காந்த்தி சரோவர் - சத்குருவிற்கு 'நாத ப்ரம்மா' கிட்டிய இடம்

ஈஷாவின் இமாலய யாத்திரையில் நாம் செல்லும் மற்றுமொரு தந்நிகரில்லா இடம், காந்த்தி சரோவர். முதல் யோக வகுப்பு நிகழ்ந்த இடம், ஆதிகுரு சிவன் மனம் கனிந்து தனது ஏழு சிஷ்யர்களுக்கு ஞானம் பகிர்ந்திட்ட இடம், சத்குருவிற்கு 'நாத ப்ரம்மா' அனுபவம் கிட்டிய இடம் என இவ்விடத்தைப் பற்றிய மேலும் விவரங்களுடன்...
 

ஈஷாவுடன் இமாலய பயணம் - பகுதி 2

ஈஷாவின் இமாலய யாத்திரையில் நாம் செல்லும் மற்றுமொரு தந்நிகரில்லா இடம், காந்த்தி சரோவர். முதல் யோக வகுப்பு நிகழ்ந்த இடம், ஆதிகுரு சிவன் மனம் கனிந்து தனது ஏழு சிஷ்யர்களுக்கு ஞானம் பகிர்ந்திட்ட இடம், சத்குருவிற்கு 'நாத ப்ரம்மா' அனுபவம் கிட்டிய இடம் என இவ்விடத்தைப் பற்றிய மேலும் விவரங்களுடன்...

சத்குரு:

காந்த்தி சரோவர் - அருள் ஏரி

சிவனும் பார்வதியும் காந்த்திசரோவர் ஏரிக்கரையில் வாழ்ந்ததாகவும், அப்போது கேதாரில் வாழ்ந்துவந்த பல யோகியரை அவர்கள் அவ்வப்போது சந்திக்க வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. 2013ம் ஆண்டு, இந்த ஏரிக்கரை உடைந்துதான், கேதாரில் வெள்ளம் ஏற்பட்டது. இன்று அதை காந்தி சரோவர் என்று அழைக்கிறார்கள், ஆனால் இது காந்த்தி சரோவர். 'காந்த்தி' என்றால் அருள், 'சரோவர்' என்றால் ஏரி. இது அருள் ஏரி. யோகக் கலாச்சாரத்தில் சிவனை ஒரு கடவுளாகப் பார்ப்பதில்லை. அவர் இந்த மண்ணில் வாழ்ந்த மிக உயர்ந்த மனிதர்; யோகக் கலாச்சாரத்தின் அஸ்திவாரம், யோகக் கலையை உருவாக்கிய மாபெரும் யோகி, ஆதி யோகி, அதாவது முதல் யோகி. அவரே ஆதிகுருவும் கூட. ஆதிகுரு சிவன் முதன்முதலில் யோக விஞ்ஞானத்தை தனது முதல் ஏழு சீடர்களுடன் பகிர்ந்து கொண்டது இந்த ஏரிக்கரையில் தான். இன்று சப்தரிஷிகள் என்று நாம் கொண்டாடும் அந்த ஏழு ஞானியருடன், உள்நிலை குறித்த தொழில்நுட்பத்தை, தெள்ளத் தெளிவாக, முறையாக சிவன் இங்கு தான் பகிர்ந்துகொண்டார்.

ஆதிகுரு சிவன் முதன்முதலில் யோக விஞ்ஞானத்தை தனது முதல் ஏழு சீடர்களுடன் பகிர்ந்து கொண்டது இந்த ஏரிக்கரையில் தான்.

