மலர் என்றால் அழகு, வண்ணம், வாசம், மென்மை... இன்னும் அடுக்கிக்கொண்டே சொல்லாம். இந்த அழகியல் பார்வையைத் தாண்டி, மலர் என்பது ஆன்மீகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக வைக்கப்படுகிறது. மலரில் மறைந்துள்ள ஆன்மீக முக்கியத்துவத்தை இந்த பதிவு விளக்குகிறது!

சத்குரு:

மலர்களின் செயல் என்ன?

மலர்கள் மிகவும் முக்கியமானவை. வழிபாட்டில் அவை இடம் பெற்றாலும் சரி, இடம் பெறாவிட்டாலும் சரி.

தாவரவியல் கண்ணோட்டத்துடன் பார்த்தால், மலர்கள் இனப்பெருக்கத்திற்கான கருவி. நீங்கள் மலர்களைப் பற்றி எவ்வளவு உயர்வாக வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். மலர்கள் இறைவனுக்கு மிகவும் உகந்த ஆபரணம் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் மலரைப் பொறுத்தவரை, அது தேனீக்களை கவர்ந்திழுத்து, இனப்பெருக்கம் செய்யவே முற்படுகிறது. மலர்கள் அதை மட்டும்தான் செய்கின்றன. இந்த உண்மை மலர்களுக்கு மட்டுமல்ல. இந்த உலகம் முழுவதையும் உயிரியல் நோக்கில் பார்த்தால், உயிரோடு வாழ்வதும், இனப்பெருக்கம் செய்வதும், பாதுகாத்துக் கொள்வதும்தான் அடிப்படை செயல்களாக உள்ளன. இது ஒரு கண்ணோட்டம். இன்னொன்று, மலரை, செடியினுடைய உயிர்த்தன்மையின் மிக உச்சமான வெளிப்பாடு என்று பார்ப்பது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மலரைப் பற்றிய கண்ணோட்டங்கள்

ஒரு மலர் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது. ஒருவருக்கு, மலர் இறைவனின் திருமுகமாகத் தோன்றலாம். ஒரு விஞ்ஞானிக்கோ, அது இனப்பெருக்கத்திற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம். ஆனால் ஒரு ஞானிக்கு, மலர் என்பது இறைமையின் உச்சகட்ட வெளிப்பாடாகத் தோன்றும். ஆனால் மலர்களை மட்டும் ஏன் நாம் வழிபாட்டிற்குப் பயன் படுத்துகிறோம்? ஏன் கற்களையோ இலைகளையோ அல்லது வேறு எதையோ பயன்படுத்துவதில்லை?

ஒருவர் இன்பத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தால், அவர் மரத்தின் கனியில் மட்டும் தான் கவனமாக இருப்பார்.

ஒரு மனிதரைப் பாருங்கள். அவர் ஒன்றை நோக்கி, தன்னை எப்படி ஈடுபடுத்திக் கொள்கிறார் என்று பாருங்கள். ஒருவர் தன்னிடம் இருப்பதைப் பன்மடங்காகப் பெருக்குவதை விரும்புபவர் என்றால், அவர் நாட்டம் முழுவதும் விதையில் தான் இருக்கும். ஒருவருடைய விருப்பம் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு என்றால், அவர் மரத்தின் தண்டிலும், கிளைகளிலும் தான் கவனம் கொள்வார். ஒருவர் இன்பத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தால், அவர் மரத்தின் கனியில் மட்டும் தான் கவனமாக இருப்பார். மாஞ்செடியை நட்டுவைத்து விட்டு, “அதன் கனிகள் எத்தனை சுவையாக வருமோ!” என்று சிந்தனை செய்து கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு செடியின் வேரிலோ, இலையிலோ, மற்ற எந்த பாகத்திலுமோ கவனம் இல்லை. செடிக்கு என்ன நடக்கிறது என்பதிலும் கவனம் இல்லை. அவர்கள் பழத்திற்காக மட்டுமே காத்திருக்கிறார்கள்.

அவர்கள் ஒரு செடி வளர்வதைப் பார்த்து ரசிக்க மாட்டார்கள். ஒவ்வொரு புது இலை வளர்வதைப் பார்த்தும் மகிழ்ச்சி கொள்ள மாட்டார்கள். அவர்கள் கவனம் முழுக்க முழுக்க, பழத்தில் தான் இருக்கும். எந்த அளவுக்கு என்றால் பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகள் அந்தப் பழத்தை திருடிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஒருவேளை பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகள் பழத்தை எடுத்துக் கொண்டுவிட்டால், அவர்களுடைய ஐந்து வருட எதிர்பார்ப்பு வீணாகிவிடும். ஒரு செடியின் மலர், இலை, விதைகள், பழம் என்று கவனித்துப் பார்த்தால், அவற்றுள் மலர்தான் மிகவும் மென்மையானது, மிகக் குறுகிய காலத்திற்கே இருப்பது. அது காலையில் இருந்தது போல் மாலையில் இருப்பதில்லை. ஒரு சில மலரை நீங்கள் ரசிக்க வேண்டுமென்றால், நீங்கள் அதிகாலையில் எழுந்து தான் அதைப் பார்க்க வேண்டும். நீங்கள் காலை பத்து மணிக்கு எழுந்து பார்த்தால் அது அதே போல் இருக்காது. அது அந்த அளவிற்கு, மென்மையானது.

