கடவுளை போர்(Bore) அடிக்காதீர்கள்!
பிரார்த்தனை என்றால், கோவிலுக்கு சென்று வேண்டிக்கொள்வதும், கடவுளிடம் முறையிடுவதும்தான் நம்மில் பலர் செய்கிறோம். இப்படியெல்லாம் செய்து "கடவுளை போர் அடிக்காதீர்கள்!" என்கிறார் சத்குரு. அப்படியென்றால் கடவுளை எப்படி அணுகுவது? விடை காண தொடர்ந்து படியுங்கள்...
 
 

பிரார்த்தனை என்றால், கோவிலுக்கு சென்று வேண்டிக்கொள்வதும், கடவுளிடம் முறையிடுவதும்தான் நம்மில் பலர் செய்கிறோம். இப்படியெல்லாம் செய்து "கடவுளை போர் அடிக்காதீர்கள்!" என்கிறார் சத்குரு. அப்படியென்றால் கடவுளை எப்படி அணுகுவது? விடை காண தொடர்ந்து படியுங்கள்...

சத்குரு:

பிரார்த்தனை...

என் சிறு வயதில்கூட நான் பிரார்த்தனைகள் செய்ததில்லை.

பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனைக் கூடத்தில் மாணவர்கள் அத்தனை பேரும் நிற்போம். ஒன்றாக ஈசனைத் துதித்து 'மூவுலகையும் படைத்தவனே, என்னைக் காப்பாற்று' என்று உரத்த குரலில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். அந்தக் குரல்களுடன் சேர்ந்து சும்மா நானும் கத்துவேனே தவிர, பிரார்த்தனை எதுவும் செய்ததில்லை.

பிரார்த்தனைக்கான உணர்வே என்னிடம் இல்லை என்று சொல்லவில்லை. அந்த உணர்வு கணத்துக்குக் கணம் இப்போதும் இருக்கிறது. ஆனால், பிரார்த்தனை என்பதை ஒரு செயலாகச் செய்ய சிறு வயதிலிருந்தே மறுத்து வந்திருக்கிறேன். பிரார்த்தனை செய்வதற்கான அவசியத்தை ஒருபோதும் உணர்ந்ததில்லை.

பொதுவாக, பிரார்த்தனை என்பது மூன்று காரணங்களுக்காகத்தான் செய்யப்படுகிறது.

ஒன்று, அச்சம். 'எதிரியிடமிருந்து காப்பாற்று, விபத்திலிருந்து காப்பாற்று, நோயிலிருந்து காப்பாற்று' என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கச் சொல்லி வேண்டுவது. இரண்டாவது பேராசை. 'எனக்குப் படிப்பு கொடு, வீடு கொடு, பதவி உயர்வு கொடு, செல்வம் கொடு' என்றெல்லாம் விண்ணப்பங்கள் போடுவது. மூன்றவாது, 'நன்றி. அதைச் செய்து கொடுத்ததற்கு நன்றி' என்று நன்றி தெரிவிப்பது.

அச்சமோ, பேராசையோ என்னை எந்த நிலையிலும் தாக்கியதில்லை. அதற்கான பிரார்த்தனைகள் செய்ய வேண்டிய அவசியம் வந்ததும் இல்லை.

எப்போது உங்களிடம் நன்றியுணர்வு பெருகுகிறது? உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உதவி செய்யக் கடமைப்பட்டவர்களாக இல்லாதபோதும் உங்களுக்கு உதவி செய்தால், நெகிழ்ச்சியில் நன்றி உணர்வு எழும்.

என்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையிடம், உயிர்களிடம் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். படைத்தவனிடம் எனக்கு உண்டாவது அளப்பரிய பிரமிப்பே தவிர, நன்றி உணர்வு இல்லை.

துறவிக்கு எது சொந்தம்...

