கராத்தே, யோகா - எதைக் கற்றுக் கொள்வது?
யோகா செய்ய எத்தனிகும்போது, அது சம்பந்தப்பட்ட பல கேள்விகள் நம்முள் எழுவது சகஜம்தான். சத்குருவிடம் அப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே...
 
 

யோகா செய்ய எத்தனிக்கும்போது, அது சம்பந்தப்பட்ட பல கேள்விகள் நம்முள் எழுவது சகஜம்தான். சத்குருவிடம் அப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே...

Question:கராத்தே கற்றுக் கொள்ளலாமா அல்லது யோகா பயிற்சிகள் கற்றுக் கொள்ளலாமா என்று நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டையும் கற்றுக் கொள்வதற்கு எனக்கு நேரமில்லை. எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன்.

சத்குரு:

யோகாசனப் பயிற்சிகள் உங்களுக்கு புத்துணர்ச்சியையும் மனதில் சமநிலையையும் கொண்டுவரும். யோகா உள்நிலை வளர்ச்சி குறித்தது. இது உங்களைப் பற்றியது. ஆனால் கராத்தேவோ அல்லது குங்பூவோ, யாருடனாவது நீங்கள் சண்டை போட விரும்பும்போது மட்டுமே பயன்படும். வெளியிலிருந்து அச்சுறுத்தல் நிகழும்போது அவை தேவைப்படும். எனவே யோகா உள்சூழ்நிலை குறித்தது, கராத்தே வெளிசூழ்நிலை குறித்தது, இரண்டும் வெவ்வேறானவை. ஒன்று உங்கள் உடலை கெட்டிப்படுத்தும், இன்னொன்று உங்கள் உடலுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரும். அதனால், நீங்கள் எம்மாதிரியான பலன்களை எதிர்பார்க்கிறீர்கள், எது உங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதைப் பொருத்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

Question:ஒரு செய்தித்தாளில் தினசரி ஒரு யோகாசனப் பயிற்சி கற்றுத் தருகிறார்கள். நான் அதைப் பார்த்து ஆசனப் பயிற்சி கற்றுக் கொள்ளலாமா?

சத்குரு:

இது 1984ல் நடந்தது. பெங்களூரில் ஒரு பிரபல நரம்பியல் மருத்துவமனை இருந்தது. அந்த வருடத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட உள்நோயாளிகளில் 80 சதவிகிதம் பேர் மன நோயாளிகள். அதில் 8 சதவீதம் பேர் முறையற்ற யோகா பயின்றதால் பாதிக்கப்பட்டவர்கள். அந்த 8 சதவீதத்திலும் 95 சதவிகிதம் பேர் புத்தகத்திலோ அல்லது வேறெங்கோ படித்து குண்டலினி யோகா கற்க முயன்றவர்கள். குண்டலினி யோகா கற்றால் பறக்க முடியும், இருந்த இடத்திலிருந்தே பல வித்தைகள் செய்ய முடியும் என்று ஆசைப்பட்டு முயன்றவர்கள். எனவே குண்டலினி யோகாவோ அல்லது வெறும் ஆசனப் பயிற்சியோ முறைப்படி நேரில் கற்க வேண்டும். நேரில் கற்கும்போதே அவர்கள் பல தவறுகள் செய்கிறார்கள். அப்படியிருக்கும்போது, செய்தித்தாளிலோ அல்லது புத்தகத்திலோ படித்து கற்க முயன்றால் விபரீதங்கள் நிகழவே வாய்ப்புகள் அதிகம்.

Question:வாரத்தின் எல்லா நாட்களிலும் ஓயாத வேலை. சவால்விடும் இலக்குகள் என்று பரபரப்பான சூழலில் வாழும் இன்றைய இளைஞர்களின் வேகத்துக்கு, யோகா என்பது நிதானமானது. அவர்களுக்கு உடலும் மனமும் இளைப்பாற டிஸ்கொதே நடனம், ஜாஸ் இசை போன்றவைதானே உகந்தவை? யோகாவில் இளைஞர்களுக்கு எப்படி ஆர்வம் வரும்?

சத்குரு:

இளைஞர்கள் யோகாவுக்கு வருவது புதிய விஷயமல்ல. சொல்லப்போனால், யோகாவை ஆரம்பித்து வைத்ததே இளையவர்கள்தான்.

இன்றைய பரபரப்பான சூழலில், இளைஞர்களுக்கு உடல் சோர்வு, மனஅழுத்தம் இரண்டும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. அவற்றைத் தாற்காலிகமாக மறந்திருக்க மட்டுமே டிஸ்கொதே நடனம், ஜாஸ் இசை போன்றவை பயன்படுகின்றன. வார இறுதியில் கேளிக்கைகள் முடிந்து, திங்கட்கிழமை மீண்டும் அன்றாட வாழ்வுக்குத் திரும்புகையில், அவை துணைக்கு வருவதில்லை.

ஆனால் யோகா அப்படி இல்லை. அது ஒவ்வொரு நாளின் இருபத்து நான்கு மணிநேரமும் நம் உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் விலக்கிவைத்திருக்கும் சக்தி கொண்டது.

பதஞ்சலி யோக சூத்திரங்களை வழங்குகையில், 'இப்போது யோகா' என்ற முதல் வாக்கியத்துடன்தான் துவங்குகிறார்.

அதாவது மற்ற எல்லா முறைகளையும் செயல்படுத்திப் பார்த்துப் பலனில்லாமல் போய், யோகாவின் மேன்மைக்கு இணையில்லை என்பதைப் புரிந்துகொள்ள வந்திருப்பவர்களுக்கு, தன் சூத்திரங்களை அவர் வழங்குவதாக அந்த வாக்கியம் அமைந்துள்ளது.

இதை அனுபவப்பூர்வமாக இளைஞர்கள் உணர்ந்துவிட்டார்கள். ஊடகங்களும் புரிந்துகொண்டு விட்டன. எனவேதான் இளைஞர்கள் மத்தியில் இன்றைக்கு யோகா பிரபலமாகி வருகிறது!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1