கடவுள் நம்பிக்கை & கடவுள் மறுப்பு - எது தேவை?
புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை என்ன? முதலில் எனக்குத் தெரியாது என்பதை உணர வேண்டும். எனக்குத் தெரியாது என்னும் மனிதனுக்குத்தானே புரிய வைக்கமுடியும்? தெரியாதது பற்றி ஏற்கனவே ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்ட மனிதனுக்கு ஏதாவது புரிய வைக்க முடியுமா?
 
கடவுள் நம்பிக்கை & கடவுள் மறுப்பு - எது தேவை?, Kadavul nambikkai, kadavul maruppu - ethu thevai?
 

Question:சத்குரு, ஈஷாவில் சேர்ந்த பிறகு எனக்கு கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டது. அனைவரிடமும் அன்பு செலுத்துவதே இறைமை என இப்போது எண்ணுகிறேன். ஆனால் உலகில் நடக்கும் நிகழ்வுகள் பிறப்பு, இறப்பு இவற்றை பார்க்கும்பொழுது நான் எண்ணுவது தவறா எனத் தோன்றுகிறது. எது உண்மை?

சத்குரு:

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி குறைய முடியும்? அல்லது எப்படி அதிகமாக முடியும்? எனக்குப் புரியவில்லை. எல்லோரிடமும் அன்புடன் இருப்பது மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று நான் சொல்லவில்லை. சிலருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. சிலருக்கு இல்லை. சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள். சிலர் கடவுள் இல்லை என்று நம்புகிறார்கள். நம்பிக்கை என்றால் என்ன அர்த்தம்? உங்கள் உணர்வுக்கு அது இன்னும் வரவில்லை. அப்படி இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள். அப்படித்தானே? உங்கள் உணர்வுக்கு வராததைப் பற்றி ‘இருக்கிறது’, ‘இல்லை’ என்ற விவாதம் எதற்கு? ‘எனக்குத் தெரியவில்லை’ என்று சொல்லி விடுவதில் என்ன பிரச்சினை? அகங்காரத்தினால் வரும் பிரச்சினைதானே இது? நமக்கு தெரியாததை, ‘தெரியாது’ என்று ஏற்றுக்கொள்வதில் அவ்வளவு பிரச்சினையா? எனக்குப் புரியவில்லை.

 

எங்கிருந்து பிறந்தோம், எங்கே போகிறோம், ஒன்றும் புரியவில்லை. இங்கே இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது. எங்கிருந்து வந்தோம், எங்கே போவோம் என்பது தெரியுமா? ஒவ்வொரு கலாசாரத்திலும், ஒவ்வொரு விதமாக சொல்லிக்கொடுத்தார்கள். உங்கள் கலாச்சாரத்தில் சொல்லிக் கொடுத்ததை சார்ந்துதான் உங்கள் நம்பிக்கையும் இருக்கிறது. இந்தக் கலாச்சாரத்தில் பிறந்ததால் உங்களுக்குப் பலவிதமான கடவுள்கள் இருக்கிறார்கள். வேறு ஏதாவது கலாச்சாரத்தில் பிறந்திருந்தால் ‘ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார்’ என்பீர்கள்.

கடவுள் என்றால் என்ன? எங்கே இருக்கிறார்? எப்படி இருப்பார்? என்ற விவாதம் எப்பொழுதுமே இந்த உலகில் நடந்துக்கொண்டிருக்கிறது. அதிகமான கேள்விகள் கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியாது. கேள்வி கேட்டால் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் ஏதோ பொய்தன்மையில் இருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்? நான் உங்களைத் திட்டினால், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சரிதான். ஆனால் உங்களிடம் கேள்வி கேட்டாலே பிடிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? ஏதோ பொய்யுடன் தொடர்பு கொண்டு இருக்கிறீர்கள். கேள்வி கேட்டால் அதுபற்றி தெரிந்துவிடுமோ என்ற கவலையில் இருக்கிறீர்கள்.

