கல்லூரியில் என்ன பாடத்தைத் தேர்ந்தெடுப்பது?
பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, கல்லூரி நோக்கிச் செல்லக் காத்திருக்கும் இளைஞர் கூட்டத்தில் நிலவும் ஒரே கேள்வி, அடுத்து என்ன படிப்பது? என்பதுதான். அம்மாவின் ஆசைப்படி எஞ்சினியரிங் படிப்பதா? அப்பாவின் ‘டாக்டர்’ கனவை நிறைவேற்றுவதா? முன்னாள் லயோலா கல்லூரி முதல்வரான அருட்தந்தை ஜோ அருண் அவர்கள் சத்குருவுடன் கொண்ட இந்த உரையாடல், மாணவர்களுக்கு தெளிவைத் தரும்...
 
 

பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, கல்லூரி நோக்கிச் செல்லக் காத்திருக்கும் இளைஞர் கூட்டத்தில் நிலவும் ஒரே கேள்வி, அடுத்து என்ன படிப்பது? என்பதுதான். அம்மாவின் ஆசைப்படி எஞ்சினியரிங் படிப்பதா? அப்பாவின் ‘டாக்டர்’ கனவை நிறைவேற்றுவதா?

முன்னாள் லயோலா கல்லூரி முதல்வரான அருட்தந்தை ஜோ அருண் அவர்கள் சத்குருவுடன் கொண்ட இந்த உரையாடல், மாணவர்களுக்கு தெளிவைத் தரும்...

ஃபாதர் ஜோ: எங்கள் ‘லயோலா’ கல்லூரியில், நிறைய பாடங்கள் உள்ளன, நான் அட்மிஷன் ஆபிசராகவும் இருக்கிறேன் அந்த காலேஜ்ல... (சத்குரு சிரிக்கிறார்).

சத்குரு:
யாரும் இலக்கியம் எல்லாம் படிக்க வர மாட்டார்களே...

ஃபாதர் ஜோ: தமிழ்-ஆங்கில இலக்கியம், தத்துவம் (philosophy) கலைப் பண்பாடு அல்லது நுண் கலை (Fine arts) இந்தப் பாடங்களுக்கெல்லாம் நூறு சீட் இருக்கிறபோது, நாற்பது பேர்தான் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் காமர்ஸ் பாடத்திற்கு, ஒவ்வொரு வருடமும் பன்னிரெண்டாயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. விஷுவல் கம்யூனிக்கேஷனுக்கு பதினெட்டாயிரம் வருகின்றன. இது ஒரு ஆரோக்கியமான போக்கா?

சத்குரு: இதற்கு அடிப்படையான காரணம் நம்மிடம் ஏற்பட்டுள்ள வறுமை. பொருளாதாரத்தில் வறுமைநிலை ஏற்பட்டதால், அவர்கள் தங்கள் மனத்தை விரிவுபடுத்துவதற்காக படிக்கச் செல்வதில்லை, தங்கள் குணத்தை வளர்ப்பதற்காகப் படிக்கச் செல்லுவதில்லை, எப்படியோ ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் படிக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலை மாற வேண்டுமென்றால், நம் பொருளாதார சூழ்நிலை கொஞ்சம் மேலெழ வேண்டியுள்ளது. அப்போதுதான் முறையான கல்வி சாத்தியமாகும். அப்படியே நம் பொருளாதாரம் உயர்ந்தாலும், மனநிலையில் நாம் ஆழமாக வேரூன்றி வளர்த்துள்ள ‘பொருளாதாரமே பிரதானமானது’ என்ற எண்ணத்தை அகற்ற வேண்டும். பொருளாதாரத்தை, நமது சமூக சூழ்நிலையில் மட்டும் இல்லாமல், மனநிலையிலும் முக்கியமானதாக செய்துவிட்டால் படிப்பவர்கள் எல்லோரும் பொருளாதாரத்திற்காகத் தானே படிப்பார்கள்?
“ஏதோ ஒரு வேலை கிடைக்கும், இதப் படிச்சா வேலை கிடைக்கும்,” என்ற கணக்கில்தான் கல்வியே நடைபெறும். இந்தச் சூழ்நிலையை வெறும் மனநிலையில் மட்டும் மாற்ற முடியாது. நமது சமூக சூழ்நிலையையே மாற்றினால் மட்டும்தான், கல்வி சூழ்நிலையில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. என்ஜினியரிங் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று உலகம் முழுவதும் எஞ்சினியர்களை உருவாக்கினால்? சிறந்த உலகைப் படைக்கும் அவர்களது தீரா ஆசையினால் உலகத்தை அழித்தேவிடுவார்கள் (இருவரும் சிரிக்கிறார்கள்).

