நம்மைப் படைத்த கடவுளை அவன், இவன் என்று குறிப்பிடுகிறோமே, உண்மையில் அந்தக் கடவுள் ஆண்தானா? சத்குரு என்ன சொல்கிறார்? பதில் உள்ளே...


Question: படைத்தவனை அவன் இவன் என்று குறிப்பிடுகிறோமே, கடவுள் ஆணா?

சத்குரு:

சில மாதங்களுக்கு முன், அமெரிக்காவில் வகுப்பு எடுத்தேன். அங்கே, ஒரு ஜோக் சொல்கையில் கடவுளை அவன் என்று குறிப்பிட்டு விட்டேன். உடனே வகுப்புக்கு வந்திருந்த பெண்ணில் ஒருவர் ஆட்சேபித்து எழுந்தார். ‘கடவுளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர் ஆண் தான் என்று எப்படிச் சொல்வீர்கள்? ஏன் அவர் பெண்ணாக இருக்கக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பினார் அந்தப் பெண்.

நம் கலாச்சாரத்தில் அந்தப் பிரச்சனை இல்லை. இங்கே ஆண் கடவுள், பெண் கடவுள், குரங்குக் கடவுள், பறவைக் கடவுள், மீன் கடவுள், சிலந்திக் கடவுள் என்று எல்லா இனக் கடவுள்களும் உள்ளனர். நடப்பன, நீந்துவன, பறப்பன என்று எல்லா வடிவங்களிலும் கடவுளைக் கொண்டாடும் தேசம் இது. மற்ற கலாச்சாரங்களில் அப்படி இல்லை. பெரும்பாலும் கடவுளை ஆணாகத் தான் குறிப்பிடுகிறார்கள். சரி, கடவுள் எப்படி இருப்பார்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனிதன் கடவுள் தன்னைவிட ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவராக இருப்பார் என்று தீர்மானித்து, கடவுளுக்குக் கூடுதல் உறுப்புகள் கொடுத்தான். மூன்று கண்கள், நான்கு கைகள், ஆறு முகம் என்றெல்லாம் வடிவமைத்தான். கடவுள் மனித வடிவில் இருப்பார் என்று மனிதன் எண்ணுகிறான். ஆனால் ஒரு கழுதைக்கோ கடவுள் என்பவர் பிரமாண்டமான கழுதைதான்.

நம் ஐம்புலன்களை வைத்துக் கொண்டு கடவுளைப் புரிந்து கொள்ள முயலும்போது, இப்படித்தான் குறைபாடாக முடியும்.

Question: விரதம் என்ற பெயரில் பட்டினி இருப்பது சரிதானா?

சத்குரு:

எப்போதும் உடலை வருத்தி விரதம் இருக்கக்கூடாது. இயற்கையாகவே 11லிருந்து 14 நாட்களுக்கு ஒருமுறை ஏதோ ஒரு நாள் உங்கள் உடல் உங்களிடம் உணவு கேட்காது. நீங்கள் அந்த நாளைக் கண்டுபிடித்து அந்த நாளில் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நாளை உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் 14ம் நாள் நீங்கள் விரதம் இருந்து கொள்ளலாம். இந்தியாவில் கூட ஏகாதசி என்று சொல்லி 14 நாட்களுக்கு ஒருமுறை விரதம் இருக்கிறார்கள். ஆனால் விரதமிருக்கும்போது மௌனத்தை கடைபிடிப்பது போன்ற சில ஆன்மீகப் பயிற்சிகள் மிகவும் அவசியம். அந்த அளவிற்கு உங்களுக்கு நேரமில்லை என்றால் விரத நாளன்று பழ உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் கடைப்பிடிக்காமல் விரதமிருக்கிறேன் என்று சாப்பிடாமல் பட்டினி இருப்பது, உடலை கெடுத்துக் கொள்வதில் போய் முடியும்.

Question: அண்மையில் பெண்கள் மீது அமிலம் வீசுவதும், கத்தியால் குத்துவதும் அதிகமாகி விட்டதே, காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?

சத்குரு:

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஏழ்மை பலரது கண்ணியத்தைக் கரைத்து விட்டது. பழைய பண்பாடுகளுக்கும், புதிய சுதந்திரத்துக்கும் இடையிலான போராட்டம் ஆங்காங்கே வெடிக்கிறது.

நம் தேசத்தில் இந்தத் தருணத்தில் முறிவுபட்ட ஒரு கலாச்சாரத்தையே காண்கிறோம். பெண்கள் காமத்தைத் தூண்டும் காட்சிப் பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலமாக நம் வீட்டுக்குள் வந்து இறங்குவதும் ஒரு காரணமாக இருக்கலாம். தூண்டப்பட்ட காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் தடுமாறும் ஆண்வர்க்கம் வக்கிரமான இச்செயல்களில் ஈடுபடக் கூடும். ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் அடுத்தவரைச் சமமாக மதிக்கக் கற்றுத் தரவேண்டிய அவசியமானதொரு கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

Benson Kua@flickr