நம் கலாச்சாரத்தில் காக்கைக்கு உணவிடும் பழக்கம் வேரூன்றி விட்டதாலோ என்னவோ அன்று கா... கா... கா... பாடல் பெருத்த வெற்றி பெற்றது! காக்கையை நம் பித்ருக்களின் தூதுவர் என்னும் நம் நம்பிக்கையின் சாரமென்ன? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்...


கேள்வி:

இறந்தவர்களுக்கு திதி செய்யலாமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

செய்யலாம், ஆனால் வேறுவிதமாக!

உங்கள் அப்பாவோ தாத்தாவோ இறந்துவிட்டார்கள். உயிரோடு இருந்தபோது உங்களுக்கும் அவர்களுக்குமான உறவுகள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். உங்களுக்கு சொத்தோ, வேறு வசதிகளோ செய்து கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் மூலமாகத்தான் நீங்கள் இந்த உடலைப் பெற்றீர்கள். அவர்கள் உங்களுக்கு உயிரைக் கொடுக்கவில்லை என்றாலும் இந்த உடலைக் கொடுத்தார்கள்.

ஒரு நாளாவது காகத்துக்கு உணவு அளியுங்கள். அதுவே உங்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆனால், அவர்களை நீங்கள் தினமும் நினைவுக்குக் கொண்டுவருவதில்லை, ஏற்கெனவே, அவர்களை ஆணியில் அடித்து சுவற்றில் தொங்கவிட்டுவிட்டீர்கள். குறைந்தபட்சம் அவர்களைப்பற்றி வருடத்துக்கு ஒரு முறையாவது நினைக்கலாம். அவர்கள் பெயரில் ஏதோ ஒன்று நீங்கள் செய்யலாம். அவர்களுக்கு உங்கள் உணவோ அல்லது வேறு எதுவுமோ தேவை இல்லை. அவர்கள் பெயரில் நீங்கள் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். அப்போது காகம், பசு போன்றவற்றுக்கும் சிறிது உணவைக் கொடுங்கள். எப்போதும் நீங்கள் காகத்தைத் துரத்தியடிக்கிறீர்கள். குறைந்தபட்சம் ஒரு நாளாவது அவற்றுக்கு உணவு அளியுங்கள். அதுவே உங்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

எப்படியும் நீங்கள் சமைக்கிறீர்கள். காகம், பசு போன்றவற்றுக்கு உணவு அளிக்கிறீர்கள். அப்போது உணவு தேவைப்படும் பலருக்கோ சிலருக்கோ சேர்த்து நீங்கள் உணவளிக்கலாம். உறவினர்கள் அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கெனவே நன்கு சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

எனவே, அந்தச் சடங்கை நடத்தினால், சமைத்து மற்றவருக்குப் பரிமாறுங்கள், அல்லது நீங்கள் சாப்பிடுங்கள். எப்படியும் உங்கள் அப்பா வந்து சாப்பிடப் போவதில்லை. உயிருடன் இருந்தவரை, அவருக்கு உணவு தேவையாக இருந்தது. இப்போது அவருக்கு உணவு தேவை இல்லை. அப்பாவின் பெயரில் உணவு தேவைப்படும் சிலருக்கு உணவளிக்கலாம். இப்படிச் செய்தால், உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையுமோ அடையாதோ, அது நமக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக உங்கள் ஆத்மா சிறிது சாந்தி அடையும்.

அதுதான் மிகவும் முக்கியமானது. இதுபோன்ற பணிகளைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். இந்த நோக்கில்தான் முன்பு சடங்குகள் உருவாக்கப்பட்டன.

யாருக்கோ எதன் பெயரிலோ கொடுப்பதுதானே வாழ்க்கை. அதை சடங்காக அல்ல, வாழ்க்கையாக்கி கொள்ளுங்களேன்!

Photo Courtesy : puzzlescript @ flickr