Question: நான் என்னை ஈஷாவிற்கு முழுமையாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னமும் என் கைகளும் கால்களும் உழைத்து ஓய வேண்டியதிருக்கிறது. அப்படியிருக்கும்போது நான் என்னை எப்படி ஈஷாவிற்கு கொடுப்பது?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் எல்லோருக்கும் அவர் கேட்ட கேள்வி புரிகிறதா? அவர் கேட்டது இது தான். “சத்குரு, நான் உலகில் பணம், உணர்ச்சிகள் மற்றும் இன்னும் பலவற்றில் முதலீடுகள் செய்துள்ளேன். (சிரிக்கிறார்) இதுபோன்ற முதலீடுகளை விட்டுவிட்டு வர சிலகாலம் ஆகும். எனவே அதுவரைக்கும் நான் எப்படி என்னை ஈஷாவுக்கு முழுமையாகக் கொடுப்பது?” என்று கேட்கிறார்.

துன்பம் மனிதர்களைப் பக்குவமடையச் செய்கிறது. அல்லது துன்பம் மனிதர்களை விழிப்புணர்வு அற்றவர்களாக ஆக்குகிறது.

நீங்கள் முதலில் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஈஷா என்பது ஒரு நிறுவனம் அல்ல. ஈஷா என்பது ஒரு அமைப்பும் அல்ல. ஈஷா என்பது ஒரு கருவி - ஒருவருடைய வளர்ச்சிக்கான கருவி. இது உங்களுக்கு மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். இது நிறுவனமோ, மதமோ, கலாச்சாரமோ கிடையாது. இது ஒரு கருவி - மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்ட கருவி. இங்கு வரும் ஒவ்வொரு நபருக்கும் அது வேலை செய்யும். அவ்வளவு கவனமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அது ஒரு அரிசி ஆலையைப் போன்றது. ஆலையில் நெல்லை போட்டால் அரிசி தானாகக் கிடைக்கிறது அல்லவா, அதுபோலத்தான்.

ஈஷாவிற்கு எப்படி உங்களை அர்ப்பணிப்பது என்று கேட்டீர்கள். முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும், வேறு வழி இல்லை. அப்படியென்றால் ஆசிரமத்திற்கு வந்து நான் வாழ வேண்டுமா என்றால் அப்படி அவசியமில்லை. அது உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் உங்களை முழுமையாகக் கொடுக்க விரும்பினால், முதலில் உங்களை மூடியிருக்கும் தவிடு வெளியே வர வேண்டும். நெல் ஆலைக்குள் போகும்போதுதானே தவிடு பிரிந்து அரிசியாகும்? அப்படியென்றால் நீங்கள் ஆலைக்குள் இறங்கிதானே ஆக வேண்டும்? ஆலைக்குள் இறங்காமல் உங்களை மூடியிருக்கும் தவிடு வெளிவருமா?

அரிசி வெளிவர வேண்டுமென்றால், நீங்கள் ஆலைக்குள் தலையை விட்டுத்தான் ஆக வேண்டும். அதற்காக ஈஷா ஆசிரமத்திற்கு வந்து வாழ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஈஷா எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளும் வரையறுக்கப் பட்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் பங்களிப்பு முழுமையாக இருக்க வேண்டும். உங்களில் பாதி மட்டும் உள்ளே நுழைவது, வேலை செய்யாது.

உங்களுடைய ஒரு கையை மட்டும் ஆலைக்குள் விடுவது உங்களுக்கு வலியைக் கொடுப்பதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், எனக்கு இதிலிருந்து எதுவும் கிடைக்காது என்ற தவறான முடிவிற்கும் வந்துவிடுவீர்கள். ஆமாம், நீங்கள் உங்களை கால்பங்கு, அரைபங்கு, முக்கால் பங்கு என்று கொடுத்தால், உங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் உங்களை முழுமையாகக் கொடுத்தால் மட்டுமே, உங்களுக்கு ஏதேனும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

உங்களை முழுமையாகக் கொடுப்பது என்றால், நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருப்பது, அல்லது குறிப்பிட்ட செயல்களைச் செய்வது என்று அர்த்தமல்ல. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை முழுமையாகக் கொடுக்க முடியும். எங்கிருந்தாலும் நீங்கள் ஈஷாவை உணரமுடியும். ஈஷா என்றால் எல்லையில்லாத இறைத்தன்மை என்றுதான் அர்த்தம். நீங்கள் குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும் அதையும் நீங்கள் உங்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் அல்லது வியாபாரத்தில் இருக்கிறீர்கள், அந்த சூழ்நிலையையும் நீங்கள் உங்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இப்படி உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொன்றும், உங்கள் குடும்பம், உங்கள் வேலை, உங்கள் வாழ்க்கை போன்ற எல்லாமும் உங்கள் உணர்தலை நோக்கியே இருக்கும் என்றால், பிறகு நீங்கள் உங்களை ஈஷாவிற்கு அர்ப்பணித்ததாகக் கொள்ளலாம். இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள், ஆனால் நாளை வேறுமாதிரி இருப்பீர்கள் என்றால், பிறகு வாழ்க்கை என்பது என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே பொருள். அதாவது உங்களை ஆலைக்குள் முழுமையாக இறக்காமல் ஒரு கையை மட்டும் இயந்திரத்துக்குள் விட்டுவிட்டு அதிலிருந்து ஏதாவது வரும் என்று எதிர்பார்ப்பவர். அதிலிருந்து துன்பம் தவிர வேறென்ன வரும்? சொல்லுங்கள்?

துன்பம் மனிதர்களைப் பக்குவமடையச் செய்கிறது. அல்லது துன்பம் மனிதர்களை விழிப்புணர்வு அற்றவர்களாக ஆக்குகிறது. விழிப்புணர்வின்றி ஒரு கையை மட்டும் இயந்திரத்துக்குள் தொடர்ந்து வைத்திருக்கும்போது, ஒருநாள் நீங்கள் உள்ளே இழுக்கப்படலாம். அதற்கும் வாய்ப்புண்டு. ஆனால் அப்படிச் செய்வது முட்டாள்தனமான முறை. எல்லாமே ஒரே குறிக்கோளை நோக்கி இருந்தால் மட்டும் தான், அற்புதமான ஏதோ ஒன்று அதிலிருந்து வெளிவரும்.