கே: சத்குரு, ஒரு தரிசனத்தில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்றால், என்னை நடத்துவது போல எல்லாவற்றையும் நடத்தவேண்டும் என்று சொன்னீர்கள். சத்குரு நீங்கள் கருணாவதாரம், ஆனால் என்னுடைய வீட்டில் இரக்கமில்லாத ஒரு ஜந்து இருக்கிறது. அவரிடம் நான் உங்களைப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது?

சத்குரு: எத்தனை ஆண்டுகள் கழிந்த திருமணத்தில், இந்த பரிணாம வளர்ச்சி நடக்கிறது? இல்லை, ஒருவேளை பரிணாம வளர்ச்சி பின்னோக்கி நடக்கிறதா? இவர் ஒரு சமயத்தில், நிச்சயம் ஒரு அற்புதமான, காதலான மனிதராக இருந்திருப்பார். எத்தனை ஆண்டு திருமணத்திற்கு பிறகு இவர் மிகவும் மோசமான ஜந்துவாக மாறினார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் அப்படி மாறியதில், உங்களுடைய பங்களிப்பு எவ்வளவு என்றும் தெரியவில்லை. குறிப்பாக, அவர் ஒரு மோசமான ஜந்துவாக இருந்தால், அது உங்களுடைய புரிதல். உங்கள் வீட்டில், உங்கள் அலுவலகத்தில், எங்கே இருந்தாலும், இப்படி ஒருவர் இருப்பாரென்றால், நீங்கள் அவரை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்ப்பது, அது அவர்களைப் பற்றியது இல்லை, உங்களைப் பற்றியது.

உங்கள் வாழ்வின் உச்சநிலை எது?

உங்களுடைய உடல், மனம், உணர்வு இதை எல்லாம் இனிமையாக வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கசப்பாக வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? இதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அந்த மோசமான ஜந்து கூட என்னைப் போலதான் என்று பாருங்கள். அவருடைய போதனைகளை கேளுங்கள் என்றோ, அவர் கூறும் பயிற்சிகளை செய்யுங்கள் என்றோ நான் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம், நீங்கள் என்னை ஒருவிதமான மதிப்பு மரியாதையோடு, பக்தியோடு, அன்போடு என்று உங்கள் உணர்ச்சி எதுவாக இருந்தாலும், அந்த உணர்வோடு நீங்கள் பார்த்திருந்தால், அனைத்தையும் அதே உணர்வோடு பாருங்கள் என்று சொல்கிறேன். உங்களுக்கு என்று ஒரு உடல், மனம், உணர்ச்சி, சக்தி இவை எல்லாம் இருக்கின்றன. உங்களது உணர்ச்சி நிலையைப் பற்றி நாம் இப்பொழுது பேசிக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் உங்கள் உணர்ச்சியளவில், ஒரு இனிமையான நிலையை எட்டினால் அதுவே உங்கள் வாழ்வின் உச்ச நிலை. அன்பு, பக்தி, கருணை, இப்படி ஏதோ ஒன்றின் மூலமாக நீங்கள் அதை எட்டினால் அதில் இருந்து நீங்கள் கீழே இறங்கக்கூடாது. அதையும் தாண்டி எப்படி மேலே உயர்வது என்று பார்க்க வேண்டும்.

உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இல்லை. உங்கள் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. திடீரென்று யாரையோ பார்த்தால், அவர் அற்புதமாக தெரிவார். அவர் அழகாக இருக்கிறார்

நான் என்ன சொல்கிறேன் என்றால், உங்களுக்கு இருந்த மிகவும் உயர்ந்த இனிமையான உணர்ச்சி எதுவோ அதை அடிக்கோடாக்க வேண்டும். ஏன் அதில் இருந்து கீழே வருகிறீர்கள்? ஒருவேளை அதுபோன்ற ஒரு உணர்வு உங்களிடம் இல்லையென்றால், நான் உங்களுக்கு என்ன சொல்வேன்? உங்கள் வாழ்வில் நீங்கள் உணர்ந்திருக்கும் மிகவும் இனிமையான உணர்ச்சி என்னவென்றால், அது உங்களுடைய குழந்தை. சரி, எல்லாவற்றையும் உங்கள் குழந்தையாக பாருங்கள் என்று சொன்னோம். ஒரு சமயத்தில் அதை உங்களிடம் சொன்னோம். பின்னர் நான் பார்க்கும்போது, இங்கு நீங்கள் என் முன்னே உட்கார்ந்தபொழுது பரவச கண்ணீரோடு, அன்பு கலந்த கண்ணீரோடு உட்கார்ந்து இருந்தீர்கள். அப்போது நான், நீங்கள் இப்பொழுது என்னை எப்படி பார்க்கிறீர்களோ, அதேபோல் எல்லாவற்றையும் பாருங்கள் என்று சொன்னேன். ஏனென்றால், இது உங்கள் உடல், மனம், உணர்ச்சி, உங்கள் உயிரையே இனிமையாக, அற்புதமாக மாற்றும். இது அவரைப் பற்றியது இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவர் கடினமானவராக இருக்கிறார் என்றால், உங்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நரகத்துக்கு போனாலும் அற்புதமாக இருப்பீர்கள், ஆமாம். ஏனென்றால், யாரும் உங்களுக்கு இந்த உத்தரவாதம் வழங்கவில்லை. நான் உங்களுக்கு, சொர்க்கத்திற்கு டிக்கெட் வாங்கி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறேனா? நான் உங்களை தொடர்ந்து அச்சுறுத்தியிருக்குறேன். எல்லாமும் உங்களுக்கு இங்கேயே நடக்கும் என்று சொல்லியிருக்கிறேன். இது உங்களுடைய தன்னிலை மாற்றம் என்று புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் டீன் ஏஜ் சமயத்தில் நீங்கள் வாசித்த காதல் கதைகள், அதில் வரும் விஷயங்களை கற்பனை செய்தீர்கள்.

