prayerகேள்வி: என் கணவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், நான் ஞாயிறு தவறாமல் சர்ச் செல்பவள். என் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் தவறாமல் பிரார்த்தனை செய்பவள். இருந்தும், என் மகன் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி, குடும்ப அமைதியைக் கெடுக்கிறான். என் கணவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறாரா?

சத்குரு: ஒருவன் கடவுள் முன் மண்டியிட்டுப் புலம்பினான்... "கடவுளே! என் மதம் போதித்த ஒழுக்கங்களை மீறாமல் இருக்கிறேன். தினமும் வேளை தவறாமல் பிரார்த்தனை செய்கிறேன். ஆனால், என்னை ஏழையாக வைத்திருக்கிறாய். அடுத்த வீட்டில் இருப்பவனோ சரியான குடிகாரன், ஒழுக்கம் கெட்டுத் திரிபவன். ஒரு நாள்கூடப் பிரார்த்தனை செய்ததில்லை. அவனுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறாய். ஏன்?"

துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளைத் தரிசிக்க முடியாது. முதலில், ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

கடவுள் சொன்னார்... "அவன் வளவளவென்று புலம்பி, என்னை போரடிப்பதில்லை. அதனால்தான்" என்றார்.

தினம் தினம் சுலோகங்களைச் சொல்வதோ, வேதனையில் இருக்கும்போது அதிகமாகப் புலம்புவதோ, கடவுளை உங்கள் பக்கம் திருப்பாது.

உங்கள் மகனை ஒழுக்கமானவனாக வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அதை விட்டுவிட்டு, பிரார்த்தனை செய்வது தவறா, செய்யாமல் இருப்பது தவறா என்று கேட்பதெல்லாம் அர்த்தமற்ற விவாதம்.

அச்சத்தாலோ, ஆசையாலோ வழிபடுவது பிரார்த்தனை ஆகாது என்று பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். 'கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார்' என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டு இருப்பதால், அந்த நம்பிக்கையில் பிரார்த்தனை என்ற சடங்கை நிறைவேற்றுகிறீர்கள். கடவுளுக்குப் பதிலாக ஒரு கழுதையைக் காட்டி, அதை மூன்று முறை சுற்றிவந்தால் நீங்கள் கேட்டது கிடைக்கும் என்றால், அதையும் கேள்வியின்றிச் செய்வீர்கள்தானே?

உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும் பலனில்லை.

prayerகேள்வி: பின்னே, சிலருடைய பிரார்த்தனைகள் மட்டும் உடனுக்குடன் நிறைவேறுகின்றனவே, எப்படி?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா சென்றார். அங்கே குடியுரிமை பெற்றார். இங்கிலாந்து நண்பர்கள் அவரிடம் கோபமாகக் கேட்டனர்... "அமெரிக்கனாக மாறி என்ன சாதித்துவிட்டாய்?"

அவர் நிதானமாகச் சொன்னார்... "இங்கிலாந்தை எதிர்த்து அமெரிக்கர்கள் சுதந்திரம் பெற்றதை மறந்துவிட்டீர்களா? தோற்ற நாட்டுக் குடிமகனாக எதற்கு இருக்க வேண்டும்? இப்போது ஜெயித்த நாட்டுக் குடிமகனாக மாறிவிட்டேன்!"

பிரார்த்தனைகளும் அப்படித்தான். சாதகமாக ஏதாவது நடந்துவிட்டால், அது கடவுள் அருளால் நடந்தது என்பார்கள். நடக்கவில்லை என்றால், அது கடவுளின் சித்தம்; அதைக் கேள்வி கேட்கக்கூடாது என்பார்கள்.

பிரார்த்தனை என்பது மண்டியிட்டு, சில குறிப்பிட்ட சுலோகங்களைச் சொல்வதோ, துதிப்பாடல்களைப் பாடி நம் ஆசையை நிறைவேற்றும்படி கடவுளிடம் மன்றாடுவதோ அல்ல. அது கடவுளுக்காக அல்ல; உங்களுக்காக!

