Question: கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்று கொக்கலிப்பவர்களின் தலையில் தட்டுவதற்காகவே கடல் பொங்கிக் காட்டியது' என்று என் தாத்தா சொல்கிறார். தமிழ்நாட்டில் நாத்திகவாதம் தலைதூக்கியதால்தான் சுனாமி வந்ததா? கடவுளுக்கு நம் மீது கோபமா?

சத்குரு:

நம் பழக்கம் என்ன? இழப்பு வந்தால், அழுது புலம்புவது; இனிமேலாவது காப்பாற்று என்று கடவுளிடம் பிரார்த்தனை பண்ணிவிட்டு, பழையபடி நமது முட்டாள்தனத்தைத் தொடர்வது!

உண்டியலில் காசு போட்டுவிட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக இன்னொருவனைத் தண்டிக்கவும் மாட்டார்.

சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க எண்ணுபவர்கள், முதலில் அங்கே சிறியதாக ஒரு கோயில் கட்டுவார்கள். கார்ப்பரேஷன்காரர்கள் எப்படியும் கோயிலை இடிக்க மாட்டார்கள். இப்படியே நம் வீடும் தப்பித்துவிடும் என்று கணக்கு.

அதே கணக்கு சமுத்திரத்தின் முன் செல்லுபடியாகுமா? கடற்கரையோரம் வீடு கட்டுபவர்கள், கூடவே கோயில்களையும் கட்டி வைத்து, 'சுனாமி வராமல் பார்த்துக் கொள்' என்று அந்தக் கடவுளிடம் சொல்லித் தப்பித்துவிட முடியுமா? சுனாமியால் விழுங்கப்பட்டவை வீடுகள் மட்டுமல்ல; கடலோரக் கோயில்களும்தான்! அதைப் பார்த்தாவது மனிதனுக்குப் புத்தி வர வேண்டாமா?

கடல் அருகில் வாழ முடிவு செய்துவிட்ட நாமல்லவா பெரிய அலைகளை எதிர்கொள்ளத் தயாராகி இருக்க வேண்டும்? அதை விடுத்து ஆத்திகம், நாத்திகம் என்று பேசுவது பொறுப்பற்ற பேச்சு. ஆத்திகமும், நாத்திகமும் இருவேறு மனித நம்பிக்கைகள், அவ்வளவுதான்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உண்டியலில் காசு போட்டுவிட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக இன்னொருவனைத் தண்டிக்கவும் மாட்டார்.

நம் பிரச்சனை என்ன? 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். கடவுள் பார்த்துக் கொள்வார்' என்று யாரோ சொன்னதை நம்பி, நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம். எதனால் எது நடக்கிறது என்று புரிந்து கொள்ளாமல், இது பண்ணினால் கடவுளுக்குக் கோபம் வருமா, அது பண்ணினால் சந்தோஷம் வருமா என்று கணக்குப் போடுகிறோம்.

படைப்புத் தொழிலை இதைவிட சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற அளவுக்குக் கடவுள் தனது பணியைச் செவ்வனே செய்து முடித்துவிட்டாரல்லவா? சிந்திக்க மூளையையும், செயல்பட கை கால்களையும் உங்களுக்கு அளித்திருக்கிறார் அல்லவா? அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் வாழ்க்கையை மேன்மையாக்கிக் கொள்வது உங்கள் பொறுப்பு தானே? ஏதாவது சரியாக நடக்கவில்லை என்றால், அது கடவுளின் அல்லது இயற்கையின் குற்றம் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, உங்களைத் திருத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்?

எந்தச் சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதில் கவனம் இல்லாமல் நம் கடமையைச் சரிவரச் செய்யாமல், எதற்கெடுத்தாலும் கடவுளிடம் பொறுப்பைத் தூக்கிக் கொடுத்தால், அவரும் சலித்துப் போய் 'போங்கடா' என்று நம்மை உதறிவிட்டுத்தான் போவார்.

