கருணைக் கொலை செய்வது சரியா?
நான் ஒரு குடும்பத்துப் பெண். எனக்கு புற்றுநோய் முற்றிவிட்டது, பொறுக்க முடியாத வலி. இன்னும் சில மாதங்களில் மரணம் நிச்சயம். என் சிகிக்சைக்கு ஆகும் செலவைச் சமாளிக்க என் குடும்பத்தினர் மேற்கொள்ளும் போராட்டங்களைக் கண்டு மனது தவிக்கிறது. இந்தத் துன்பங்களிலிருந்து என்னை விடுவிக்க, விஷம் கொடுத்துக் கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்துவிட்டேன். அவர்கள் அழுகிறார்களே தவிர, கேட்பதாக இல்லை. கருணைக் கொலை சரியா, தப்பா?
 
 

Question:நான் ஒரு குடும்பத்துப் பெண். எனக்கு புற்றுநோய் முற்றிவிட்டது, பொறுக்க முடியாத வலி. இன்னும் சில மாதங்களில் மரணம் நிச்சயம். என் சிகிக்சைக்கு ஆகும் செலவைச் சமாளிக்க என் குடும்பத்தினர் மேற்கொள்ளும் போராட்டங்களைக் கண்டு மனது தவிக்கிறது. இந்தத் துன்பங்களிலிருந்து என்னை விடுவிக்க, விஷம் கொடுத்துக் கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்துவிட்டேன். அவர்கள் அழுகிறார்களே தவிர, கேட்பதாக இல்லை. கருணைக் கொலை சரியா, தப்பா?

சத்குரு:

உங்களைப் பெற்றபோது, உங்கள் அம்மா அனுபவித்த பிரசவ வலியைவிடவா வேறு வலி பெரிதானது? நீங்கள் பெற்றெடுத்தபோது தாங்கிய வலியைவிடவா இந்த வலி துன்பமானது? எல்லா வலிகளுக்கும் கருணைக் கொலைதான் தீர்வு என்றால், எந்தத் தாயும் உயிர் பிழைப்பது அரிது!

மரணத்துக்கே தயாரானவர் வலியைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?

உயிரை எடுக்கச் சொல்லி, உங்கள் எதிரியிடம் சொன்னால்கூட யோசிப்பாரே! அப்படியிருக்க, நோயை அடக்கி உங்கள் வாழ்நாளை நீட்டிப்பதற்கான திறமையைப் பெற்றிருக்கும் மருத்துவர்கள், எப்படி கருணைக் கொலைக்கு உடன்படுவார்கள்?

வலியை அடக்குவதற்கோ, உயிரை மீட்பதற்கோ வாய்ப்பே இல்லை என்று அவர்கள் முடிவு செய்தால், பலனற்ற சிகிச்சையை நிறுத்தலாம். ஆனால், பிழைக்கவே மாட்டார் என்று கருதப்பட்ட எத்தனையோ பேர் மீண்டு எழுந்ததற்கு சாட்சியாக இருந்தவர்களாயிற்றே அவர்கள்?

நீங்கள் வாழவேண்டும் என்று தீர்மானித்து, உங்கள் கணவரும், மகளும் விரும்பிப் போராடுகிறார்கள். உங்கள் மீது கருணைகொண்டு அவர்கள் விஷம் கொடுப்பதாக வைத்துக் கொண்டால்கூட, வாழ்நாள் முழுவதும் அந்த நினைவு அவர்களைத் துரத்தாதா?

போக வேண்டும் என்று ஆசைப்படுவது நீங்கள்! அதற்காக, வாழ வேண்டும் என்று பிரியப்படுகிற அவர்கள் மீது உங்கள் உயிரைப் பறித்துவிட்டதாக ஒரு குற்ற உணர்வை சுமத்தி ஏன் துன்பப்படுத்த நினைக்கிறீர்கள்?

உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நீங்கள் செய்யப்போவது இதுதானா? கனத்த இதயத்தோடு அவர்கள் மிச்ச வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உயிரை சிறைப்பிடித்து வைக்கும் தகுதியை உங்கள் உடல் இழந்த அடுத்த கணம் உங்கள் உயிர் உடலில் தங்காது. அந்தத் தருணத்துக்காக வலியைப் பொருட்படுத்தாமல், காத்திருங்கள். விஷம் கொடுத்து உயிரைப் பறிக்க வேண்டிய அவசியமில்லை. மரணத்துக்கே தயாரானவர் வலியைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?

