சத்குரு:

அங்கே சிறிது நேரம் அமரச் சொல்வதன் காரணம், அந்தக் கோயில் உருவாகியுள்ள விஞ்ஞானத்தின் அடிப்படையில் அங்கே அமர்கிறபோது அங்கிருக்கும் சக்திமிக்க சூழ்நிலையை மனிதன் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால்தான்.

கோயிலுக்குப் போவதே பிரார்த்தனை செய்யத்தான் என்று பலர் கருதுகிறார்கள். இந்தக் கலாசாரத்தில் கோயில் என்பது பிரார்த்தனைக்குரிய இடமாக எப்போதும் இருந்ததில்லை. கோவில் என்பது ஒரு சக்தி மையம். அங்கே செல்வதன் மூலம் உங்களுக்கு நீங்களே சக்தியூட்டிக் கொள்ளலாம். முன்பெல்லாம் கோவிலுக்குப் போனால் அங்கே அமர்ந்திருந்துவிட்டு வர வேண்டும் என்று சொல்வார்கள். அது ஓர் சம்பிரதாயம் என நினைத்து, இப்போதெல்லாம் மனிதர்கள் ஒரு விநாடி தரையில் உட்கார்ந்துவிட்டு எழுந்துவிடுகிறார்கள். அங்கே சிறிது நேரம் அமரச் சொல்வதன் காரணம், அந்தக் கோயில் உருவாகியுள்ள விஞ்ஞானத்தின் அடிப்படையில் அங்கே அமர்கிறபோது அங்கிருக்கும் சக்திமிக்க சூழ்நிலையை மனிதன் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால்தான். அதேபோல ஆன்மிகப் பாதையில் ஒரு மனிதன் நடையிடத் தொடங்கும்போது கோவிலுக்குப் போக அவசியம் இல்லை என்று இந்தக் கலாசாரத்தில் சொல்லப்படுகிறது. ஏனென்றால், அந்த மனிதருக்கு தனக்குத்தானே சக்தியூட்டிக்கொள்கிற தொழில்நுட்பம் தெரியும்.

கடவுளும் பிரார்த்தனையும் என்று பேசும்போது, எது கடவுள் என்று முதலில் பார்ப்போம். உங்கள் தாயின் கருப்பையிலிருந்து இந்தப் பூமிக்கு வந்து கண் விழித்துப் பார்க்கிறீர்கள். உங்களைச் சுற்றி காணப்படுகிற படைப்பின் அம்சங்களைப் பார்க்கிறபோது, இவற்றை யாரோ படைத்திருக்க வேண்டும் என்று உணர்கிறீர்கள். நிச்சயமாக நீங்கள் அவற்றைப் படைக்கவில்லை. எனவே மேலே இருக்கிற யாரோ படைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறீர்கள். சுருங்கச் சொன்னால், இந்தப் படைப்பைப் பார்த்தபோதுதான் படைத்தவன் என்று யாரோ இருக்க வேண்டும் என்று முடிவு செய்தீர்கள். எனவே கடவுளைப் பற்றிய எண்ணம் உங்களுக்கு வந்திருக்கிறது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.