மன்னன் ஒருவன் நகர்வலம் போயிருந்தான். சாதாரண ஆடைகளுடன் நடைபாதை ஓரத்தில் ஆனந்தமாக அமர்ந்திருக்கும் ஒரு துறவியைப் பார்த்தான். "இவ்வளவு குறைவான வளம் இருந்தும் திருப்தியாகக் காணப்படுகிறீர்களே, உங்களைப் பார்த்தால், பொறாமையாக இருக்கிறது" என்றான் மன்னன். "என்னைவிடக் குறைவான செல்வம் கொண்டுள்ள நீ இதை சொல்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது" என்றார் துறவி. "என்ன என் வளம் குறைவா?" எனக்குக் கீழ் 6 தேசங்கள் இருக்கின்றன. 14 குறுநில மன்னர்கள் இருக்கிறார்கள். உங்களிடம் என்ன இருக்கிறது?" என்றான் மன்னன் சூடாக. "இந்தப் பூமி, இந்தக் காற்று, வானம், சூரியன், நிலவு, அண்டவெளி, இந்தப் பிரபஞ்சம். ஏன் அதற்கு அப்பால் என்னுள் படைத்தவன் இருக்கிறான். உன் தேசங்களுக்கு எல்லைகள் இருக்கின்றன. எல்லையில்லாததுக்கு நான் சொந்தக்காரன்!"

படைத்தவன் உள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டால், உங்களுக்குக் கிடைப்பதெல்லாம் அவனுக்குக் கிடைத்ததுதானே. பிறகென்ன, ஆனந்தம்தான் ஒரே விளைவு!

என்னுடைய கவனம் எல்லாம், ஒருவர் தன்னை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்கிறார் என்பது பற்றித்தான். அடுத்தவருக்கு அவர் என்ன செய்கிறார் என்பது பற்றியல்ல. ஏனெனில், நீங்கள் ஆனந்தமாக இருந்தால், சுற்றியுள்ளவர்களையும் ஆனந்தமாக்குவீர்கள். நீங்கள் வேதனையில் இருந்தால், அடுத்தவரையும் வேதனைக்கு உள்ளாக்குவீர்கள்.

என்னைச் சுற்றியுள்ளவர்கள் எனக்கு ஏதாவது செய்யும்போதுகூட, அவர்களிடத்தில் நன்றி காட்ட நான் முற்படுவதில்லை. ஏனென்றால், என் வாழ்வின் தரத்தை அது மாற்றப் போவதில்லை. ஆனால், மாற்றம் அவர்களுக்கு நிகழ்கிறது. அவர்கள் எவ்வளவு அற்புதமான மனிதர்களாக மாறுகிறார்கள். மற்றவருக்குச் செய்வதால், அவர்கள் நலவாழ்வு எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பதற்கான நன்றி உணர்வுதான் என்னிடம் பெருகுகிறது.

நன்றி உணர்வை வெளிப்படுத்த...

நன்றி உணர்வை வெளிக்காட்ட பிரார்த்தனையைவிட வேறு பல நல்ல வழிகள் உண்டு. பிரார்த்தனை என்பது என்ன? காப்பாற்றச் சொல்லியோ, வழங்கச் சொல்லியோ படைத்தவனிடம் நீங்கள் பேசும் ஒரு செயல். விண்ணப்பங்கள் வைக்கையில் அவனுக்கு மறைமுகமாக உத்தரவுகள் தருகிறீர்கள். அந்தத் தகுதியை உங்களுக்கு யார் அளித்தார்கள்? உங்கள் உத்தரவுகளைக் கேட்டுச் செயல்பட்டதற்கோ அல்லது தானாகவே வழங்கியதற்கோ நன்றி தெரிவித்தீர்கள் என்றால், அவனாகச் செயல்படும் தகுதி படைத்தவனுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டுவது போலாகிவிடும். அப்படிப்பட்ட எண்ணம் கொள்ள நீங்கள் யார்?

பிரார்த்தனையை வாழ்க்கையின் மிக மேன்மையான கொள்கையாக வைத்துக் கொண்டுள்ள பலர் என்னிடம் கசப்பு கொள்வார்கள். இங்கே பிரார்த்தனை என்ற செயலைப் பற்றித்தான் பேசுகிறேன். அந்த உணர்வை பற்றி அல்ல.

கடவுளிடம் ஙொண... ஙொண... என்று பேசி, கடவுளை போரடிப்பதை நிறுத்துங்கள். பிரார்த்தனை உணர்வுடன் இருங்கள். அவன் சொல்வதைக் கவனியுங்கள். இதுதான் பிரார்த்தனைக்கும், தியானத்துக்கும் முக்கிய வேறுபாடு. தியானம், நீங்கள் மௌனமாக இருந்து படைத்தவன் தெரிவிப்பதைக் கவனிப்பது.

என்னைப் பொறுத்தவரை, பேசுவதைவிட கவனித்துக் கேட்பதுதான் புத்திசாலித்தனம். கவனிப்பது என்பது விழிப்பு உணர்தலுக்கான ஆற்றல்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1