பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! - பகுதி 5

"நான் வெறும் குடும்பத்தலைவிதான்" என்று நொந்துகொள்பவர்களுக்கு, சத்குரு தரும் விளக்கம் ஒரு தெளிவைக் கொடுக்கும். தொடர்ந்து படியுங்கள் இந்த வாரப் பகுதியை...

நான் ஒரு முறை யோக வகுப்பு எடுத்தபோது, பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அப்போது ஒரு பெண்மணி தன் பெயரை சொல்லிவிட்டு பிறகு தன்னை வெறும் குடும்பத்தலைவி (just housewife) என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். அதென்ன வெறும் குடும்பத்தலைவி, உங்களுக்கு அதன் அருமை தெரியவில்லை, வெளியில் சென்று பணம் சம்பாதிக்காததால் நீங்கள் இப்படி நினைத்துக் கொள்கிறீர்கள் என்று பதில் கூறினேன்.

சிலர் தன் நலத்தையும் தாண்டி அன்புடனும் அக்கறையுடனும் ஈடுபடும்போதுதான் இந்த உலகம் அழகானதாக இருக்கிறது.

தங்கள் பெண்மை ஆதிக்கம் செலுத்தப்படுவதாக நினைத்ததால்தான், பெண்கள் ஆண்கள் செய்யும் செயல்களை செய்ய முற்படுகிறார்கள். தற்போது உலகில் பல பெண்ணிய இயக்கங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. பல்லாண்டுகளாக இந்த சமூகம் ஆணின் ஆதிக்கத்திலேயே நிகழ்ந்திருப்பதால் பெண்ணிய இயக்கங்கள் தோன்றுவது இயற்கைதான். ஆனால் அந்த இயக்கங்கள் உண்மையாகவே பெண்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமானால், அவை ஆணாதிக்கத்திற்கு எதிராக செயல்படாமல், பெண் தன்மையை மேலுயர்த்துவது எப்படியென சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் எல்லோருக்கும் நன்மை நிகழும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் தாயார்...

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, எங்கள் தாயார் காலை 6 மணிக்கு எழுந்து விடுவார். வீட்டை சுத்தம் செய்து, சிற்றுண்டி தயாரித்து எங்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பிறகு குளித்து பூஜை செய்து மீண்டும் உணவு தயாரித்து 12 மணி அளவில் நிமிரும்போது, என் தந்தை சரியாக வீட்டிற்கு வருவார். எப்போதும் என் தந்தை வருவதற்கு முன் அவர் நன்றாக உடை அணிந்து கொண்டு தலையில் பூ சூடியிருப்பார். இது எப்போதும் நடந்தது. எங்கள் வீட்டில் எந்த ஒரு தலையணை உறையிலும் ஒரு சிறிய எம்ப்ராய்டரி வேலையாவது இல்லாமல் எப்போதும் இருந்ததில்லை. ஒரு சிறிய பூவாவது எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கும். இந்த வேலைகள் எப்போதும் அவருக்கு ஆனந்தத்தைத் தந்தது.

எங்கள் நல்வாழ்விற்காக தன்னை ஒருவர் இந்த அளவு அர்ப்பணித்திருக்காவிட்டால் எங்கள் வாழ்வு எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவருடைய அர்ப்பணிப்பு எங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு படியிலும் உயர்த்தியது. அவர் வருமானம் ஈட்டாததால் அவரை யாருக்கும் தாழ்ந்தவராக நினைக்க முடியாது, கண்டிப்பாக முடியாது. அவருடைய தீவிர அர்ப்பணிப்பே மற்ற அனைவரையும் விட அவரை அதிகமாக உயர்த்திக் காட்டியது. வீட்டில் எது நடந்தாலும் அவரை கலந்தாலோசித்துத்தான் அது நடக்கும். ஏனெனில் மற்றவர் மீது அவர் கொண்டிருந்த அக்கறை அத்தகையது. இதுதான் ஒருவருடைய வாழ்க்கையை உயர்த்துகிறது.

பெண் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் என் தாயாரிடம் நீ ஒரு அடிமை போல் இருக்கிறாய், ஊதியம் இன்றி வேலை செய்கிறாய், நீ பயன் படுத்தப்படுகிறாய் என்றெல்லாம் சொன்னால், அவர் மிகவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார். ஏனெனில் அவரைப் பொறுத்த வரையில் அவர் வீட்டில் செய்து வந்த பணிகள் அவருக்கு அன்பு மயமான அனுபவத்தை கொடுத்தது. இப்படி சிலர் தன் நலத்தையும் தாண்டி அன்புடனும் அக்கறையுடனும் ஈடுபடும்போதுதான் இந்த உலகம் அழகானதாக இருக்கிறது.

சரி, என்ன செய்யலாம்?

அதற்காக எல்லா பெண்களும் வீட்டிலேயே இருந்து கொள்ள வேண்டும், ஆண்கள் மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. நீங்கள் வாழும் வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றால் நீங்கள் அலுவலகத்திற்கு சென்றாலும் சரி, அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டாலும் சரி அது ஒரு பொருட்டல்ல. எது தேவையோ அதை நாம் செய்ய முடியும்.
ஆண் பெண் என்ற இரு தன்மைகளை இருவேறு உயிரினமாகக் கருதாமல், இவ்விரண்டையும் ஒரே உயிரினமாகக் கருதி வாழவேண்டும். சமூகச் சூழலில் பெண்ணுக்கும் சம அளவிலான ஈடுபாடும், பங்களிப்பும் கிட்ட வேண்டுமென்றால் பெண் தன்மையை முழுமையாக வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை நாம் பார்க்க வேண்டும். இதற்கென சில நடைமுறைகளையும் சில சட்டங்களையும் மாற்றத் தேவையிருக்கிறது.

பெண்கள் ஆண் தன்மை கொண்டவர்களாக மாறி பெண் தன்மையே இல்லாமல் செய்துவிட்டால் அதுதான் உலகில் பெண்தன்மைக்கு கிடைக்கப்போகும் உண்மையான தோல்வியாக இருக்கும். பெண் தன்மை என்பது தேவையற்றதும் இல்லை, பலவீனமானதும் இல்லை. பெண்தன்மை வித்தியாசமானது. மென்மையானது. இவ்வுலகில் பெண்தன்மை இல்லாமல் செய்துவிட்டால் மென்மையில்லாத வாழ்க்கையிலும் மென்மையில்லாத உலகிலும் நாம் எப்படி வாழ்வது? பெண்ணிய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பெண் தன்மையை எப்படி வளர்ப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த வாரம்...

"ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் செயல்பட வேண்டுமா? இல்லை பெண்கள் நலமாய் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை கவனிக்க வேண்டுமா?" தெரிந்து கொள்வோம் அடுத்த வாரப் பகுதியில்...

பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! தொடரின் பிற பதிவுகள்