப்பை நாம் ஏழிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு நடத்தினாலும், அதில் கற்றுத் தரப்படும் ஒன்றிரண்டு ஆசனங்கள் மிக, மிக எளிமையானவை. ஆனால் உங்கள் குழந்தைகள் யோகாசனப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எல்லா ஆசனங்களையும் கற்றுத் தர ஆரம்பித்தால், அவர்கள் வளைந்த கால்களுடன், சிதைந்த மூட்டுகளை உடையவர்களாக ஆகிவிடலாம். ஏனென்றால் குழந்தைகளுடைய எலும்புகள் இன்னும் வளர்ந்து கொண்டும், உருவாகிக் கொண்டும் இருக்கின்றன. அந்த சமயத்தில் அவற்றின் மேல் அதிகமான அழுத்தம் கொடுத்தால், பிரச்சனைகள் ஏற்படலாம்.