Question: நான் தேவியின் பக்தன். அதனால், லிங்கபைரவியை ஒட்டி, அவளது பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகனின் உருவங்கள் இல்லாதது எனக்கு ஒரு குறையாக இருக்கிறது. இவ்விடத்தில், சிவன், தேவியோடு சேர்த்து, நந்தியும் இருக்கிறார். ஆனாலும், அவர்களின் பிள்ளைகளான விநாயகரும் முருகனும் இல்லையே, ஏன்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இங்கிருக்கும் தேவி, அவளது இளமைப் பருவத்தை சித்தரிக்கிறாள். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. (சிரிப்பலை) இக்கதைகளைத் தாண்டி, இக்கதைகள் உணர்த்தும் உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தர்க்கரீதியாக வெளிப்படுத்த முடியாதவற்றை கதைகள் மூலம் வெளிப்படுத்தும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் உண்டு. இங்கே சொல்லப்படும் கதைகளை மேலோட்டமாகப் பார்த்தால், அவை சுவாரஸ்யமாய் இருக்கின்றன, நம் கலாச்சாரத்திற்கும் அழகு சேர்க்கின்றன. ஆனால் உண்மையில் அவற்றின் சாரம் வேறு. சிவன்-சக்தி என்று பேசும்போது, ஒரு ஆண், ஒரு பெண், அவர்களின் குடும்பம் பற்றி நாம் பேசவில்லை.

குடும்பக் கதைகள்...

மனிதர்கள் குடும்பத்துடன் வாழ்வதால், அவர்களின் கடவுளுக்கும் குடும்பங்கள் வேண்டும் என்று அவர்கள் தோற்றுவித்தது தான் இந்தக் குடும்பக் கதைகள். என்றாலும், சிவனிற்கு மட்டுமே ஒரு முழுமையான குடும்பத்தோடு, செல்லப் பிராணிகளும் உண்டு. நம் 'காலண்டர்'களில் சிவனை, அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் சித்தரித்திருப்பார்கள். இது கலாச்சாரப் பின்னணியில் உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு அழகான வெளிப்பாடு.

நம் ஆசிரமத்தில், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஸ்பந்தா ஹால் ஒரு குறிப்பிட்ட சக்தி ஒத்திசைவில் அமைக்கப் பட்டிருக்கின்றன.

என்றாலும் சிவன்-சக்தி என்று பேசும்போது, நாம் உண்மையில் குறிப்பது இப்பிரபஞ்சத்தின் அடிப்படைப் பண்புகளாய் செயல்பட்டு, இங்கு உயிரினங்கள் தோன்றக் காரணமாய் இருக்கும் ஆண் தன்மையையும், பெண் தன்மையையும் தான். ஒரு சிறு அளவில், இது ஆண்-பெண்ணையும் குறிக்கலாம். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்தே புது உயிர் தோன்ற வழி செய்கின்றனர். ஆனால் இது பெரும்பாலும் பின்விளைவாய் நிகழும் ஒன்று. நாம் பேசிக் கொண்டிருப்பதோ, இப்பிரபஞ்சத்தின் அடிப்படையான ஒன்றைப் பற்றி.

நம் ஆசிரமத்தில், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஸ்பந்தா ஹால் ஒரு குறிப்பிட்ட சக்தி ஒத்திசைவில் அமைக்கப் பட்டிருக்கின்றன. 'ஸ்பந்தா' என்றால் உருவமற்ற அடிப்படை சக்தி. லிங்கம் என்பது முதன்முதலில் உண்டான உருவம், மற்றும் தேவி என்பது, அந்த உருவம் உண்டாகக் காரணமான சக்தி. இது ஒரு ஆணைப் பற்றியோ, பெண்ணைப் பற்றியோ, அவர்களின் குழந்தைகள், செல்லப் பிராணிகள் பற்றியோ அல்ல. இந்தப் பரிமாணங்கள் சக்தியின் அடிப்படைப் பண்புகள். இது தவிர, இங்கு, தீவிரத்தையும், முரட்டுத்தனத்தையும் குறிக்கும் நந்தியின் சிறு சான்று... அல்ல பெரிய சான்று, நம் விருப்பத்திற்காக ஒரு கூடுதல் அலங்காரம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பக்தியின் சாரம் என்ன?

