இதுவே கடைசி சந்திப்பாக இருந்தால்...
ஐரோப்பாவில் இருக்கும் ஆஸ்டிரியா எனும் நாட்டில், 1939-ல் - அதாவது ஹிட்லரின் அராஜகத்தில் யூதர்கள் எல்லாம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் ஒரு வசதியான யூத குடும்பத்தின் மாளிகைக்குள் ஹிட்லரின் படை நுழைந்தது...
 
இதுவே கடைசி சந்திப்பாக இருந்தால்..., Ithuve kadaisi santhippaga irunthal
 

சத்குரு:

ஐரோப்பாவில் இருக்கும் ஆஸ்டிரியா எனும் நாட்டில், 1939-ல் - அதாவது ஹிட்லரின் அராஜகத்தில் யூதர்கள் எல்லாம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் ஒரு வசதியான யூத குடும்பத்தின் மாளிகைக்குள் ஹிட்லரின் படை நுழைந்தது. நுழைந்தவர்கள் அம்மாளிகையைக் கைப்பற்றிக் கொண்டு, அக்குடும்பத்தின் பெரியவர்களையும், குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்து அகதிகள் முகாமுக்காக ஒரு ரயில் நிலையத்துக்கு அனுப்பினர். அதில் 13 வயது நிரம்பிய சிறுமியும், அவளது 8 வயதே ஆன தம்பியும் அடங்குவர்.

ஆஸ்டிரியாவில் குளிர் சற்றே அதிகமாக இருந்தது. வசதியான குடும்பத்துக் குழந்தைகள்... இப்போது ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் மூன்று நாட்களாகத் தங்கியிருக்கின்றனர். பெற்றோர்கள் எங்கிருக்கிறார்கள் என்றுகூட இவர்களுக்குத் தெரியாது. படை வீரர்களின் கண்காணிப்பில், எப்போதும் துப்பாக்கி முனையில் இவர்கள் இருந்தனர். இது மிகவும் மோசமான சூழ்நிலைதான்... ஆனால் இவர்கள் குழந்தைகள் ஆயிற்றே! சிறிது நேர சோகத்திற்குப் பின் விளையாடுவதற்கு ஏதோ கண்டுபிடித்து அவர்கள் விளையாட ஆரம்பித்தனர். அந்தச் சிறுவன் எதையோ கால்பந்துபோல் பாவித்து சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

மூன்று நாட்கள் கழித்து அங்கு ஒரு ரயில் வந்தது. அதுவும் சரக்குகள் ஏற்றும் ரயில்தான். அங்கிருந்த எல்லோரையும் பிடித்துத் தள்ளி ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்தச் சிறுமி, தன் தம்பி அவனின் ஷூக்களை மறந்து விட்டுவிட்டு வெறும் காலோடு ஏறியிருப்பதைப் பார்த்தாள். இனி எங்கிருந்து ஷூ கிடைக்கும்? குளிர்காலம் வேறு... நிலைமை இன்னும் மோசமாகக்கூட ஆகலாம். இதை நினைத்து கோபமுற்ற அவள், தம்பியின் காதுகளைத் திருகி, அவனைக் கிள்ளி நன்றாகத் திட்டியும் விட்டாள்.

அடுத்த நிறுத்தத்தில், பையன்களும் பெண்களும் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். ஐந்தரை ஆண்டுகள் கழித்து, 1945-ல் அந்தச் சிறுமி அவளது முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டாள். அவளது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை என்பதை அறிந்தாள்... அவளின் தம்பி உட்பட!

அந்த நொடியில் அவளுக்குத் தோன்றியதெல்லாம், தன் தம்பியுடன் அவள் இருந்த அந்தக் கடைசித் தருணத்தில், அவனுக்கு எத்தனை சங்கடமாக, வேதனை அளிக்கும்விதமாக அவள் நடந்து கொண்டுவிட்டாள் என்பதுதான். அவன் காதுகளைத் திருகி, அவனை அடித்து, மிகக் கடுமையான சொற்கள் கொண்டு திட்டி... இத்தனையும் அவன் காலணிகளைத் தொலைத்துவிட்டான் என்பதற்காக! அன்று அவள் முடிவு செய்தாள்: “இனி நான் யாரைச் சந்தித்தாலும் பரவாயில்லை, அவர்களுடன் நான் பேசுவதும் பழகுவதும், ஒருவேளை அதுதான் அவர்களை நான் சந்திக்கும் கடைசிச் சந்திப்பாக இருக்கலாம் என்ற நினைவோடு, என்றும் நான் வருந்தும் விதமாக பேசவே மாட்டேன்!” என்று.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1