சங்கரன்பிள்ளை உள்ளங்கையில் ஒரு பெரிய ஓட்டையுடன் டாக்டரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

"என்ன ஆயிற்று?" என்றார், டாக்டர்.

தனக்கென தேவைகள் அற்றவரால்தான் முழுமையான அன்பைச் செலுத்த முடியும்.

"வாழ்க்கை வெறுத்துப்போய் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். துப்பாக்கியை மார்பில் வைத்தேன். இரண்டே கால் லட்சம் செலவு செய்து பைபாஸ் பண்ணிக் கொண்டது நினைவுக்கு வந்தது. அந்த இதயத்தைப் போய்ச் சிதைப்பதா என்று வாய்க்குள் வைத்துக் கொண்டேன். அப்புறம்தான் ஞாபகம் வந்தது. சமீபத்தில், இருபதாயிரம் செலவு செய்து இரண்டு பல் கட்டிக் கொண்டேன். அதை உடைப்பதா என்று நெற்றிப் பொட்டில் வைத்தேன். காதுக்கு அவ்வளவு பக்கத்தில் வைத்து வெடிக்கப்போய், ஒரு வேளை காது கேட்காமல் போய்விட்டால்? எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாது என்றுதான் உள்ளங்கையில் வைத்துச் சுட்டேன். இந்த பாழும் உயிர் போகாமல் ஏமாற்றிவிட்டது!"

வேதனையோடு இருப்பவரிடம் வேடிக்கைக் கதை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.

வலிகளை ஏற்க மனமின்றி உயிர் பிரிய நினைப்பது இப்படித்தான் இருக்கிறது.

வலியே இன்றி உயிர் பிரிய வாய்ப்பில்லையா? இருக்கிறது.

எந்த வெளியார் உதவியும் இன்றி, உடலை எந்த விதத்திலும் வருத்தாமல், விரும்பிய நேரத்தில் உடலை நீத்து, உயிர் வெளிநடப்பு செய்ய வேண்டுமென்றால், அதற்கு யோகாவில் வழி இருக்கிறது. ஆனால், அந்த ஆற்றலைப் பெற சில சாதனைகள் செய்திருக்க வேண்டும்.

இத்தனைக் காலம் என்னென்னவோ தேவைகளுக்காகப் போராடிக் கொண்டே இருந்திருப்பீர்கள். அப்போது, மற்றவரை முழுமையாக உணர்ந்து கொள்ளக்கூட நேரம் ஒதுக்கியிருக்க மாட்டீர்கள். இனி உங்களுக்கு எந்தத் தேவைகளும் இல்லை.

தனக்கென தேவைகள் அற்றவரால்தான் முழுமையான அன்பைச் செலுத்த முடியும். நீங்கள் முற்றிலும் அன்பானவராக மாறிவிட இதைவிட சிறந்த வாய்ப்பு வேறு ஏது?

எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையில் அன்பைக் காட்டுவது எப்படி என்று கேட்காதீர்கள். அன்பு என்றால், எதையாவது செய்து காட்ட வேண்டும் என்றில்லை. உள்ளுக்குள் உணர்வில் முழுமையாக அன்பானவராக மாறிப் பாருங்கள். சுற்றியிருப்பவர்கள் அனைவர் மீதும் அன்பைக் குறைவின்றிப் பொழியுங்கள்.

உங்கள் மீது உண்மையிலேயே உங்களுக்குக் கருணை இருந்தால், நீங்கள் கொல்ல வேண்டியவை வேறு. கோபம், அகங்காரம், காழ்ப்பு, பகை உணர்வு என்று நீங்கள் கொல்லாமல் விட்ட எத்தனையோ உங்களுக்குள் இருக்கலாம். அப்படி நீங்களாகப் படைத்து வளர்த்து வைத்திருப்பதை எல்லாம் முழுமையான விழிப்பு உணர்வுடன் ஒவ்வொன்றாகக் கொன்று போடுங்கள். மிச்சமிருக்கப் போவது கடவுள் படைத்தது மட்டும்தான்.

உங்களை பிரமிக்க வைக்கும் அதன் அற்புத அழகு நீங்கள் தரிசிக்க வேண்டிய ரகசியம்!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1