பல ஆண்களுக்கு முன், ஒவ்வொரு வருடமும் ஓரிரு மாதங்களுக்கு நான் தனியே இமயமலையில் பயணம் மேற்கொள்வதுண்டு. அப்போது, அங்குள்ள நகரப் பேருந்துகளில் ஏறிக்கொள்வேன். மலைகளின் அழகை தவறவிடக்கூடாது என்பதால், நான் பேருந்தின் மேல்கூரையில்தான் பயணம் செய்வேன். அந்தப் பேருந்துகளில் சாமானியர், குடும்பத்தோடு வருபவர்கள் பயணம் செய்வது கடினம். ஹரிதுவாரிலிருந்து அதிகாலை 4 அல்லது 4.30க்கு கிளம்பினால் நேராக கௌரிகுண்ட் அல்லது பத்ரிநாத் போய்தான் அப்பேருந்துகள் நிற்கும். இடையில் உணவிற்கோ மற்ற இடைவெளிக்கோ கூட நிறுத்தமாட்டார்கள். மக்களை ஏற்றி இறக்குவதற்கு மட்டுமே நிறுத்துவார்கள். இதை 'உண்ணாவிரதப் பேருந்துகள்' என்று அழைத்தனர். ஓட்டுனர் தன் சப்பாத்தியை கையில் சுருளாக வைத்துக்கொண்டு, வண்டியை ஓட்டிக்கொண்டே சாப்பிட்டுவிடுவார். நாம் தான் 'உணவு இங்கேயோ, அல்லது அங்கேயோ?' என்று எண்ணி ஏங்கியபடி, கடைசியில் பயணம் முடியும்வரை காத்திருக்க நேரிடும்!

ஒரு நாள், நான் கௌரிகுண்ட் ல் இருந்து நெடுநேர நடை பயணத்திற்குப் பின் கேதாரை அடைந்தேன். அங்கு காந்த்திசரோவர் பற்றிக் கேள்விப்பட்டு, மதியம் 2-2.30 மணி அளவில் அந்த ஏரியைக் காணக் கிளம்பினேன். சுமார் ஒரு மணி நேரம் நடந்து, காந்த்தி சரோவரை அடைந்தேன். பனிபடர்ந்த மலைகள் சூழ, நடுவில் அமைந்திருந்தது அந்த ஏரி. பார்த்தவுடன் மெய்மறக்கச் செய்யும் கொள்ளை அழகு. கண்ணுக்கு எட்டிய வரை ஆள் அரவமற்ற நிசப்தம். அந்தச் சலனமற்ற நீர்நிலை, எவ்வித செடியும் இல்லா நீர்பரப்பு, சுற்றி இருந்த மலைகளின் பனிமுகடுகள், வரையப்பட்ட ஓவியமாய் அந்த சலனமற்ற நீரில் பிரதிபலித்துக் கொண்டிருக்க, என்னே ஒரு இடம்!

முதன்முறையாக யோக அறிவியல் பகிர்ந்துகொள்ளப்பட்ட காந்திசரோவரில், சத்குரு.

காந்த்தி சரோவர் - சத்குருவிற்கு 'நாத ப்ரம்மா' கிட்டிய இடம், Kantisarovar sadhguruvirku nadha brahma kittiya idam

நான் அங்கு அமர்ந்தேன். அவ்விடத்தின் அமைதி, நிசப்தம், தூய்மை என் விழிப்புணர்வை துளைத்தது. நான் ஏறி வந்த களைப்பு, அந்த உயரம், அவ்விடத்தின் ஆள் அரவமற்ற பேரழகு என்னை மூர்ச்சையாக்கியது. அந்த நிச்சலனத்தில் ஒன்றி, அங்கிருந்த ஒரு சிறு பாறையின் மீது, என்னைச் சுற்றி இருந்த எல்லா வடிவங்களையும் உள்வாங்கியவாறு, கண் திறந்தே அமர்ந்திருந்தேன். மெதுவாக அங்கிருந்த அனைத்தும் தத்தம் வடிவத்தை இழக்க, அவ்விடத்தில் நாதம், அதாவது ஒலி மட்டுமே இருந்தது. அங்கிருந்த மலைகள், அந்த ஏரி, சுற்றியிருந்த மற்ற அனைத்தும், ஏன், என் உடலும் கூட அதன் வழக்கமான வடிவத்தை இழந்து, ஒலியாக மாறியிருந்தது. எனக்குள் இருந்து ஒரு பாடல் ஒலித்தது: "நாத ப்ரம்மா விஷ்வ ஸ்வரூபா..."