உள்நிலை மலர்தல்

ஆன்மீக வளர்ச்சியை எப்போதும், ‘மலர்ச்சி’ என்று தான் குறிப்பிடுவார்கள். ஆன்மீக வளர்ச்சியை ‘உள்நிலையில் மலர்தல்’ என்று தான் சொல்கிறோமே அன்றி, ‘உள்நிலையில் கனிதல்’ என்று சொல்வதில்லை. ‘கனி’யை எப்போதுமே ஒரு செயலின் முடிவாக, நிறைவாகத்தான் பார்க்கிறோம். அந்தக் கனியிலிருந்து ஏதோ ஒன்று உங்களுக்கு கிடைத்திட வேண்டும். கனி என்பது அந்த எதிர்ப்பார்ப்பை, அத்தகைய அம்சத்தை அதிகம் உள்ளடக்கியதாக இருக்கிறது. இன்பம் துய்த்தல் என்பதின் ஆழமான அம்சத்தை அது உள்ளடக்கியதாக இருக்கிறது.

ஆனால், வாழ்க்கையை அதன்போக்கில் அப்படியே ஏற்று மகிழ்பவர், மலர்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறார். மலர்கள் உயிரின் மிக எளிமையான, அழகான, அற்புதமான வெளிப்பாடு. அதைத் தவிர்த்து, அதற்கு எவ்வித முக்கியத்துவமோ, பயனோ இல்லை.

உச்சக்கட்ட வெளிப்பாடு!

மலர்தான் செடியினுடைய உயிர்த்தன்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடு.

ஒருமுறை நான், “நம் மையத்தில் பூ பூக்கும் மரங்களை நடலாம்” என்று கூறிய போது, நடைமுறைத் தேவைகளை யோசித்த நம் பிரம்மச்சாரிகள் சிலர், “அதனால் என்ன பயன்? அதற்கு பதிலாக வெண்டைக்காய் அல்லது பாகற்காயை பயிர் செய்யலாமே? எதற்காக பூக்கும் மரங்களை வைக்க வேண்டும்?” என்று கேட்டார்கள். அவர்கள் கூறியதும் ஒருவிதத்தில் சரி தான். அவர்கள் கூறியதை நான் மறுக்கவில்லை. நான் வயிறு நிறைய உண்டுவிட்டு வெண்டைக்காய் தோட்டத்தில் வாழ்வதைவிட, மலர்களுக்கு இடையே பசியுடன் இருப்பதையே விரும்புகிறேன். பயன் கொடுப்பது என்ற அடிப்படையில் பார்த்தால் மலருக்கு அதிக பயன் இல்லைதான். ஆனால் ஒரு செடியின் உயிர்தன்மையில் மலர் என்பது மிகமிக அழகிய பரிமாணம். மலர்தான் செடியினுடைய உயிர்த்தன்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடு.

அதனால்தான் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்றால், நீங்கள் உயிர்த்தன்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடான ஒன்றை, அர்ப்பணிக்க நினைக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் ஏதோ ஒன்றை அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களுடைய இதயத்தை பிடுங்கிக் கொடுக்கத்தான் நினைப்பீர்கள், உங்கள் கால் கட்டை விரலை அல்ல. அப்படித்தானே? உங்களிடம் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்த பரிமாணத்தைக் கொடுக்கத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். அதனால்தான், ஒரு செடியில், வேர், தண்டு, கிளைகள், என்று பல இருந்தாலும், மலர் தான் மிகவும் உயர்ந்த பரிமாணம் என்பதால், அதையே நாம் அர்ப்பணிக்கிறோம்.

மலரைப் போல மலருங்கள்!

எனவே உங்கள் வாழ்வில், நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளக் கூடியதில் மிகப் பெரியது, வேராகவோ, இலையாகவோ, தண்டாகவோ, மாறுவதல்ல - ஒரு மலராக மாறுவது தான். மலர் சிறிதும் பயனற்றது தான், ஆனால் மிக எளிதாக அனைவராலும் அணுகக் கூடியது. நீங்கள் ஒரு பூச்செடியைக் கடந்து நடந்து போனால், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பூவின் மணம் உங்கள் நாசிகளுக்குள் நுழையும். உங்கள் விருப்பத்தை அது கேட்பதில்லை. இல்லையா? நீங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும், உங்களுக்குள் ஏதோ நிகழ்வதை உங்களால் உணர முடியும். செடியின் மற்ற எந்த தன்மைக்கும் இந்தத் திறன் இருப்பதில்லை. எனவே ஆன்மீக செயல்முறையின் நோக்கமே நீங்கள் மலர் போல மாறுவது தான். மலர் ஒரு குறியீடாக மாறியிருக்கிறது.

மலர் என்பது அர்ப்பணிப்புத் தன்மைக்கான இன்னொரு சொல்லாகவே கூறப்படுகிறது.