கடலுடன் காதல் கொள்ளாத மனிதர்கள் மிகக் குறைவு. அலை மீது காதல், நுரை மீது காதல், மணல் மேல் தீராக் காதல் என்று நம்மை கடல் படுத்தும் பாடு சற்று பிரம்மிக்க வைக்கிறது. சத்குருவையும் விட்டு வைக்கவில்லை இந்த காதல்! கடல் தன்னை பாடாய் படுத்திய கதையை இங்கு சத்குரு நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...

சத்குரு:

என் நான்காவது வயதில்தான் முதன்முதலாக அலைகடலைப் பார்த்தேன். உடனே காதலில் விழுந்தேன். அப்போதெல்லாம் என் தாத்தாவின் கீழ் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பெரிய குழுவாகப் பயணங்கள் செல்வோம். பெரும்பாலும் ஆலய உலாவாகவே அது அமையும்.

ஆரம்பத்திலிருந்தே இந்த உயிரின் மூலாதாரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்ததால், கடல் மீது எனக்குத் தணியாத மோகம் பிறந்ததோ?

அந்த முறை தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்குப் போயிருந்தோம். என் அண்ணனை அலைகளுக்கு அழைத்துச் செல்ல அவன் விடவில்லை. அதே அலைகளிலிருந்து என்னைப் பிரித்து இழுத்து வர நான் விடவில்லை. இருட்டிய பிறகு, வலுக்கட்டாயமாக என்னை அங்கிருந்து இழுந்து வர வேண்டி இருந்தது.

அடுத்து திருச்செந்தூர் சென்றோம். அந்தக் கடலை என்னால் மறக்கவே முடியாது. அங்கே இருட்டிய பிறகும் நான் விலகத் தயாராக இல்லை. 'காய்ச்சல் வரும், கடல் அடித்துச் சென்றுவிடும்' என்று பயமுறுத்தினார்கள். 'கோயிலுக்குத்தானே வந்தோம்' என்று அதட்டினார்கள். 'கோயிலில் எனக்கு ஆர்வம் இல்லை. கடலில்தான் ஆர்வம்' என்று பிடிவாதம் பிடித்தேன்.

நான் செய்த ஆர்ப்பாட்டத்தில், வேறு வழி இல்லாமல், ஒரு டிரைவரை என்னுடன் துணைக்கு அனுப்பி வைத்தார்கள். இருட்டில் அந்த அலைகள் என்னைத் தேடிவந்து மோதி மோதி நனைத்தன. முற்றிலுமாக நனைந்துகொண்டு முன்னிரவு வரை செலவு செய்த அந்த நிமிடங்கள், எனக்கு அளித்த ஆனந்தம் விவரிக்க முடியாதது.

சிறு வயதில் கடல் பயணங்கள் பற்றி எந்தப் புத்தகம் வந்தாலும் ஆவலுடன் ஒரே மூச்சில் படித்துவிடுவேன். பிற்பாடு கடலோரமாக நான் பயணங்கள் செய்தபோது, ஓட்டல்களில் தங்க விரும்பியதில்லை. கடற்கரையில் திறந்த மணல்வெளியில் படுத்து உறங்குவதே என் விருப்பம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பதினெட்டு வயதுக்குப் பிறகு, தொழில் துவங்கும் ஆசை வந்தபோது, மீன்பிடித் தொழிலில் ஈடுபட ஆசைப்பட்டேன். அப்போது 'பர்ஸ் ஸீன்' (Purse-seine) முறையில் மீன் பிடிப்பது பிரபலமாகிக் கொண்டு இருந்தது. கடலுக்குள் செங்குத்தாகச் சுவர் போல் ஒரு வலை. மேல் பகுதியில் மிதவைகள். கீழ்ப்பகுதியில் பாரங்கள் வைத்து அமைக்கப்பட்ட இந்த வலைகளில், கூட்டமாக வரும் மீன்கள் சிக்கிக் கொள்ளும்.

கீழே உள்ள கயிற்றை இழுத்தால், சுருக்குப்பை போல் அதன் கீழ்வாய் குறுகி, மீன்கள் தப்பிக்க முடியாமல் சிறைப்பட்டுவிடும். இந்த வலைகளைப் பயன்படுத்தும் படகுகள், கடலில் வட்டமிட்டு மீன்களை நெருக்கி வலைப்பகுதிக்குள் தள்ளும்.