உங்கள் வேதனைகளைக் கடவுளிடம் கொண்டு செல்லாதீர்கள். துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளைத் தரிசிக்க முடியாது. முதலில், ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

prayerகேள்வி: கடவுளிடம் தீர்வுகளை எதிர்பார்க்கக்கூடாது என்றால், வேறு எதற்காகத்தான் பிரார்த்தனைகள்?

சத்குரு: இதைக் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.

எதற்காகப் பிரார்த்தனை செய்கிறீர்கள்? கடவுளை அறிந்து கொள்வதற்காகவா? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரு முட்டாள் இயந்திரமாகக் கடவுளை நினைத்திருக்கிறீர்கள்.

பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், ஒருவித உள்ளுணர்வாக மலர வேண்டும். ஆலயத்தில் பணிவாக சேவகன் போல் நடந்து கொள்கிறீர்கள். ஆனால், உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் நீங்களே கடவுள் போல் இறுமாப்பாக நடந்து கொள்கிறீர்கள். இதுவா பிரார்த்தனை உணர்வு?

முதியவர் ஒருவர் பிரார்த்தனை நேரத்தில் சர்ச்சுக்கு வருவார். அவரைத் தொடர்ந்து கவனித்து வந்த பாதிரியார், ஒருநாள் அவரைக் கூப்பிட்டனுப்பினார்.

"பிரார்த்தனை நேரத்தில், நீங்கள் வாய் திறந்து முணுமுணுத்துக்கூடப் பார்த்ததில்லை. பின் எதற்காக வருகிறீர்கள்?"

"நான் கடவுளிடம் பேச வரவில்லை. அவர் சொல்வதைக் கவனிக்க வருகிறேன்" என்றார் முதியவர்.

"ஓ கடவுள் உங்கள் காதில் மட்டும் பேசுகிறாராக்கும்! அப்படி என்னதான் சொல்கிறார்?"

"அவரும் என்னைப் போல்தான். பேச வருவதில்லை. கவனிக்கத்தான் வருகிறார்!"

வாழ்க்கை அப்படித்தான். வேறு லயத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக, உன்னிப்பாகக் கவனித்தால் போதும்... நீங்கள் விரும்பியதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது புலப்படும். கடவுளிடம் நீங்கள் இரைச்சலாகப் பேசிக்கொண்டு இருப்பதாலேயே எதையும் கவனிக்க முடியாமல் போகிறது.

கவனிக்கத் தவறிவிட்டு, பிரார்த்தனைகள் மூலம் கடவுளைக் கூப்பிட்டால், அவர் தன் சுண்டுவிரலைக்கூட உங்களுக்காக அசைக்க மாட்டார். அது புரியாமல் நீங்களும் இது சாபம், அது அருள் என்று பேசிக் கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான்....

கடவுள் சந்நிதியில் சொல்வது மட்டும்தான் பிரார்த்தனை என்பது அல்ல; இந்த உலகமே, இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆலயம். எனவே, நடப்பதை, உணவு உட்கொள்ளுவதை, அடுத்தவரிடம் அன்பு காட்டுவதை என ஒவ்வொரு செயலையுமே பிரார்த்தனை போல் செய்யுங்கள்.

உலகில் இருப்பதையெல்லாம் ரசிக்கிறேன், மதிக்கிறேன். வாழ்க்கையையே பிரார்த்தனை போல் நடத்திச் செல்வதுதான் என் நோக்கம். அதற்கொரு பயிற்சியாக கோயிலிலும் பிரார்த்தனைகள் சொல்கிறேன்' என்றால், அதில் அர்த்தம் இருக்கிறது.

பின்பற்ற வேண்டிய ஒரு போதனையாக நினைத்து, இதைச் செய்யாதீர்கள். வாழ்க்கையின் ஆழமான அனுபவமாக ஏற்றுப் பாருங்கள். அதன் பலனாக உங்களுக்கு அமுதம் கிடைக்கும்!

குறிப்பு: இந்தக் கட்டுரை சத்குருவின் 'கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

konjam amudam