Question: "முன்பெல்லாம் என் மனைவி காலையில் எழுந்ததில் இருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். யோகா வகுப்புக்குப் போய் வந்தபிறகு, முற்றிலும் மாறிவிட்டாள். யோகா பயிற்சிகளை முடித்துவிட்டுதான் எங்களை கவனிக்கிறாள். குடும்பத்தில் குழப்பம் செய்கிற யோகா, பெண்களுக்கு அவசியம் தேவையா?"

சத்குரு:

குடும்பமா? குடும்பம் என்றால், ஒவ்வொருவரும் பங்களிப்பது. ஒருவரையே சார்ந்திருப்பது அல்ல! அடுத்தவர் நலன் பற்றி கவலைப்படாமல், அவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாக மட்டுமே வைத்திருக்கும் உறுப்பினர்கள் இருக்கும் அமைப்பை, 'குடும்பம்' என்று எப்படி அழைப்பது?

விமான நிலைய கன்ட்ரோல் அறையின் போன் ஒலித்தது.

ஒருவர் உன்னத நிலையை உணர்ந்துவிட்டால், அந்த ஆனந்தம் அவரை மட்டும் உய்விக்கப்போவது இல்லை. அவரைச் சுற்றியுள்ள அத்தனை பேரையும் அது மேல்நிலைக்குக் கொண்டு செல்லும்.

"ஹலோ, ஜான் பேசுகிறேன்!" (ஜான், 'பைலட்' ஆக பயிற்சி எடுத்துக் கொள்ளும் மாணவன்)

"சொல், ஜான்!" என்றார் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி.

"சார், எரிபொருள் அளவுகாட்டி பூஜ்யத்தில் நிற்கிறது. இப்போது நான் என்ன செய்வது?"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கட்டுப்பாட்டு அறை பரபரப்பானது.

"ஜான், கவலைப்படாதே! எந்த ஏரியாவில் இருக்கிறாய்?"

"நகரத்துக்கு வெளியே"

"பக்கத்தில் கட்டங்கள் இல்லாத மைதானம் ஏதாவது தெரிகிறதா?"

"தெரிகிறது"

"எவ்வளவு தொலைவில்?"

"200 மீட்டர் தொலைவில்!"

"ஓ, அது போதாது!" என்ற அதிகாரி, கவலையுடன், "சரி, பூமியிலிருந்து எத்தனை அடி உயரத்தில் இருக்கிறாய்?"

"8 அடி உயரத்தில்!"

"என்னது?"

"ஆமாம், சார்! என் கார் ஒரு பாலத்தில் ஏறி நிற்கிறது. பெட்ரோல் தீர்ந்துவிட்டது. பக்கத்தில் பெட்ரோல் எங்கே கிடைக்கும்?" என்று கேட்டான்.

இது போல், எல்லாவற்றிற்கும் அடுத்தவர் உதவியை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தால், அந்த ஜான் போல் ஒன்றுக்கும் உதவாது போவீர்கள். உங்கள் மனைவி யோகா பயிற்சிகளை முடித்துவிட்டு வருவதற்குள், அவர் உங்களுக்குச் செய்து தர வேண்டும் என்று நீங்கள் செய்யாது காத்திருக்கும் வேலைகளின் பெரும் பகுதியை நீங்களே முடித்துக் கொடுங்களேன்.

"வீட்டில் பெண்களுக்கென்று சில கடமைகள் உள்ளன. யோகாவுக்காக அவற்றை அவர் தவிர்ப்பது எப்படிச் சரியாகும்?"

குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டதால், உங்கள் மனைவி உங்களுக்கு சேவகம் செய்து கொண்டே இருக்க வேண்டும், மேன்மையான விஷயங்களுக்கு ஆசைப்படக்கூடாது என்று யார் சொன்னது?

நிம்மதியற்ற நிலையில், உங்களை சிறைப்படுத்தும் பிரச்சனைகள், குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, ஒவ்வொரு தனி மனிதரும் மேன்மையான நிலைக்குப் போவது எப்படி என்பதில் கவனம் வைக்க வேண்டும். அது கடமையிலிருந்து தவறியதாகாது. உடன் இருப்பவர்கள் உண்மையான அன்பு கொண்டு இருந்தால், அதற்குச் சந்தோஷமாக உதவுவார்கள்!

"கடமைகளிலிருந்து மனைவி தவறும்போது, அவள் மீது எப்படி அன்பு வரும்?"

இனிப்பான கனிகள் கொடுக்கும் மரம் ஒன்றைத் தோட்டத்தில் நடுகிறீர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அதன் வேர்களைக் கவனித்து நீரூற்றி வந்தால், அது எப்படியும் கனிகளைத் தரும் அல்லவா?

ஒருவர் உன்னத நிலையை உணர்ந்துவிட்டால், அந்த ஆனந்தம் அவரை மட்டும் உய்விக்கப்போவது இல்லை. அவரைச் சுற்றியுள்ள அத்தனை பேரையும் அது மேல்நிலைக்குக் கொண்டு செல்லும்.

குரு தன் சீடர்களுடன் காட்டு வழியில் நடந்து கொண்டு இருந்தார். இரவு வந்தது. சீடர்கள் சுள்ளிகளைப் பொறுக்கிக் குவித்து, நெருப்பு மூட்டினர்.

"ஆன்மீகப் பாதையும் இந்த நெருப்பைப் போலத்தான்" என்றார் குரு. முதலில் திணறடிக்கும் புகை கிளம்பும். அதற்குப் பயந்து நெருப்பை அணைத்துவிட்டால், வெளிச்சமே போய்விடும். கொஞ்சம் நேரத்திற்குப் புகையைப் பொறுத்துக் கொண்டால், அது அடங்கி தீ கொழுந்து விட்டு எரியும். அது வெப்பமும், வெளிச்சமும் தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுகையில், முதலில் எழும் புகையைப் பொறுத்துக் கொண்டால், அதைக் கடந்து வரும் வெளிச்சம், சுற்றி உள்ளவர்கள் அனைவருக்கும் கிட்டும்!"