இப்பொழுது ஈஷாவிற்கு வந்து சில விஷயங்கள் புரிந்ததுபோல் இருப்பதால் புதுவிதமான நம்பிக்கை வந்துவிட்டது. உங்கள் பக்கத்து வீட்டில் யாரோ இறந்துவிட்டார்கள். இப்பொழுது உங்கள் பழைய நம்பிக்கை அதிகமாகிறது. இது ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கை பற்றி கொஞ்சம் பயம் வந்தால் அப்பொழுது நம்பிக்கை வந்துவிடும். கொஞ்சம் எல்லாம் நன்றாக நடந்தால், “அவன் யார்? யாரடா அவன் கடவுள்?” என்று கேட்கிறார்கள். கொஞ்சம் கஷ்டம் வந்துவிட்டால் அல்லது கொஞ்சம் நோய் வந்துவிட்டால் “கடவுளே, என்னை எப்படியாவது காப்பாற்று” என்று ஆகிவிடுகிறது. இது ஒன்றும் புதிதல்ல. பழைய காலத்திலிருந்தே இப்படி நடந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது யாரோ ஒருவர் சொல்வதை நம்ப வேண்டும் என்ற விருப்பமா? அல்லது நீங்களாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பமா? புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை என்ன? முதலில் எனக்குத் தெரியாது என்பதை உணர வேண்டும். எனக்குத் தெரியாது என்னும் மனிதனுக்குத்தானே புரிய வைக்கமுடியும்? தெரியாதது பற்றி ஏற்கனவே ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்ட மனிதனுக்கு ஏதாவது புரிய வைக்க முடியுமா? எப்படி நாம் கடவுளைப் பற்றி இப்படி முடிவுக்கு வந்துவிட்டோம்?

இப்பொழுது படைத்தலில் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிற அம்சம் எது? இந்த உடல். இந்த உடலை நீங்கள் புரிந்துக்கொண்டுவிட்டால், எல்லா படைத்தலுக்கும் எது மூலமானது என்று உங்களுக்குப் புரிந்துவிடும்.

நாம், நமது தாயின் கருவிலிருந்து வெளியே வந்துவிட்டோம். நம்மைச் சுற்றி எங்கே பார்த்தாலும் இந்தப் படைத்தல் நடந்துக்கொண்டிருக்கிறது. இவ்வளவு படைத்தலை யார் பண்ணினார்கள்? உங்களை உங்கள் தாய் பெற்றுவிட்டார்கள். ஆனால் உங்கள் தாய் இந்த உலகத்தைப் படைத்த மாதிரி தெரியவில்லை. உங்கள் தாய், தந்தை அந்த மாதிரி திறமை இருக்கிறவர்களாகத் தெரியவில்லை. சுற்றி யாரைப் பார்த்தாலும் அப்படித் தெரியவில்லை. இதெல்லாம் எப்படி நடந்தது என்று கேட்டால் ‘அங்கே ஒருவர் இருக்கிறார்’ என்று மேலே கை காண்பித்து சொல்கிறார்கள். மேலே பார்த்தீர்கள். ஒன்றும் தெரியவில்லை. இப்படி மேலே பார்த்தே நடந்து, நடந்து நிறைய பேர் குழியில் விழுந்துவிட்டார்கள். இப்பொழுது நமது நாட்டில் அதுதான் பிரச்சனை.

நமது பிழைப்புக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களைக்கூட கடவுள்தான் நடத்தித் தர வேண்டும் என்று நாம் முடிவு எடுத்ததனால் உங்கள் ஆரோக்கியம், உங்கள் குழந்தையின் ஆரோக்கியம், உங்கள் பொருளாதாரம், உங்கள் தொழில் எல்லாமே கடவுள் பார்த்துகொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது உங்களுக்கு. இதனால்தான் நமது நாட்டில் எதுவும் சரியாக நடக்கவில்லை. இந்த நாட்டில் 13 லட்சம் கடவுள் இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? இருந்தாலும் 40 சதவிகித மக்கள் சரியாக சாப்பிடுவதற்குக் கூட வழி இல்லாமல் இருக்கிறார்கள். இல்லையா? கடவுள் பற்றி அதிகம் பேசி நாம் மனிதத்தன்மையை மறந்துவிட்டோம். அப்படியென்றால், எல்லாமே நான்தானா? அப்படியுமில்லை. இப்படிப் பார்த்தாலும் தப்பாகத் தெரிகிறது.