சங்கரன்பிள்ளையும் இரண்டு நண்பர்களும் தினமும் மதிய உணவைச் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

ஒரு நண்பர் சொன்னார்... 'பத்து வருடமாக டப்பாவைத் திறந்தால் இதே இட்லிதான். நாளைக்கும் இட்லிகள் இருந்தால், இந்த மாடியிலிருந்து குதித்துவிடப் போகிறேன்!"

அடுத்த நண்பர் சொன்னார்... "அதே கதைதான் இங்கும்! பன்னிரண்டு வருடமாக என் டப்பாவில் தயிர்சாதம். நாளைக்கும் இப்படியிருந்தால், நானும் மாடியிலிருந்து குதித்துவிடப் போகிறேன்!

சங்கரன்பிள்ளை சொன்னார்... "கல்யாணமானதிலிருந்து தினமும் இதே சப்பாத்தி. நாளைக்கும் சப்பாத்திகள் இருந்தால், நானும் உங்களுடன் குதித்துவிடுவேன்!"

மறுநாள், மூன்று நண்பர்களின் டப்பாக்களிலும் உணவு மாறவில்லை. வழக்கமான அதே இட்லி, தயிர்சாதம், சப்பாத்தி!

மூவரும் மாடியிலிருந்து குதித்து விட்டார்கள்.

பலத்த அடிபட்டு, மருத்துவமனையில் அவர்கள் சுயநினைவின்றிக் கிடக்க, அங்கே மூவரின் மனைவிகளும் சந்தித்துக் கொண்டார்கள்.

"என் கணவர் இட்லிகளை இந்த அளவுக்கு வெறுத்திருப்பார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், வேறு ஏதாவது கொடுத்து அனுப்பியிருப்பேனே" என்று கண்ணீர் விட்டாள் ஒருத்தி. "என் கணவருக்குத் தயிர்சாதத்தின் மீது வெறுப்பு என்று தெரிந்திருந்தால், நானும் உணவை மாற்றிக் கொடுத்திருப்பேன்" என்று மூக்கைச் சிந்தினாள் இரண்டாமவள். சங்கரன்பிள்ளையின் மனைவி சொன்னாள்... "எங்கே தப்பு நடந்தது என்று எனக்குப் புரியவே இல்லை. திருமணமான நாளிலிருந்து தனக்குத் தேவையானதை அவரேதானே தினமும் சமைத்து எடுத்துப் போகிறார்?"

சங்கரன்பிள்ளையைப் போலத்தான், நீங்களே விரித்த வலையில் சிக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்!

உங்கள் வீட்டு வாசற்படியை அலைகள் தொட்டுத் தழுவ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். படகை நிறுத்த வேண்டிய இடத்தில், வீட்டைக் கட்டுகிறீர்கள். ஏதோ அறுபது எழுபது வருடங்களுக்கு ஒரு முறைதானே பெரிய அலை வருகிறது... பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கிறீர்கள். நமக்கிருக்கும் அதே ஆசை கடலுக்கும் வந்து, நம் வீட்டைக் கட்டித் தழுவிவிட்டுப் போயிருக்கிறது என்று உங்களால் சமாதானம் செய்துகொள்ள முடிகிறதா? எல்லாம் போய்விட்டதே என்று அழுது புலம்புகிறீர்கள்.

இது கடலின் பிரச்சனையா, கடவுளின் பிரச்சனையா, மனிதனின் பிரச்சனையா?

சுனாமி, இயற்கையின் சீற்றமல்ல. இயற்கையின் மாற்றம். அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் கடவுளின் கோபமல்ல. மனிதனின் முட்டாள்தனம். இயற்கையை வைத்து என்ன ஆதாயம் தேடலாம் என்று மட்டுமே பார்க்காமல், அதன் எல்லாக் குணங்களையும் புரிந்துகொள்ள மனிதன் முயற்சி செய்யாத வரையில், பாதிப்புகள் இப்படித்தான் பயங்கரமாக இருக்கும்.