கால்பந்திற்கும் ஈடுபாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
பொதுவாக வேறெந்த விளையாட்டைக் காட்டிலும், கால்பந்து விளையாட்டிற்கு ரசிகர்கள் வெளிப்படுத்தும் ஈடுபாடும் ஆரவாரமும் மிக அதிகம். அப்படியொரு துடிப்பும் வேகமும் நிறைந்த விளையாட்டு அது! விவேகானந்தர் துவங்கி இன்று சத்குருவும் அவ்விளையாட்டின் சிறப்பை எடுத்துரைக்கிறார். அப்படியென்ன வித்தியாசம் உள்ளது இந்த விளையாட்டில்..?
 
 

பொதுவாக வேறெந்த விளையாட்டைக் காட்டிலும், கால்பந்து விளையாட்டிற்கு ரசிகர்கள் வெளிப்படுத்தும் ஈடுபாடும் ஆரவாரமும் மிக அதிகம். அப்படியொரு துடிப்பும் வேகமும் நிறைந்த விளையாட்டு அது! விவேகானந்தர் துவங்கி இன்று சத்குருவும் அவ்விளையாட்டின் சிறப்பை எடுத்துரைக்கிறார். அப்படியென்ன வித்தியாசம் உள்ளது இந்த விளையாட்டில்..?

சத்குரு:

"பிரார்த்தனைகள் செய்வதை விட கால்பந்து விளையாடும்போது நீங்கள் தெய்வீகத்திற்கு மிக அருகில் செல்லமுடியும்" என்று ஒருமுறை சொன்னார் விவேகானந்தர். அது உண்மைதான். ஏனெனில், முழு ஈடுபாடு இல்லாமல் நீங்கள் கால்பந்து விளையாட முடியாது. கால்பந்து விளையாடும்போது, அதில் தனிப்பட்ட நோக்கம் எதுவுமில்லை, வெறும் ஈடுபாடு மட்டும்தான் உள்ளது. நீங்கள் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதெல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு, வருடக்கணக்காக உங்களுக்குப் பயிற்சியும் கொடுத்தாகிவிட்டது. இப்போது அங்கே வெளிப்பட வேண்டியது... அந்த விளையாட்டை நிர்ணயிப்பது... உங்கள் ஈடுபாடு மட்டும்தான். வேறெதுவுமல்ல.

அந்த வேகத்தில், அத்தனை போராட்டத்திற்கும் நடுவே பந்தை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்த வேண்டுமென்றால் அதற்கு அதீத திறமை தேவைப்படும். உங்களையே நீங்கள் மறந்துபோகும் அளவிற்கு அதில் உங்களின் ஈடுபாடு இருக்கவேண்டும்.

பிரார்த்தனை என்று எடுத்துக்கொண்டால்... அதைச் செய்து பழக்கமான சிலகாலத்தில், பற்பல வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே அதைச் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். அதனாலேயே நம் நாட்டில் வழிபாடுகளை மிக நுணுக்கமான செயல்முறைகளாக வடிவமைத்தனர். வார்த்தைகள் அளவில் மட்டுமல்ல, இன்னும் அதோடு பலவற்றை சேர்த்துச் செய்யும் வகையில் அதை அமைத்தார்கள். எப்படியென்றால்... கவனமில்லாமல், ஈடுபாடில்லாமல் அதை நீங்கள் சரியாய் செய்யமுடியாது. ஆம், வாய்வார்த்தைகளில் செய்யும் எளிமையான வழிபாடுகளை மக்கள் பின்பற்றும் விதத்தைத்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மவர்கள் பார்த்து வந்திருக்கிறார்களே! மக்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் வழிபாடுகளை பல நுணுக்கங்கள், செய்முறைகள் கொண்ட ஒன்றாக வடிவமைத்தனர்.

அதை சிறிதளவும் பிசகாமல் செய்யவேண்டும், இல்லையெனில் பெரும் பாவம், குற்றம் என்று வழங்கினர். இந்த அளவிற்கு நுணுக்கமான ஒன்றைச் செய்யவேண்டும் என்றால், அதைத்தவிர்த்து அந்நேரத்தில் நீங்கள் வேறெதிலும் ஈடுபடமுடியாது. அந்த வகையில், 'வேறெதிலுமே கவனம் போகாத விதமான ஈடுபாட்டை' கால்பந்து விளையாட்டு வழங்குகிறது. 'இதை செய்யலாம்... இதோடு சேர்த்து அதையும் செய்யலாம்', என்பதான எண்ணமே உங்களுக்கு எழாத வகையில் ஈடுபாடு முழுமையாக இருக்கும். காரணம், இதனுடன் சேர்த்து நீங்கள் வேறொன்றை செய்யவே முடியாது. அந்தளவிற்கு முழுமையான ஈடுபாடு இதில் தேவைப்படும்.

அறுவைசிகிச்சையின் போது ஒரு அறுவைசிகிச்சை நிபுணர் எத்தனை இலாவகமாக தன் கத்தியைப் பயன்படுத்துவாரோ, அதே நுட்பத்தோடு கால்பந்து விளையாட்டில் ஒரு வீரர் தன் காலைத் துல்லியமாய் பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த விளையாட்டில் நீங்கள் பந்தைக் கையாளப் பயன்படுத்துவதும், அதிவிரைவாக நகரப் பயன்படுத்துவதும் கால்கள் மட்டுமே. அதுமட்டுமல்ல, இவையிரண்டையும் செய்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் உங்களைத் தடுப்பதற்கு தங்களால் முடிந்தவற்றை எல்லாம் செய்யும் பத்து பேரையும் நீங்கள் தவிர்த்துச் செல்லவேண்டும். தடுப்பவர்களைத் தவிர்த்து, பந்தை எவரிடமும் இழந்திடாமல் கால்களால் தட்டிச்செல்லும் அதே சமயத்தில் முழு வேகத்திலும் ஓடவேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு உங்கள் பாதம் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கத்தியைப் போல் திறமையுடன் செயல்படவேண்டும்... ஏனெனில், அந்த வேகத்தில், அத்தனை போராட்டத்திற்கும் நடுவே பந்தை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்த வேண்டுமென்றால் அதற்கு அதீத திறமை தேவைப்படும். உங்களையே நீங்கள் மறந்துபோகும் அளவிற்கு அதில் உங்களின் ஈடுபாடு இருக்கவேண்டும்.

நீங்கள் முழுஈடுபாட்டோடு ஒரு செயலில் ஈடுபடும்போது, அங்கு செயல் மட்டுமே இருக்கும். மனதைப் பற்றிய கவனம் அறவே இருக்காது, மனம் வேறெங்கோ இருக்கும். அதனால்தான் கால்பந்துப் போட்டியில் வீரர்கள் அந்நிலையை வெகு சுலபமாக எட்டிவிடுகிறார்கள்... அனைத்தும் அந்த விளையாட்டில்... அந்த ஒன்றிலேயே நிலைத்திருக்கிறது. கால்பந்துப் போட்டியில் வெளிப்படும் இந்தத் தீவிரம்தான் உலகில் இத்தனை மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. அதில் ஒருவர் தன் எல்லைகளைக் கடந்து செல்கிறார் - இது உண்மையில் ஆன்மீக நிலைமாற்றம் இல்லையென்றாலும், தன் எல்லைகளை ஒருவர் இந்தளவிற்குக் கடந்திடும் நிலை, அந்தத் தீவிரம், பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்கிறது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1