கடவுள் இல்லாமல் சந்தோஷமாக வாழ முடியுமா?
மனம் என்றாலே அதிகம் கேள்விகள் தான்... சிலவற்றிற்கு விடை கிடைக்கலாம், பலவற்றிற்கு கிடைக்காமல் போகலாம். சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே...
 
 

மனம் என்றாலே அதிகம் கேள்விகள் தான்... சிலவற்றிற்கு விடை கிடைக்கலாம், பலவற்றிற்கு கிடைக்காமல் போகலாம். சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே...

Question:கடவுளில்லாமல் சந்தோஷமாக வாழ முடியுமா?

சத்குரு:

கோவிலிலிருந்து வெளி வருபவர்களை விட உணவகத்திலிருந்து வெளிவருபவர்கள் சந்தோஷமான முகத்துடன் வருவதை பார்க்க முடிகிறது. ஒரு தோசையும் இட்லியும் தெய்வீகத்துடன் போட்டியிட முடியுமா என்பது சிறு வயதில் எனக்குள் இருந்த ஆழமான கேள்வி. இதனால், நான் உணவகத்து வாயில்களிலும் கோவில் வாசல்களிலும் மக்கள் முகத்தைப் பார்ப்பதில் பொழுதை கழித்ததுண்டு. இது எதனால் என்று பார்த்தபோது, மக்களுக்குள் தெய்வீகம் என்பது ஓர் அனுபவமாக இல்லாது இருக்கிறது. தெய்வீகம் என்பது சமூகம், கலாச்சாரம் சார்ந்த ஓர் அடையாளம் என்றே மக்கள் நினைக்கின்றனர். சரி, “நாம் கடவுள் இல்லாமல் சந்தோஷமாக வாழ இயலுமா?” என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால், வாய்ப்பே இல்லை என்றே சொல்ல முடிகிறது. தெய்வம் என்று நீங்கள் அழைப்பது எதனை? படைப்பின் மூலத்தைத்தானே கடவுள் என அழைக்கிறீர்கள். இந்தப் படைப்பும், இந்தப் படைப்பின் மூலம் இல்லாமலும் நாம் வாழ முடியுமா என்ன? அது சாத்தியம்தானா?

Question:சத்குரு, நீங்கள் சேகுவேரா பற்றி பேசி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர் “நீங்கள் சீற்றத்தில் இருந்தால் எங்களுள் ஒருவர்,” என்று சொல்லி இருக்கிறார், அது பற்றி உங்கள் கருத்தென்ன?

சத்குரு:

சே வின் பேச்சுக்கள், செய்கைகள் மூலம் அவர் மிகப் பிரபலம் அடைந்தார். இன்றுகூட அவர் உருவம் பதித்த டிசர்டுகள் அதிகப்படியாய் விற்பனை ஆகின்றன. அவர் யாரென தெரியாமலே மக்கள் அந்த டிசர்டுகளை வாங்குகின்றனர். அவரை தீவிரவாதி என அழைக்கும் அளவிற்கு அவர் தீவிரமாய் இருந்தார். எங்கு அநீதியைக் கண்டாலும் அவர் பொங்கி எழுந்தார். “நீங்கள் சீற்றத்தில் இருந்தால், நீங்கள் எங்களில் ஒருவர்,” என்று அவர் சொன்னது அவர் சீற்றத்தில் சொன்ன வாசகம். என் பால்ய வயதுகளில் இந்த வாசகம் என்னை குடைந்தெடுத்தது. நான் அவரால் பெரிதும் தூண்டப்பட்டேன் என்று சொல்லலாம். அதனால் அநீதியைக் கண்டால் என் உள்ளம் துடிக்கும். எதைக் கண்டாலும் கோபம் வெடிக்கும். அதன்பின் எனக்குள் நடந்த உள்ளனுபவம், எனக்குள் பல மாற்றத்தை உண்டாக்கியது. சமீபத்தில் கூட, நீங்கள் கேட்டது போல, ஜவஹர்லால் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த சிலர் என்னிடம் இதே வாசகத்தைச் சொல்லி, “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றனர். “நீங்கள் சீற்றத்தை கடந்தவராய் இருந்தால் நீங்கள் எங்களில் ஒருவர்” என்றேன் நான்.

Question:என் திருமண உறவு மிக கசப்பாக உள்ளது, துறவறம் மேற்கொண்டு விடலாமா என்றுள்ளது. திருமணத்தில் இத்தனை கசப்பு ஏன்?

சத்குரு:

எங்கே தவறு நடக்கிறதோ, எங்கே செய்யக் கூடாததை செய்கிறீர்களோ அது துயரமயம் ஆகிவிடுகிறது. அதற்காகத் திருமணமே தவறு என்று பொருளல்ல. அது இரண்டு பேர் ஒருவிதமான பகிர்தலோடு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு. ஒருவர் விரும்பினால், விழைந்தால் இனிமையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் போதிய மனமுதிர்ச்சி இல்லாதவர்கள் அளவுக்கதிகமான பற்றுதலை வளர்த்துக் கொண்டு, ஒருவரையொருவர் பயன்படுத்தி வாழப்பார்க்கிறார்கள். உங்களுக்கென்று ஒரு வாழ்க்கையிருந்தால் அதைப் பகிர்ந்துகொண்டு வாழ முடியும். ஆனால் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொள்ள முனைந்தால் திருமணம் தோல்வியடையும். நீதிமன்றம் வரை போகாவிட்டாலும், தனி வாழ்க்கையிலாவது இந்தத் தோல்வி இருக்கும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1