கொசுவைக் கொன்றால் பாவமா?
கொசு நம்மைக் கடிக்கும்போது யோசனையே இல்லாமல் அதை அடித்து கொன்றுவிடுகிறோம். ஆனால் இதை கொல்வதால் தான் பாவம் செய்கிறோமே என்ற உறுத்தலில் இருக்கும் ஒருவர் சத்குருவிடம் இதைக் கேட்டபோது...
 
 

கொசு நம்மைக் கடிக்கும்போது யோசனையே இல்லாமல் அதை அடித்து கொன்றுவிடுகிறோம். ஆனால் இதை கொல்வதால் தான் பாவம் செய்கிறோமே என்ற உறுத்தலில் இருக்கும் ஒருவர் சத்குருவிடம் இதைக் கேட்டபோது...

Question:கொசு என்னைக் கடிக்கும்போது, அதைப் பட்டென்று அடித்துக் கொன்றுவிடுகிறேன். அந்த மாதிரி சமயங்களில் ஒரு குரூர திருப்தி எனக்குக் கிடைக்கிறது. எனக்குள் மிருக குணம் தலை தூக்குகிறதா?

சத்குரு:

ஒரு புலியையோ, சிங்கத்தையோ வேட்டையாடும் துணிச்சல் உங்களிடம் இல்லை. உங்களால் முடிந்ததெல்லாம் ஒரு கொசுவை வேட்டையாடுவதுதான். இதில் திருப்தி கிடைத்தால், அது உங்கள் பரிதாப நிலையையே எடுத்துக் காட்டும்.

சில குணங்களை மிருக குணம் என்று அழைப்பது, மிருகங்களைவிட நீங்கள் உயர்ந்தவர் என்று உங்கள் மனதில் ஊன்றியிருக்கும் அகங்காரத்தினால்தான்.

எந்த மிருகமும் மனிதனைப் போல குரூர திருப்திக்காகக் கொடூரமாக நடந்து கொள்வது இல்லை. புலி கூட மானை அடிப்பது, அதை உணவாக்கிக் கொள்ளத்தான்! எந்த வக்கிரமான வஞ்சத்தாலும் அல்ல. இயற்கை அதற்கு வழங்கியுள்ள இயல்பு அது.

கொசுவை அடிப்பதில் குரூர திருப்தி கிடைக்கும் என்று இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

என் அறையில் கொசுக்கள் இருந்தால், அவற்றை எப்படி விரட்டுவது என்று பார்ப்பேனே தவிர, அதில் எனக்கு மகிழ்ச்சியோ, துக்கமோ ஏற்படுவதில்லை.

Question:எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காரில் அடிபட இருந்த ஒரு நாய்க்குட்டியைக் காப்பாற்றினேன். அதே கருணையை கொசுவிடம் என்னால் காட்ட முடியவில்லையே! நோயைக் கொண்டு வரக்கூடிய கொசுக்களிடம் எப்படிக் கருணையோடு இருக்க முடியும்?

சத்குரு:

கருணை வேறு; பரிவு வேறு!

ஓர் உயிரிடத்தில் அனுதாபம் கொண்டு வெளிப்படுத்தும் பரிவை, கருணை என்று தவறுதலாகக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

ஒருவருக்கு உதவ தேவைப்படும்போது, அன்பு கொண்டு அவரிடம் காட்டுவது பரிவு. உங்களைச் சார்ந்திருப்பவரிடம்தான் நீங்கள் பரிவு காட்ட முடியும். தன் கால்களில் நிற்கத் துணிந்தவரிடம் நீங்கள் பரிவு கொண்டால், அவர் அதை ஏளனமாகவே பார்ப்பார்.

பரிவு என்பது ஒருவித அனுதாப மனப்பான்மை. கருணை அப்படிப்பட்டதல்ல. அது பாரபட்சமற்ற ஆழமானதொரு பிரிய உணர்ச்சி, விருப்பு, வெறுப்பு என்ற எந் உணர்ச்சிகளோடும் அது சிக்கிப்போவது இல்லை.

தெரிந்தவர், தெரியாதவர் என்று எந்தவித வேறுபாடும் காட்டாமல், சுற்றி உள்ள ஒவ்வொன்றின் மீதும் தீவிர ஆர்வம் கொள்ளும் உணர்வு அது.