முதலில், உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இல்லை. உங்கள் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. திடீரென்று யாரையோ பார்த்தால், அவர் அற்புதமாக தெரிவார். அவர் அழகாக இருக்கிறார். அவர் அற்புதமாக இருக்கிறார். அனைத்தும் செய்கிறார் என்று உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இல்லை இல்லை, அவர் என்ன செய்தாலும் சரி, உங்களை நீங்கள் அழகாக மாற்றிக் கொண்டால், இப்பொழுது அவர் மோசமான விஷயங்கள் செய்தாலும் நீங்கள் அற்புதமானவராக இருப்பீர்கள், இது வேறு. அவர் மோசமான விஷயம் செய்கிறார் என்று உங்களுக்கு தெரியும், அப்போதும் நீங்கள் அற்புதமாக இருந்தால், இது அற்புதமானது. அவர் மோசமான விஷயம் செய்யும்போது, அழகான விஷயங்கள் செய்வதாக நீங்கள் நினைத்தால், இது முட்டாள்தனமான அபத்தம்.

காட்டு யானையும், பக்தியும்

இந்திய ராணுவத்தில் சேவை செய்து கொண்டிருந்த ஒருவர் என்னிடம் இந்த கதையை சொன்னார். அவர்கள் வடகிழக்கு பகுதியில் பணி அமர்த்தப்பட்டிருந்தார்கள். அங்கு யானைகள் அதிகம். அந்த ராணுவப் படையின் தலைவர் 18ல் இருந்து 20 பேருடைய படையை காட்டு வழியாக அணிவகுத்து போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள் ஒரு பெரிய ஆண் யானையை பார்த்தார்கள், எல்லோரும் பின்னால் நகர்ந்தார்கள். எல்லோரிடமும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருந்தன.

அதை வைத்து 100, 200 மீட்டர் தூரத்தில் இருந்து அவர்களால் சுட்டு வீழ்த்த முடியும். ஆனால், அவர்கள் அதற்காக வரவில்லை. அதனால் பின் வாங்கினார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஒரு தென்னிந்திய மனிதருக்கு நடந்தது. திடீரென்று, ராணுவ படையில் சார்ஜியெண்ட் பதவியில் இருந்த ஒரு தமிழர், ஆயுதங்கள் அனைத்தையும் கீழே போட்டுவிட்டு, "கணபதி வந்துவிட்டார்" "கணேசா கணேசா" என்று ஏதோ மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். ஓடிப்போய் அந்த யானை அருகில் சென்று, வெறும் 50 அடி தூரத்தில் போய் மண்டியிட்டு, இதேபோல் சத்தமாக கணபதி மந்திரம் சொல்ல ஆரம்பித்தார். அந்த யானை, யார் இந்த முட்டாள், எனக்கு பிடிக்காத எல்லா பெயரையும் சொல்லி நம்மை அழைக்கிறானே என்று அப்படியே அவரை பார்த்தது. இவை எல்லாம் ஏதோ ஒரு அதிசயம் போல நடந்துகொண்டு இருந்தது.