ஃபாதர் ஜோ:
ஆம்.

சத்குரு: உலகம் அழிவது கெட்டவர்களால் அல்ல, நல்ல நோக்கத்தில் இருப்பவர்களால்தான். எல்லாவற்றிலும் எஞ்சினியரிங் (கட்டுமானம் குறித்துச் சொல்கிறார்) செய்து முடித்துவிட்டு, ஒரு நாள் மூச்சு எடுக்கக் காற்று இல்லாமல் செய்துவிடுவார்கள்.

ஃபாதர் ஜோ:
சென்ற வருடம் ஒரு பையன் என்னிடம் வந்து கேட்டான், “ஃபாதர் நான் BCA படிக்கணும் (Computer Application). “ஏய்யா?” என்றேன். “எங்க அம்மா படிக்க சொல்றாங்க,” என்றான். இப்படித்தான் நிறைய மாணவர்கள் சீட் கேட்கிறார்கள்...

சத்குரு: அம்மாவிற்கு கம்ப்யூட்டர் என்றால் என்னவென்று தெரியவில்லை, ஆனால் கம்ப்யூட்டர் படிக்க சொல்கிறார். பையன் இதைப் படிக்க வேண்டும் என்று அவருக்கு பெரிதாக தெரியாவிட்டாலும், எது படிச்சா பையனுக்கு வேலை கிடைக்கும், நன்றாக வாழ்வான் என்று மட்டும் பார்க்கிறார். இவ்வளவு பணம் இருந்தால்தான் நல்ல வாழ்க்கை, நன்றாக வாழ முடியும் என்ற முடிவு இன்று மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டது. இது மிகவும் அபாயகரமான கண்ணோட்டம். இந்த மனநிலை உள்ளவரை, நமது சுற்றுச்சூழலையோ மற்றவற்றையோ காப்பாற்ற முடியாது, அழித்து விடுவார்கள்.

ஏனென்றால், ஒருவர் வாழ்வின் உச்சத்தில் இருக்கிறார், அவரைப் பார்த்து எல்லோருக்கும் அந்த உச்சநிலையை அடைந்துவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் இவருக்கோ, மற்றவர்கள் அந்த உயரத்தை எட்டுவதற்குள் இன்னும் மேலே போக வேண்டுமென்று ஆசை. இது முடிவே இல்லாத ரேஸ். வாழ்க்கையை எப்படி செய்வது என்னும் கவனம் நமக்கு அதிகமாகி விட்டது. ஆனால் மனிதம் எப்படி செய்வது என்று பார்க்கும் நிலை மிகவும் அவசியமானது.

ஃபாதர் ஜோ: அதாவது, உள் தொழில்நுட்பமா?

சத்குரு: என்னை நான் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லாமல் போய்விட்டது. அதற்காகத்தான் நாம் உள் தொழில்நுட்பம், இன்னர் எஞ்சினியரிங் நடத்துகிறோம். ஏனென்றால் வெளியே நிறைய எஞ்சினியரிங் (கட்டுமானம், பிற வசதிகள் குறித்து சொல்கிறார்) செய்துவிட்டோம். உலகம் முழுமையையும் நமக்குத் தேவையானபடி மாற்றி விட்டோம். ஆனால், மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி செய்து கொள்ள நமக்குத் தெரியவில்லை, தன்னை மாற்றிக் கொள்ளவும் விருப்பமில்லை.

ஒரு மனிதனுக்குள் இயல்பாய் மலர வேண்டிய உள் ஆனந்தத்தை, மனிதனுக்குள் உறுதிப்படுத்தத் தேவையான கருவியை நாம் சமூகத்தில் கொண்டு வரவில்லையென்றால், மனிதன் இந்த சந்தோஷத் தேடுதலில் உலகத்தை சாப்பிட்டுவிடுவான், இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கை சந்தோஷத் தேடுதலில் இல்லாமல், சந்தோஷத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் அப்படிப் பட்டவர்கள்தான். அவர்கள் செய்வதெல்லாம் தன்னுடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தும் செயல்களே!

தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் நிலையில் இருக்கும் ஒருவர் எதையும் அதிகமாக விழுங்கமாட்டார். தனக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவுக்கே எடுப்பார். நாம் சமூகத்தில் இந்த அடிப்படையை உருவாக்காமல், கல்வி முறையை மாற்றி அமைப்பது, சுற்றி நடப்பவற்றை மாற்ற முனைவது என்று என்ன செய்தாலும் அது உதவாது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1