கேள்வியாளர்: பயம் என்பது அவ்வளவு முடக்கக்கூடிய சக்தியாக இருந்தால், பிறகு ஏன் அது நம் வாழ்வில் அவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது? கடவுளுக்கு பயந்து நடக்க வேண்டும் என்று கூட நமக்குக் கூறப்பட்டுள்ளது.

சத்குரு: நீங்கள் கடவுளைப் பார்க்க கோவிலுக்கும், தேவாலயத்துக்கும், மசூதிக்கும் அல்லது இதுபோன்ற எந்த ஒரு இடத்திற்கும் போகவில்லை என்றாலும் மற்றும் அந்தந்த வாரத்துக்கான “காணிக்கை” செலுத்தாமல் போனாலும், கடவுள் கோபம் கொள்வார் என்று கூறுவது இப்போதெல்லாம் மக்களின் வழக்கமாக உள்ளது. அவர் உங்கள் குழந்தைகளை நோய்வாய்ப்படுத்தி, உங்கள் தொழிலைத் தலைகீழாக்கிவிடுவார் என்ற பயமுறுத்தல் வேறு! ஏதோ சிறிதளவு அறிவுடைய எவரும், இப்படிப்பட்ட மனிதனுக்கு அருகில் செல்லக்கூட விரும்ப மாட்டார்கள். இறைத்தன்மையை அவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக நாம் முன்னிறுத்தியுள்ளோம்.

பயமும், பக்தியும் இணைந்து செல்ல முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடவுளுக்குப் பயப்படும் நபராகிவிடாதீர்கள். இது பயத்தோடு அணுகுகின்ற விஷயமல்ல. பயம் உங்கள் செயலின் அடித்தளமாக இருந்தால், நிச்சயமாக அது உங்களுக்கு நன்மையைக் கொண்டு வராது. இறுதியாக நீங்கள் எதை அடைகிறீர்களோ, அது உங்களுக்கு நன்மையாக இருக்காது.

பயமும், பக்தியும் இணைந்து செல்ல முடியாது. உங்கள் இதயத்தில் பக்தி இருந்தால், பயம் உங்களுக்கு இருக்காது. உங்களிடம் பயம் இருந்தால் பக்தியை நீங்கள் இன்னமும் உங்கள் வாழ்க்கையில் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் இன்றைக்கு, மக்கள் பயபக்தி பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஏமாற்றம் அவ்வளவு ஆழமாகிவிட்டது. இப்போதெல்லாம் மக்கள் கடவுளை நேசிப்பவர்களாக இல்லை, கடவுளுக்குப் பயப்படுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுகிறார்கள். ஆகவே இயல்பாகவே கடவுளுக்கும் பயப்படுகிறார்கள். உங்கள் அடையாளம் ‘உடல் தன்மை’ என்ற அளவில் குறுகிவிட்டதால், எதைக் குறித்தும் நீங்கள் பயப்படுகிறீர்கள். பயம் என்பது இந்தத் தவறான அடையாளத்தினால் எழுந்துள்ள இயல்பான விளைவு.

உடல் தன்மையின் வரையறைகளைக் கடந்து, நீங்கள் உங்களையே உணரத் தொடங்கினால், பிறகு அங்கே பயம் என்ற கேள்விக்கு இடமில்லை.

உடல்தன்மையாக மட்டும் உள்ள உங்கள் அடையாளத்தின் வரையறைகளை நீங்கள் கடந்து செல்லும்வரை, பயம் எப்போதும் உங்கள் நண்பனாக இருக்கும். குறிப்பிட்ட ஒருசில கணங்களில் நீங்கள் அதுபற்றி மறந்திருக்கலாம். ஆனால் நீங்கள் பின்னால் திரும்பிப் பார்த்தால், அது அங்கேயேதான் இருக்கும். உடல் தன்மையின் வரையறைகளைக் கடந்து, நீங்கள் உங்களையே உணரத் தொடங்கினால், பிறகு அங்கே பயம் என்ற கேள்விக்கு இடமில்லை.

நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.