எனவே ‘எனக்கு வாழ்க்கையில் சிறிதுதான் புரிந்திருக்கிறது, மீதியெல்லாம் புரியவில்லை’ என்று புரிந்துக்கொள்ள முடியாதா உங்களால்? இது புரிந்தால் தெரிந்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. படைத்தலுக்கு எது மூலமானதோ, அதற்குதானே நீங்கள் கடவுள் என்று பெயர் கொடுத்தீர்கள். அப்படித்தானே? படைத்தலை நமது கண்களால் பார்த்ததனால்தானே, ‘இவ்வளவு படைத்தல் இருக்கிறது, இதற்கு அடிப்படை என்ன?’ என்ற கேள்வி நமக்கு வந்தது? இப்பொழுது, இந்த படைத்தலுக்கு மூலமானது எது? என்று எங்கே தேடினாலும் உங்களுக்குப் புரியாது. இப்பொழுது படைத்தலில் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிற அம்சம் எது? இந்த உடல். இந்த உடலை நீங்கள் புரிந்துக்கொண்டுவிட்டால், எல்லா படைத்தலுக்கும் எது மூலமானது என்று உங்களுக்குப் புரிந்துவிடும்.

இதுவரைக்கும் உங்கள் கலாசாரத்தில் ஏதோ ஒன்றை கடவுள் என்று சொல்லிக்கொடுத்தார்கள். இப்பொழுது நான் ஒன்று சொல்லிக்கொடுத்தேன். உடனே அந்த நம்பிக்கையை விட்டுவிட்டு இந்த நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டீர்கள். இதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். மறுபடியும் அதே பிரச்சினைதான். தெரியாததைத் தெரிந்த மாதிரி நடந்துகொள்வதுதான் பிரச்சினை. தெரியாததை, ‘தெரியாது’ என்று பார்த்தீர்கள் என்றால் குறைந்தபட்சம் நேர்மையான மனிதராகவாவது இருக்கிறீர்கள். தெரியாதது எல்லாவற்றையும் பற்றி ஏதோ ஒரு முடிவெடுத்து, தெரிந்தது மாதிரி நடந்தால் நேர்மைகூட இல்லாமல் இருக்கிறீர்கள்.

 

நீங்கள் எது சாப்பிட்டாலும், அது மனிதனாக மாறுகிறது. எனக்குள்ளேயும் அதேதான் நடக்கிறது. உங்களால் அதை உணரமுடியவில்லை. ஏனென்றால், உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. நீங்களே ஒரு பிரச்சினையாக இருக்கிறீர்கள். எப்பொழுது நீங்கள் ஒவ்வொரு கணத்திலேயும் ஆனந்தமாக இருக்கிறீர்களோ அப்பொழுது உங்கள் புரிந்து கொள்கிற தன்மையும் தெளிவுடன் இருக்கும். இந்தத் தெளிவிருந்தால்தான் நாம் எதையும் புரிந்துகொள்ளமுடியும். நாம் உணர்வது மட்டும்தானே நமக்கு உண்மை, மீதியெல்லாம் கதைதானே?

இப்பொழுது, நான் ஏதோ சொல்கிறேன். அது எனக்கு உண்மையாக இருந்தாலும், உங்களுக்கு அது கதைதானே? உங்கள் அனுபவத்தில் அது வரும்வரைக்கும் அது கதைதானே? கதை என்றால் அதன் மூலம் நீங்கள் ஊக்கம் பெறமுடியும்; அல்லது ஆறுதல் பெறமுடியும். ஆனால் விடுதலை பெறமுடியாது. முக்தி பெறமுடியாது. முக்திக்குத் தேவை உணர்தல். எதை எதை நம்மால் உணர முடிகிறதோ அது மட்டும்தான் உண்மை. எனவே உணரும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டுமா அல்லது புதுப்புதுக் கதைகளைத் தேட வேண்டுமா?

இதுவரை வேறொருவரிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தீர்கள். இப்போது என்னிடம் கதை கேட்கிறீர்கள். அதில் என்ன பயன்? புதுக்கதையினால் ஒரு பயனும் இல்லை. எனவே உணர்கிற தன்மையை ஆழப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான கருவி இப்பொழுது உங்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கருவியை நன்றாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு ஒரு நம்பிக்கையிலிருந்து இன்னொரு நம்பிக்கைக்குத் தாவிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1