நீங்கள் பக்தன் என்கிறீர்கள். பக்தியின் சாரம், உங்களின் சுவடின்றி நீங்கள் கரைந்து போவது. அதாவது, பக்தி என்பது, ஒன்றுமற்ற நிலையோடு நீங்கள் கரைந்து ஒன்றாகிட வழி செய்யும் கருவி. அது தேவி பற்றி அல்ல. அது உங்களைப் பற்றியது. என்றாலும், உதவியின்றி சுயமாய் கரைந்து போவது எளிதல்ல என்பதால், உங்களைவிட தீவிரமான நிலையில் இருக்கும் மற்றொரு சக்தியிடம் நீங்கள் கரைந்து போவதற்கு உதவி கேட்கிறீர்கள். ஏற்கெனவே உங்கள் மனைவி, குழந்தைகள், குடும்பம் என பல பிணைப்புகளில் சிக்கிக் கொண்டு விட்டீர்கள். அது போதாதென்று, சிவன், அவனின் குடும்பம், மனைவி, குழந்தைகளிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். இது மிக அதிகமான பிணைப்பாகி விடும். பெரும்பான்மையான பழங்காலத்துக் கோவில்களில் இப்படி பல சந்நிதிகள் இருக்கவில்லை. பிற்காலத்தில் தோன்றிய அகந்தைகொண்ட சில முட்டாள்கள் தான், தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்ல எண்ணி, இங்கும் அங்கும் சிற்சிறு மாறுதல்கள் செய்திருக்கிறார்கள். இதில் பல முற்றிலும் அர்த்தமற்ற முட்டாள்த்தனமான மாற்றங்களாக உள்ளன.

தியானலிங்கத்திற்கு குடும்பம் உண்டா?

வெவ்வேறு லிங்கங்கள், வெவ்வேறு விதமான சக்தி கொண்டு உருவாக்கப் பட்டிருக்கின்றன. இங்கிருப்பது தியானலிங்கம். இவருக்குக் குழந்தைகள் எல்லாம் கிடையாது. வேறு வகையில் உருவாக்கப்பட்ட சில வடிவங்களுக்குத் தான் துணை சக்திகள் தேவைப்படும். இந்த விஞ்ஞானப் பின்னணி அறியாமல், மக்கள் இதுபோன்ற அமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றனர். தங்களுக்கு தங்கள் குடும்பத்தின் மீது பற்று இருப்பதால், சிவனும் குடும்பம் சூழ இருக்கவேண்டும் என்று எண்ணிவிட்டனர். உண்மையில் சிவன், சும்மா வருவார், போவார். எப்போதும் தன் குடும்பத்துடனேயே அவர் வாழ்ந்திருக்கவில்லை. அவர் ஈடுபாட்டை வெளிக்காட்டினாரே அன்றி பிணைப்பை அல்ல. அதனால் உங்களை இவற்றில் பிணைத்துக் கொள்ளாதீர்கள். இக்கதை நம் பாரம்பரியம் பற்றியதல்ல. வாழ்வின் அடிப்படைப் பரிமாணம் என்ன, வாழ்விற்கே ஆதாரமான அந்த அடிப்படை சக்திகள் என்னென்ன என்பதை அறிந்து, அதனோடு தொடர்பு கொள்வதற்கான கருவி இது. அதனால் இக்கதைகளை மேலோட்டமாக பார்க்காமல், அதன் சாராம்சம் என்ன என்பதையும் கவனியுங்கள்.

சந்திரன்