நீங்கள் சுவாசிக்கும் காற்று, நீங்கள் நடக்கும் பூமி, காணும் தாவரம், நுகரும் வாசம், கொதிக்கும் சூரியன், குளிரான சந்திரன் எல்லாவற்றிடமும் ஒரே விதமான ஈடுபாட்டுடன் இயங்குவது கருணை.

ஆண், பெண், குழந்தை, விலங்கு, பறவை, மீன், தவளை என்று எந்த உயிராக இருந்தாலும், அத்தனை பேரிடமும் ஒரேவிதமான முழுமையான பாரபட்சமற்ற பிரியம் கொள்வதே கருணை.

உயிர்களிடத்தில் மட்டுமல்ல. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரேவிதமாக உணரக்கூடிய உணர்வு கருணை.

கருணையோடு இருக்கையில், வாழ்க்கை அதன் முழுமையான நிலையில் நிகழ்கிறது. அந்தந்தச் சூழ்நிலைகளுக்குத் தேவையான செயல்கள் விருப்பு, வெறுப்பின்றி வெளிப்படுகின்றன.

கருணையோடு வாழ்க்கையில், யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எந்தப் பாடமும் உங்களுக்கு எடுக்கத் தேவை இல்லை.

Question:எனக்குள் இருக்கும் உறுத்தலை நேரடியாகவே கேட்கிறேன். கொசுவைக் கொல்வது பாவச் செயலா?

சத்குரு:

"ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. உங்கள் செயலுக்கான விளைவு எப்படி இருந்தாலும், அதை நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளத் தயாரானால், அது நல்லதா? கெட்டதா? என்ற கேள்வியே வராது. கர்ம வினைகள் பற்றிய கவலையே இராது.

மற்றபடி பாவம், புண்ணியம் என்பதெல்லாம் சொர்க்கம் பற்றிப் பேசுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்.

காட்டுக்குள் நடந்தார். ஒரு சந்நியாசி. இரண்டு கால்கள் உடைந்து போன ஒரு நொண்டி நரியை அங்கே கண்டார். "ஐயோ, உணவுக்கு இந்த நரி என்ன செய்யும்!" என்று கவலைப்பட்டார்.

அப்போது, சிங்கம் ஒன்றுதான் வேட்டையாடிய இறைச்சியை இழுத்து வந்து நரியின் அருகில் போட்டது. கடவுள் அவருக்கு ஏதோ சேதி சொன்னது போல் இருந்தது.

தனக்கான உணவு கிடைக்க வேண்டுமானால், அதை எப்படியும் தெய்வம் கிடைக்கச் செய்யும் என்று முடிவு செய்தார். உணவு தேடுவதை விடுத்து, கடவுளை நினைத்து ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டார்.

நாட்கள் உருண்டன. பசி முற்றியது. யாரும் அவருக்கு உணவு கொண்டு தரவில்லை. 18 நாட்களில் சக்தி எல்லாம் இழந்தார். பரிதாபமாகச் சுருண்டு கிடந்தார்.

அந்தப் பக்கம் யோகி ஒருவர் வந்தார். நடந்ததை விசாரித்து அறிந்தார்.

"கடவுள் உனக்கு ஒரு சேதி சொன்னது உண்மைதான். ஆனால், மற்றவருடன் உணவைப் பகிர்ந்துகொண்ட அந்தச் சிங்கம் போல் வாழச் சொன்ன சேதியை, நரி போல் வாழச் சொன்னதாகத் தப்பர்த்தம் செய்து கொண்டது நீதான்" என்றார்.

எனவே, பாவமோ, புண்ணியமா என்ற கர்ம வினைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இராமல், எல்லா உயிர்களிடத்தும் பாரபட்சமற்ற உணர்வு கொள்ளுங்கள். இந்தப் பக்குவம் வருவதற்கு சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் உங்களில் ஒரு பகுதியாக உணர்ந்து பாருங்கள். அதன்பிறகு, கோபம், வெறுப்பு, குரூர திருப்தி போன்ற உணர்ச்சிகளுக்கு உங்கள் வாழ்க்கையில் இடம் இராது.

இப்படி மற்றவற்றுடன் கரைந்து, உங்களை உணரும் அதே தீவிரத்தோடு மற்ற அத்தனையையும் உணரும் நிலையே யோகா என்னும் அமுதம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1