இதற்கான பயிற்சி முகாம் ஒன்று கார்வாரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் எழுந்த பலத்த எதிர்ப்பை மீறி, பயிற்சி முகாமுக்குப் போனேன். அது மீன்பிடித் தொழிலாளர்களுக்கான பயிற்சியாக அமைந்திருந்தது. பயிற்சி நடந்த பன்னிரண்டு நாட்களும் கடற்கரையில் இரைச்சல்களுக்கு நடுவில்தான் உறங்கினேன்.

வேறு சில காரணங்களுக்காக அந்தத் தொழிலில் ஈடுபட முடியாமல் போனது. ஆனால் கடல் மீது எனக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை.

சைக்கிளில், மேற்குக் கடற்கரையை ஒட்டி பல பயணங்கள் மேற்கொண்டு இருக்கிறேன். அந்தப் பகுதியில் 'ஹந்தி ஹோண்டா' என்ற கடற்கரை எனக்கு மிகப் பிடித்தமான கடற்கரை.

திருமணமான பின் மனைவி விஜியை அங்கே அழைத்துப் போனேன். பெங்களூரில் வாழ்ந்திருந்த அவள், கடற்கரையையே பார்த்ததில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

மணல்வெளியில் இரவில் அமர்ந்திருந்தோம். பௌர்ணமி இரவு என்பதால், அலைகள் ஆர்ப்பரித்தன. நிலவின் பிரதிபலிப்பைச் சுமந்து பொங்கி வரும் அலைகள் கண்டு எனக்குப் பரவசம். ஆனால், அவள் கண்களில் பீதி.

"இந்த அலைகள் உன்னை விழுங்கிவிடாது" என்று அவளுக்கு மறுபடி மறுபடி தைரியமூட்டினேன். ஒரு கட்டத்தில் அவள் பதற்றம் நின்றது. இரவு ஏற ஏற, அலைகள் மிக ரம்யமாகப் பளபளத்தன. அதற்குப் பிறகு, விஜி பலமுறை என்னுடன் கடற்கரைக்கு வந்திருக்கிறாள். அன்றைக்கு பயந்த விஜியா இது என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு கடல் மீது அவள் பைத்தியமாகவே இருந்தாள்.

கடல் மீது எனக்கு ஏன் இந்த ஆர்வம்? யோசித்தேன்.

டார்வின் தியரி என்ன சொல்கிறது? முதலில் முற்றிலும் கடலாக இருந்தது. கடல் உள்வாங்கி ஆங்காங்கே நிலப்பகுதி தோன்றியது. முதல் உயிரினம் கடலில்தான் தோன்றியது. அது ஊர்ந்து வெளியே வந்து நிலப்பகுதியில் பரிமாண வளர்ச்சி கண்டது. நம் புராணங்களும் அதேதான் சொல்கின்றன. ஆரம்பத்திலிருந்தே இந்த உயிரின் மூலாதாரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்ததால், கடல் மீது எனக்குத் தணியாத மோகம் பிறந்ததோ?

ஒரு தத்துவவாதி மீன் இருந்தது. ஒருநாள் அது மிகவும் சோகமாகக் காணப்பட்டது. அதைக் கடந்து போன இன்னொரு மீன் கேட்டது, "எதற்காக இந்தச் சோகம்?"

தத்துவவாதி மீன் சொன்னது, "என்னைப் பார்க்கும் பலர் சமுத்திரம், கடல் என்றெல்லாம் பேசுகிறார்கள். அது எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை. பல திசைகளில் பல நாட்களாக நீந்தித் தேடிக் களைத்துவிட்டேன். அந்தக் கடல் என் கண்களில் மட்டும் படவே இல்லை," என்றது.

"அட முட்டாளே... நீ இருப்பதே கடல்தான்" என்றது அடுத்த மீன்.

உங்கள் பிரச்சனையும் அதுதான். தெய்வீகம் எங்கே எங்கே என்று தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சுவாசிப்பதும் அதைத்தான். அருந்துவதும் அதைத்தான். உண்பதும் அதைத்தான். நடப்பதும் அதன் மீதுதான். ஆனால், அதை உணர்ந்து கொள்ள உங்கள் ஐம்புலன்கள் போதாமல் தவறவிடுகிறீர்கள்!

வா! ஒன்றிடு!
விரும்பி அழைத்தது விரிகடல்
மேலும் கீழுமாய்
நேரும் குறுக்குமாய்
நீந்திக் களைத்தேன்
நீள்கடல் நிராகரித்தது
நீரை ருசித்தேன்
நிஜம் புரிந்தது
உப்பு பொம்மையானேன்
உவந்து குதித்தேன்
கடல் கொண்டது
கடலே ஆனேன்!

- சத்குரு

ahisgett @ flickr