இந்த யானை அப்படியே நின்றுகொண்டு இருக்கிறது. இவர் மண்டியிட்டு மந்திரம் சொல்லிகொண்டு இருக்கிறாரே என்று, எல்லோரும் பார்த்துகொண்டு இருக்க, அந்த யானை வேகமாக நகர்ந்தது. 2 அல்லது 5 வினாடிக்கும் குறைவான நேரத்தில், அவர் முன்வந்து அப்படியே காலால் அவரை நசுக்கி விட்டு திரும்பி போய்விட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கண் முன்னே அவர் மிதிக்கப்படுவதை பார்த்து சிலர் ஆயுதங்களை எடுத்தார்கள். எனக்கு தெரிந்த மனிதர், அந்த அணி பொறுப்பாளராக இருந்ததால் அவர்களை சமாதானப்படுத்தினார். ஏனென்றால், ஏற்கனவே இவர் ஒரே மிதியில் இறந்துவிட்டார்.

இதை நான் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால், காட்டு யானை, நீங்கள் அவரை கடவுள் என்று சொன்னதால், உங்களுக்கு இனிமையான விஷயங்களை செய்யாது. அவரை நீங்கள் கணபதி என்று அழைத்து அவரை வழிபடப் பார்த்தாலும், நீங்கள் சொல்வதை அவர் கேட்கமாட்டார், அவர் செய்ய வேண்டியதை செய்வார். அதுபோல உங்கள் வீட்டில் இருக்கும் ஜந்து, அவர் என்ன செய்ய வேண்டுமோ, அவருடைய குணம் எதுவோ அப்படி செய்வார். நான் பேசுவது உங்களைப் பற்றி மட்டும்தான். நீங்கள் வாழ்க்கையை எப்பொழுதும் ஒரு உறவுமுறையாக பார்க்கிறீர்கள். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பிறப்பதற்கு முன்னால், ஏன் நீங்கள் பிறக்கும் சமயத்தில் கூட, உங்களுக்கும், உங்கள் தாய்க்கும் ஒரு உறவுமுறை இருந்தது இல்லை.

தேவைகள் உறவுமுறைகளை தீர்மானிக்கும்

மக்கள் இதை விரும்பப் போவதில்லை. எனினும், தயவு செய்து இதை பாருங்கள். உங்களிடம் ஒரு உறவுமுறை இருந்ததில்லை. இருப்பு மட்டுமே இருந்திருக்கிறது. உங்கள் தேவைகளால், அவர்களை உங்கள் உறவாக பார்த்தீர்கள். அப்பொழுது உறவுமுறை ஆரம்பித்தது. அதனால் அவர்களை நோக்கி நீங்கள் சென்றீர்கள். அவர்களை உங்கள் பிழைப்பின் ஆதாரமாக பார்த்தீர்கள். சீக்கிரம் இதை உணர்ந்தீர்கள். ஒரு குழந்தை பிறந்தவுடன், வேறு ஒரு ஆணிடமோ, பெண்ணிடமோ கொடுத்து, அந்த குழந்தையின் தேவைகளை கவனிக்கும்படி செய்தால், உடனே குழந்தை அவர்களை தேடிதான் போகும். அக்குழந்தை, நீங்கள் பெற்ற தாய் என்பதால்தான் வருகிறது என்கிற எண்ணம் சரியானதல்ல. தேவைகளை பொறுத்தே உறவுமுறைகள் அமைகின்றன. அது இல்லையென்றால் வெறும் இருப்பு மட்டுமே வியாபித்து இருக்கிறது.

ஒரு குழந்தை பிறந்தவுடன், வேறு ஒரு ஆணிடமோ, பெண்ணிடமோ கொடுத்து, அந்த குழந்தையின் தேவைகளை கவனிக்கும்படி செய்தால், உடனே குழந்தை அவர்களை தேடிதான் போகும். அக்குழந்தை, நீங்கள் பெற்ற தாய் என்பதால்தான் வருகிறது என்கிற எண்ணம் சரியானதல்ல. தேவைகளை பொறுத்தே உறவுமுறைகள் அமைகின்றன

இந்த இருப்பு, விழிப்புணர்வாக முடியும். அபாரமான இந்த இருப்பில், ஒரு திறந்த நிலையில் நாம் வாழ முடியும். இல்லையென்றால், தொடர்ந்து இந்த சர்க்கஸை செய்துகொண்டே இருக்கலாம். ஆரம்பத்தில் உங்கள் தாய் உங்களுக்கு எல்லாமுமாக இருந்தார். அவர் ஒரு அற்புதமான உயிராக இருந்தார். அப்புறம் வளர்ந்து இளவயது வந்த பிறகு ஒரு ஆணை பார்த்தால், அவர் ரொம்ப அற்புதமான உயிராக இருந்தார். அதில் தாய் நடுவில் வந்தார், உடனே தாயை வெறுக்க ஆரம்பித்தீர்கள். அதன்பின் ஒரு ஆண் வந்தார், மிக அழகாக இருந்தார். பின்பு அவர் ஒரு மோசமான ஜந்துவாக மாறிவிட்டார். அப்படி இல்லையென்றாலும், நீங்கள் அப்படி நினைக்க ஆரம்பித்து விட்டீர்கள். இப்பொழுது அவர் ரொம்ப கொடூரமான மனிதர் என்று நினைக்கிறீர்கள். இது அப்படியே தொடர்கிறது.

நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். அழகு, அசிங்கம் இரண்டையும் நீங்கள் உருவாக்குகிறீர்கள். நான் உங்களை இப்படி உருவாக்க சொல்லவில்லை. அவர் என்ன செய்து கொண்டிருந்தாலும், அது அற்புதம் என்று நினைக்க சொல்லவில்லை. அது முட்டாள்தனமானது. எல்லாவற்றிலும், உங்களுடைய உயர்ந்த அனுபவம் எதுவோ, அதை அடிக்கோடாக செய்தால், அதுதான் உங்கள் வளர்ச்சி. நீங்கள் இந்த பரமபதம் விளையாட்டு விளையாடி இருப்பீர்கள். இப்படியே மேலே போய் கொண்டிருப்பீர்கள். பாம்பு கடி வாங்கி கீழே வந்துவிடுவீர்கள், பின்னர் ஏணியில் ஏறுவீர்கள். இந்த பரமபதம் விளையாடும்போது உங்கள் நோக்கம், ஒரு ஏணியில் ஏறிவிட்டால் மறுபடியும் கீழே வர விரும்பமாட்டீர்கள். நீங்கள் ஒரு பாம்பு கடி வாங்க விரும்பமாட்டீர்கள். இன்னொரு ஏணி, இன்னொரு ஏணி என்று, மேலே போக விரும்புவீர்கள். உயிரின் இயற்கையான வெளிப்பாடு இது.

அதனால் ஒரு இனிமையான நிலையை உங்களுக்குள் நீங்கள் உணர்ந்துவிட்டால், அதை கீழே கொண்டு வராதீர்கள். அதுதான் அடிக்கோடாக இருக்க வேண்டும். அடுத்தது இன்னும் மேலானதாக இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் பரவச கண்ணீரோடு என் முன் அமர்ந்திருக்கிறீர்கள். இதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும். இதற்கு கீழே போகாதீர்கள். எல்லாவற்றிலும் இதுபோல் இருக்க பார்த்து கொள்ளுங்கள். இந்தளவுக்கேனும் நடைபெறுவது போல் பார்த்துகொள்ளுங்கள். இது தொடர்ந்து நடந்தால், அப்புறம் நிச்சயம் இன்னொரு ஏணி உங்களுக்கு வரும். சிறிது காலம்தான். கீழே வராதீர்கள். அவ்வளவுதான் நான் சொன்னேன். அவர் பாவம். தயவு செய்து அவரை மோசமான ஜந்து என்று சொல்லாதீர்கள்.

ஒருமுறை இப்படி நடந்தது. சங்கரன்பிள்ளை, தனது மனைவி தன்னை ஏமாற்றுகிறார் என்று நினைத்து, ஒரு துப்பறிவாளரை பணியமர்த்தி, அவருக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்று சொன்னார். இந்த துப்பறிவாளர் அவர் மனைவியை பின்தொடர்ந்து சென்றார். அவர் ஒரு பூங்காவிற்கு சென்றார். அங்கு ஒரு ஆண், இருக்கையில் அமர்ந்திருந்தார். இவரைப் பார்த்தவுடன், ஓடிப் போய் கட்டி அணைத்தார், கையை பிடித்துக்கொண்டார். இருக்கையில் உட்கார்ந்து ஆனந்தமாக பேசி சிரித்துக்கொண்டு இருந்தார். இந்த வீடியோவை எடுத்த துப்பறிவாளர், ஒரு சில மணி நேரத்தில், அதை சங்கரன்பிள்ளையிடம் ஆதாரமாக கொடுத்தார். சங்கரன்பிள்ளை, அந்த வீடியோவை பார்க்க ஆரம்பித்தவுடன், இல்லை, இதை என்னால் நம்பமுடியாது, நம்பமுடியாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

துப்பறிவாளர் திகைத்து போய், உங்களால் எதை நம்ப முடியவில்லை? இந்த வீடியோ இப்பொழுது எடுத்ததுதான் என்றார். அதற்கு சங்கரன்பிள்ளை, "அது இல்லை முட்டாளே! என் மனைவி இவ்வளவு சந்தோஷமாக இருக்கக்கூடிய ஒருவர் என்று என்னால் நம்ப முடியவில்லை” என்று சொன்னார். அதனால், 15 நாட்கள் முடிந்த பிறகு இவர் வேறு எங்கோ கிளம்பி போகும்போது, அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்று உணருவீர்கள். உங்களுக்கு நீங்களே இதை செய்துகொள்ளாதீர்கள்.