Question: காதலும், திருமணமும் மக்களிடையே ஏன் எப்போதும் அதிகபட்ச சச்சரவை உருவாக்குவதாக இருக்கிறது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

‘ஆண்’ மற்றும் ‘பெண்’ இருவரும் உடல்ரீதியாக நேரெதிரானவர்கள். இனப்பெருக்கம் நிகழ்வதற்காகவும், அடுத்த தலைமுறை தோன்றுவதற்காகவும் இயற்கையே நம்மை இவ்விதம் உருவாக்கியுள்ளது. நாரைகள் வானத்திலிருந்து குழந்தைகளைக் கொண்டு வந்து போடும் என்றால், எதிர்காலச் சந்ததியினர் உருவாவதற்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் செயல்பட வேண்டிய தேவை இருந்திருக்காது. மேலும் இனப்பெருக்கத்திற்கான ஒரு ஆழமான நிர்ப்பந்த உணர்வு இல்லாமல் இருந்தால் மக்கள் அதைத் தேடமாட்டார்கள். உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் - உங்கள் மூளையின் அணுக்கள் உள்பட - சுரப்பி(ஹார்மோன்)களால் வசப்படுத்தப்பட்டு இனப்பெருக்கம் நோக்கி உந்தப்படுகின்றன. அந்த இனப்பெருக்கத்திற்கான உந்துதலையும் கடந்து நிற்பதற்கு ஒரு நபருக்கு அளவற்ற புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. அந்த புத்திசாலித்தனம் இல்லையென்றால், இதுதான் வாழ்க்கை என்பது போலத் தோன்றுகிறது. அந்தவிதமாகத்தான் சுரப்பிகள் உங்களை உணரச் செய்கிறது. நீங்கள் பத்து அல்லது பதினோரு வயதை அடையும்வரை, அதைப் பற்றி நீங்கள் எண்ணியது கூட கிடையாது. எதிர் பாலினத்தவர் செயல்கள் என்னவாக இருந்தாலும், இரசிக்க மட்டுமே செய்தீர்கள். ஆனால் திடீரென்று இந்தப் புதிய இரசாயனம் (ஹார்மோன்) உங்கள் உடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டவுடன் எல்லாம் மாறிவிட்டது.

யாரோ ஒருவர் உங்களை அன்பில் மூழ்கடிக்கும்போது, நீங்கள் கணக்குகளைக் கடக்கிறீர்கள். அப்போது “நான் என்ன பெறுகிறேன் என்பது முக்கியமில்லை, நான் என்ன கொடுக்கிறேன் என்பதுதான் முக்கியம்” என்ற நிலை உங்களிடம் உருவாகிறது. அந்த உணர்ச்சி தீவிரமாக இருக்கும்வரை அந்த உறவு அழகாக நடக்கிறது.

இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக இயற்கை உங்களை இரசாயன போதையில் ஆழ்த்திவிட்டது. இந்த போதை நேர்ந்தவுடன் எப்படியோ ஆணும், பெண்ணும் ஒன்றிணைவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அல்லது, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டவுடன், இயற்கையாகவே உங்கள் மனம் அதை எப்படி நன்றாக நடத்திக்கொள்வது என்று திட்டமிடுகிறது.

அடிப்படையில், ஒரு உறவுநிலையானது, துரதிருஷ்டவசமாக, ஒருவரையொருவர் எப்படி பயன்படுத்திக்கொள்வது என்னும் நோக்கத்துடன்தான், நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது ஒரு கொடுக்கல் - வாங்கல் உறவாகவே இருக்கிறது. தினசரி அளவில் கொடுத்து வாங்கும்பொழுது, “நான் அதிகம் கொடுக்கிறேன், மற்றொருவர் குறைத்துக் கொடுக்கிறார்” என்றே எப்போதும் ஒருவர் நினைக்கிறார்.