நாத ப்ரம்மா விஷ்வ ஸ்வரூபா
நாத ஹி சகல ஜீவ ரூபா
நாத ஹி கர்ம நாத ஹி தர்ம
நாத ஹி பந்தன நாத ஹி முக்தி
நாத ஹி ஷங்கர நாத ஹி சக்தி
நாதம் நாதம் சர்வம் நாதம்
நாதம் நாதம் நாதம் நாதம்

சமஸ்கிருத மொழி கற்பதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன். அந்த மொழி எனக்குப் பிடித்திருந்தாலும், அதன் ஆழம் நான் அறிந்திருந்தாலும், அதைக் கற்பதை நான் தவிர்த்தேன். காரணம், அம்மொழியைக் கற்கும் அக்கணமே, நமது வேத சாஸ்திரங்களால் கவரப்பட்டு, நாம் அதைப் படித்தே தீருவோம். என் தெளிவான கண்ணோட்டத்தைக் கொண்டு, வேறு எதன் உதவியும் இல்லாமலேயே எல்லாவற்றையும் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. இதனால் எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் நான் கைவிடப்படவில்லை என்பதால், தேவையின்றி சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் கொண்டு என்னை நான் குழப்பிக் கொண்டதில்லை. அதனால்தான் நான் சமஸ்கிருத மொழி கற்பதை தவிர்த்து வந்தேன்.

நான் அங்கு அமர்ந்திருந்தேன். என் வாய் நிச்சயமாக மூடியே இருந்தது, என் கண்கள் திறந்திருந்தது. அப்போது இந்தப் பாடல், மிக சப்தமாக என் குரலில் ஒலிப்பதைக் கேட்டேன். என் குரலில் அப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, அதுவும் சமஸ்கிருதத்தில். தெள்ளத் தெளிவாக, மிக சப்தமாக எனக்கு அப்பாடல் கேட்டது. சுற்றியிருந்த மலைகள் அனைத்தும் அப்பாடலைப் பாடுவதைப் போல, அவ்வளவு சப்தமாக ஒலித்தது. என் அனுபவத்தில் அனைத்துமே நாதமாக (ஒலியாக) மாறியிருந்தது. அப்போதுதான் இப்பாடலை நான் உணர ஆரம்பித்தேன். இப்பாடலை அந்நேரத்தில் நான் சிந்தித்து இயற்றிக் கொண்டிருக்கவில்லை, முன்பே அதை நான் எழுதியிருக்கவும் இல்லை. அக்கணம் அதுவாகவே என்னுள் தோன்றியது. பாடல் முழுவதும் சமஸ்கிருதத்தில் வெளிவந்தது. இந்த அனுபவம் என்னை ஆட்கொண்டது.

சிறிது நேரத்திற்குப் பின், மெதுவாக அனைத்துமே தத்தம் வடிவத்தை ஏற்றன. என் விழிப்புணர்வின் வீழ்ச்சி, நாதமாக உணரும் நிலையில் இருந்து ரூபமாக உணரும் நிலைக்கு என் விழிப்புணர்வு தாழ்ந்தபோது, என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

நாத பிரம்மா என்றால், இவ்வுலகை வடிவமாய் உணராமல் ஒலியாக உணர்வது என்று பொருள். இன்றைய நவீன விஞ்ஞானம், ‘ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் உண்டு; ஒவ்வொரு வடிவத்திற்கும் அதை ஒத்த ஒலி உண்டு’ என்கிறது. இது ஒரு அறிவியல் உண்மை. இன்னும் சொல்லப்போனால் ‘பொருள்நிலை’ (திடநிலை) என்று எதுவும் கிடையாது, அனைத்துமே அதிர்வுகளாய் தான் இருக்கிறது என்றே விஞ்ஞானம் சொல்கிறது. எங்கெல்லாம் அதிர்வு இருக்கிறதோ அங்கு அதைத் தோற்றுவிக்கும் ஒலி நிச்சயமாய் இருக்கவேண்டும். அதனால்தான் யோக அறிவியல், ‘இப்பிரபஞ்சமே ஒலியின் வெளிப்பாடு’ என்று சொல்கிறது.

இந்தப் பாடலுடன் முழுமையாக ஒன்றி இருந்தால், அதற்கு ஒரு சக்தி இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். எவ்வித தயக்கமோ, தடையோ இன்றி இப்பாடலில் நீங்கள் முழுமையாக ஒன்றிவிட்டால், உங்களை முழுவதுமாக கரைத்துவிடக் கூடிய சக்தி இப்பாடலுக்கு உண்டு!


குறிப்பு: ஈஷா ஏற்பாடு செய்யும் ஈஷாவுடன் இமாலயம் வரும் செப் 15-25 நிகழ உள்ளது. முன்பதிவுகள் துவங்கிவிட்டன. தொடர்புக்கு: 94 88 123 777/111 வலைதளம்: www.sacredwalks.org

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1