Question: தாய் இறந்தால் இளைய பையன் ஈமக்கடன் செய்ய வேண்டும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. தந்தை இறந்தால் மூத்த மகன் ஈமக்கடன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள், இதைப் பற்றி விளக்க முடியுமா?

சத்குரு:

"ரூனானுபந்தம்" எனும் நினைவுப் பெட்டகம்

நம் கலாச்சாரத்தில் ரூனானுபந்தம் என்றொரு வார்த்தை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த பந்தம் உடல் தொடர்பினால் ஏற்படும் பந்தம். மனதிற்கு நினைவாற்றல் இருப்பதுபோல், உடலிற்கும் நினைவாற்றல் இருக்கிறது. மனதின் ஞாபகத்திறனின் அளவிற்கு எல்லை இருக்கிறது, ஆனால் உடலின் நினைவாற்றலோ பிரமாதமானதாய் உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உடல் விட்டுச் செல்லும் அந்த ஜீவன் சுகமாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இவற்றை அறிவியல் முறைப்படி உருவாக்கினர்.

எத்தனை எத்தனை தலைமுறைகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களும் இந்த உடல் ஞாபகத்தில் வைத்திருக்கிறது. இவை யாவும் உங்கள் மனதின் ஞாபகத்தில் இல்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் உங்களுடைய தாத்தாவின் மூக்கு உங்கள் முகத்திலும் உட்கார்ந்து கொண்டுதானே இருக்கிறது? ஏனெனில், உடலின் நினைவாற்றல் மிக ஆழமானதாய் உள்ளது. மற்றொரு தலைமுறையிடமிருந்து நமக்கு கடத்தப்பட்ட ஞாபகங்கள் மட்டுமல்ல நாம் எதைத் தொட்டாலும், எங்கு போனாலும் அந்த ஞாபகங்கள் இந்த உடலில் பதிந்துவிடுகின்றன. இந்த நினைவாற்றல் நம் உடலுடன் சிக்கிக் கொள்கிறது. மனதிற்கு இவைப் பற்றி புரியாவிட்டாலும் உடல் அதனை ஞாபகங்களாய் தனக்குள் பதித்துக் கொள்கிறது. இந்தப் பதிவுகள் ஏற்பட்டவுடன் அது உங்களுக்குள் வேறுவிதமாக வேலை செய்கிறது.

இதனாலேயே நம் கலாச்சாரத்தில் ஒரு இடத்திற்கு போக வேண்டும், வேறு சில இடங்களுக்கு செல்லக்கூடாது என்று வரையறைகளை வகுத்து வைத்தனர். கோவிலுக்கு செல்லும் வழக்கமும் இவ்வாறான ஆழ்ந்த அறிவினால் உருவாக்கப்பட்டதுதான். அதனை சொல்லியும் கொடுத்தனர். நமக்கு தேவையான, பயனுள்ள ஞாபகங்களை மட்டும் நம் உடல் தக்க வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இவை. தேவையற்றதை கழித்துவிட வேண்டுமல்லவா?

யார் கர்மா செய்வது?

தாய், தந்தை, குழந்தை என்று உடல் தொடர்பால் ஏற்பட்ட ஞாபகங்களில் பல வகைகள் உண்டு. குடும்பம் என்றாலே உடல் தொடர்பால் ஏற்பட்ட பந்தம் என்றுதான் அர்த்தம். இதனாலேயே யாரோ ஒருவர் இறந்துபோனால் அவருக்கு உரிய கர்மங்களை செய்ய வேண்டும் என்று உருவாக்கி வைத்தனர். இறந்தவருடைய உடல் சார்ந்த ஞாபகம் யாருக்கு இருக்கிறதோ அவர் கர்மா செய்ய வேண்டும்.

உங்களுக்கு பெற்றோரை பிடிக்காமல் போனாலும் அவருக்கு கர்மம் செய்வதை நீங்கள் தட்டிக் கழிக்க முடியாது, அவருடைய மூக்கு உங்கள் முகத்தில் உட்கார்ந்திருக்கிறதே! அவருடைய தோல் உங்கள் மீது போர்த்தப்பட்டிருக்கிறது, இன்னும் அவருடைய பல குணங்கள் உங்களுக்குள் பதிந்திருக்கிறது. இவற்றையெல்லாம் நீங்கள் நினைத்தாலும் விட்டுவிட முடியாது. (சிரிக்கிறார்). அவரை நமக்கு பிடிக்காமல் போகலாம், அவரை பல ஆண்டு காலங்கள் கண்ணால் பார்க்காமல் போகலாம், ஆனால் அவர் உங்களுள் இருந்து வேலை செய்கிறார் அல்லவா? இதனால் அந்த ஒரு நபர் இறக்கும்போது அவர் சார்ந்த அத்தனை பந்தங்களையும் வெட்டிப் போடும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் நிலவி வருகிறது. இதனை மிகுந்த கவனத்துடன் கையாண்டனர்.