கொடுக்கும்போது குறைவாகக் கொடுக்க வேண்டும், பெறும்போது அதிகமாகப் பெற வேண்டும், அதுதான் புத்திசாலித்தனம் என்றே எப்போதும் இந்த சமூகம் உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. அது ஒரு பொருள் வாங்கினாலும் சரி, திருமணம் ஏற்பாடு செய்தாலும் சரி எல்லாம் ஒரே கணக்குதான். இதனால்தான், அன்பு என்பதைப் பற்றி இவ்வளவு அதிகமாக பேசுகிறார்கள், ஏனெனில் அன்பு இருந்தால் கணக்குகளைக் கடந்து செயல் செய்வீர்கள். யாரோ ஒருவர் உங்களை அன்பில் மூழ்கடிக்கும்போது, நீங்கள் கணக்குகளைக் கடக்கிறீர்கள். அப்போது “நான் என்ன பெறுகிறேன் என்பது முக்கியமில்லை, நான் என்ன கொடுக்கிறேன் என்பதுதான் முக்கியம்” என்ற நிலை உங்களிடம் உருவாகிறது. அந்த உணர்ச்சி தீவிரமாக இருக்கும்வரை அந்த உறவு அழகாக நடக்கிறது. தீவிரம் குறைந்து போனால், அதன்பிறகு அது வெறும் கொடுக்கல் - வாங்கல் தான். உங்கள் வியாபாரத்தில், உங்கள் சுற்றுப்புறத்தில் எண்ணற்ற மக்களிடம் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபடுகிறீர்கள். ஆனால் அவையெல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் ஒரு திருமண உறவில் கொடுக்கல் - வாங்கல் என்பது நிலையானது, அது தொடர்ந்து நிகழும். ஆகவே, இயல்பாகவே, யாரோ ஒருவர் உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை உணர்கிறீர்கள். இந்த உணர்வு உங்களுக்குள் உருவாகிவிட்டால், பிறகு அங்கே எதிர்ப்பு, எதிர்ப்பு, எதிர்ப்பு மட்டுமே தலைதூக்கி நிற்கிறது.

கொடுக்கும்போது குறைவாகக் கொடுக்க வேண்டும், பெறும்போது அதிகமாகப் பெற வேண்டும், அதுதான் புத்திசாலித்தனம் என்றே எப்போதும் இந்த சமூகம் உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. அது ஒரு பொருள் வாங்கினாலும் சரி, திருமணம் ஏற்பாடு செய்தாலும் சரி எல்லாம் ஒரே கணக்குதான்.

காதலின் அந்த அன்புக் கணங்களில் மட்டும்தான், ஒரு ஆணாலும், பெண்ணாலும் உண்மையாகவே இணைய முடியும். அந்தக் கணங்கள் இல்லை என்றாகிவிட்டால், உறவுநிலை மிகவும் கடினமாகிவிடுகிறது. பிறகு அந்த உறவுநிலையானது உடலின் தளத்திலும், உணர்ச்சி நிலையின் தன்மையிலும் மற்றும் பகிர்ந்து வாழ்வதிலும் ஒரு போராட்டமாக ஆகிறது. குறிப்பாக, உடல் தன்மையான உறவுநிலை இதில் சம்பந்தப்பட்டிருக்கும் காரணத்தால், மற்றவர் தன்னைப் பயன்படுத்திக் கொள்வதாக ஒருவர் மிக எளிதாக உணர வாய்ப்பிருக்கிறது. உறவில் பணம் மட்டுமோ அல்லது ஒரு வீடு மட்டுமோ சம்பந்தப்பட்டிருந்தால், “சரி, நீ வீட்டின் அந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொள், நான் வீட்டின் இந்தப் பகுதியைப் பயன்படுத்திக் கொள்கிறேன்” என்றும், “நீ சமையல் வேலை செய், நான் சம்பாதிக்கிறேன்” என்றும், ஏதோ ஒரு உடன்படிக்கைக்கு வரமுடியும். ஆனால் இங்கே உடல் சம்பந்தப்பட்டுவிட்ட காரணத்தால், தான் பயன்படுத்தப்பட்டதாக ஒருவர் மிக எளிதாக உணரும் வாய்ப்பிருக்கிறது. அப்போது முரண்பாடு மற்றும் எதிர்ப்பு தலைதூக்குகிறது.