சத்குரு சொல்லும் குட்டிக் கதைகளில், தெனாலிராமனின் சுவாரஸ்யமான இரு கதைகள் இங்கே...

சத்குரு:

ஜோசியக்காரரே... உங்க ஆயுள் எவ்வளவு?

ஒருமுறை பீஜப்பூர் சுல்தான், கிருஷ்ணதேவராயர் நாட்டின் மீது போர் புரிய, பெரிய படையுடன் வந்தார். அங்கே ஆற்றில் மிகவும் அதிகமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எனவே, அக்கரையில் கூடாரம் போட்டு அங்கேயே உட்கார்ந்து சரியான சூழலுக்காகக் காத்திருந்தனர். கிருஷ்ணதேவராயருக்கு இந்தத் தகவல் எட்டியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆற்றின் போக்கு உள்ளூர்க்காரனுக்குத் தானே தெரியும்! எளிதில் ஆற்றைக் கடந்து, அவர்களை முதலில் முடித்து விடலாம். ஆற்றில் வெள்ளம் வடிந்துவிட்டால், அவர்கள் நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்’ என்று யோசனை தோன்றியது.

எந்தவொரு பெரிய முடிவு எடுப்பதாக இருந்தாலும் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் கேட்டு முடிவெடுப்பதே அரசரின் வழக்கம். அந்த ஜோசியர், “இப்போது நீங்கள் சென்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து, நீங்கள் அடுத்த திங்கட்கிழமை செல்லுங்கள்!” என்று சொல்லிவிட்டார். அரசருக்கு ஒரே கவலை!

இது தெனாலிராமன் காதில் விழுந்தது. அவர் அந்த ஜோசியரை வரவழைத்து, “உங்கள் ஜாதகப்படி நீங்கள் எத்தனை வருடம் இருப்பீர்கள்?” என்று கேட்டார். ‘‘70 வருடம்’’ என்று ஜோசியர் பதில் சொன்னார். “சரி; நான் உன் உயிரை இப்போது எடுக்கப்போகிறேன். நீதான் எப்படியிருந்தாலும் சாகமாட்டாயே!” என்று தெனாலிராமன் தன் வாளை உருவினார். உடனே ஜோசியர் பயந்து, பீஜப்பூர் சுல்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டார். பின், உடனே போர் புரிந்து கிருஷ்ண தேவராயர் வெற்றி பெற்றார்.

ஜாடியும் உயிரும் ஒண்ணா?

ஒருமுறை அரசர் கிருஷ்ணதேவராயர் அரசவைக்கு வருகை தந்த சீனப் பயணி ஒருவர் ஆசைப் பரிசாக வழங்கிய நான்கு பீங்கான் ஜாடிகளைப் பெரிதும் போற்றிப் பாதுகாத்து வந்தார். ஒரு நாள் பணியாளர் ஒருவர், கை தவறி அந்த ஜாடிகளுள் ஒன்றைக் கீழே போட்டு உடைத்துவிட்டார். அதைக் கண்ட கிருஷ்ணதேவராயர் கடும் கோபமடைந்தார். ஜாடியை உடைத்த பணியாளருக்குத் தூக்குத் தண்டனை விதித்துவிட்டார்.

தூக்குத் தண்டனை பெற்ற அந்த ஏழைப் பணியாளர், மிகவும் மனம் வருந்தியவராய் தெனாலிராமனிடம் நடந்ததைக் கூறினார். அதனைக் கேட்ட தெனாலிராமன் அவருக்கு ஒரு ஆலோசனை கூறினார்.

மறுநாள் காலை மன்னர் முன் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக அழைத்து வரப்பட்டார் அந்தப் பணியாளர். அப்போது வழக்கம்போல, “உனது கடைசி ஆசை என்ன?” என்று அவரிடம் கேட்டனர்.

“நான் மீதமிருக்கும் மூன்று பீங்கான் ஜாடிகளைப் பார்க்க விரும்புகிறேன்” என்றார்.

அவர்கள் மீதமிருந்த ஜாடிகளைக் கொண்டு வந்து வைத்தனர். திடீரென்று அந்த ஜாடிகளை உடைத்து நொறுக்கினார் அவர். அதைப் பார்த்த மன்னர், கோபம் கொப்புளிக்க எழுந்தார். “ஏய் என்ன செய்தாய்? ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கத்தினார்.

அதற்கு அந்த மனிதர் “ஒரு உடையக்கூடிய பீங்கான் ஜாடிக்காக எப்படியும் எனது உயிர் பறிபோகப் போகிறது. அதற்கு முன் மீதமிருக்கும் மூன்றையும் உடைத்து, போகவிருக்கும் இன்னும் மூன்று உயிர்களைக் காப்பாற்றினேன்.” என்றார்.

சந்திரன்