உடல் விட்டுச் செல்லும் அந்த ஜீவன் சுகமாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இவற்றை அறிவியல் முறைப்படி உருவாக்கினர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் நம் மனநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஒருவர் இறந்தாலும் அவரை விடக்கூடாததற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்கிறோம். இப்படி இறப்பை சரியாக கையாளாத ஒரு காரணத்தால் இன்றைய சமூகத்தில், பதின் பருவத்து சிறார்களின் மனங்களில் ஏற்படும் அதிகப்படியான குழப்பங்கள், மரணங்கள் யாவும் சம்பவிக்கின்றன. இறப்பை சரியாய் கையாள்வது மிக மிக அவசியம். இதுபோன்ற நிலைக்கு பல காரணங்கள் இருந்தாலும், இறப்பை சரியாக கையாளாததும் ஒரு முக்கிய காரணம்.

ஒருவர் இறந்த பிறகு...

நம் கலாச்சாரத்தில், இறக்கும் உயிர் சும்மா போய் சேரட்டும் என்கிற நோக்கம் இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அவர் நம்முடனேயே தங்கிவிட வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது. செத்தாலும்

தந்தையின் குணம் மூத்த குழந்தையிடம் அதிகமாக இருப்பதைக் காண முடியும்.

விடக்கூடாது என்ற நிலையில் இருக்கிறோம். உயிர் இருக்கும் வரை நமக்கும் அவருக்கும் தொடர்புண்டு, அவர் இறந்துபோனால், அவருடனான சம்பந்தத்தை விட்டுவிட வேண்டும் என்று உணர்த்திச் சென்றனர். ஏனெனில், அந்த ஜீவன் போகும் இடத்திற்கும் உங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அந்த மனிதருக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்தது, ஆனால் அந்த ஜீவனிற்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த உடலுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்தது, ஆனால் அந்த உயிருக்கும் உங்களுக்கும் தொடர்பேதும் இல்லை. அந்த நபருடைய எண்ணத்திற்கும் உணர்வுக்கும் உங்களுடன் தொடர்பு இருந்தது, ஆனால் இறந்த உயிருக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை. அதனால் எப்போது ஒரு மனிதர் உடலை நீக்கின்றாரோ அத்துடன் அவருடனான உறவையும் விடுத்து, முழுமையாய் அவரை விடுதலை செய்துவிட வேண்டும். அதனாலேயே அந்த மனிதரை எந்த வகையில் எல்லாம் விடுதலை செய்ய முடியுமோ, அவ்விதத்தில் எல்லாம் விடுதலை செய்தனர்.

இதை நீங்கள் சற்றே கவனித்துப் பார்க்க வேண்டும், நான் எதையோ சொல்லப் போக நீங்கள் தேவையில்லாத கற்பனை உலகிற்குள் பிரவேசித்துவிடுவீர்கள். அது பிரச்சனை! உங்கள் வீட்டில் 5 பிள்ளைகள் இருந்தால் இதனை நீங்கள் நிச்சயமாக கவனிக்க முடியும். ஒன்றிரண்டு என்றால் கவனிப்பது சற்று சிரமம்தான். தந்தையின் குணம் மூத்த குழந்தையிடம் அதிகமாக இருப்பதைக் காண முடியும். அதுவே மேலும் குழந்தைகள் வர வர குறைந்துவிடும். இப்படியே செல்லச் செல்ல கடைசி மகன் தாய் போல் ஆகிவிடுவான். அதிக பிள்ளைகள் உள்ள வீட்டில் இதனை நீங்கள் தெளிவாகக் காணலாம். அதற்காக அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு கவனிக்கத் துவங்க வேண்டாம் (சிரிக்கிறார்கள்). தந்தையுடைய தன்மை முதல் குழந்தையிடம் சற்றே அதிகமாக இருக்கும், போகப் போக அது குறைந்து போகும்.

யார் கொள்ளிபோடுவது?

இதனாலேயே தந்தைக்கு முதல் மகனும், தாய்க்கு கடைசி மகனும் ஈமக்கடன் செய்ய வேண்டும் என்னும் வழக்கத்தை உருவாக்கி வைத்தனர். இளையவனுக்கு தாயின் தன்மை அதிகமாக இருக்கும், மூத்தவனுக்கு தந்தையின் தன்மை அதிகமாக இருக்கும். இது 90 சதவிகிதிம் உண்மை. பத்து சதவிகிதத்தாருக்கு இதுபோல் அமையப்பெறாமல் இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் மூத்த மகன் என்று வரும்போது தந்தையின் பற்று சற்று அதிகமாகவே இருக்கும். அதுவே சின்னவன் மேல் தாய்க்கு அபிரிமிதமான பாசம் மிகும்.

முதல் குழந்தை உருவாகும்போது தந்தையின் ஈடுபாடு மிக அதிகமாய் இருக்கும், புதிதல்லவா? இரண்டாம் குழந்தை பிறப்பதற்குள் அவனுக்குள் அது முடிந்துபோய்விடுகிறது (சிரிக்கிறார்கள்). இதனால் ஒரு தந்தைக்கு மூத்த பிள்ளையுடன் அதிகப்படியான பிணைப்பு ஏற்படுகிறது. மாறாக ஒரு தாய்க்கோ இளைய பிள்ளையுடன் பிணைப்பு ஏற்படுகிறது. அதனாலேயே இந்தக் கலாச்சாரத்தில் இதுபோன்ற ஒரு முறையை உருவாக்கி வைத்தனர்.