ஈஷா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தன்னுடன் பல்லாயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. இது எப்படி சாத்தியமாயிற்று? ஏதேனும் வசியமா, இல்லை மந்திர வித்தையா? இந்தக் கேள்விக்கு சத்குரு தரும் சுவாரசியமான பதில், அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியம்.


Question: உங்கள் அமைப்பு பல்லாயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களை ஈர்த்திருக்கிறதே! அப்படி அவர்களை மயக்கி ஈர்ப்பது எது?

சத்குரு:

மயக்கி ஈர்ப்பதா? அடிப்படையில் யாரையும் மயக்கி, கொக்கி போட்டு இழுப்பதில் ஈஷாவுக்கு ஆர்வம் இல்லாததுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

இங்கு கட்சி இல்லை, மதம் இல்லை, கடவுள் இல்லை, பொதுவாக எதிரி இல்லை, ஆசை வார்த்தைகள் இல்லை, வசீகரிக்கும் வாக்குறுதிகள் இல்லை, வேதனைகளை நீக்கி அருளாசிகள் வழங்கி மேன்மைப்படுத்துவதாக மேடை முழக்கம் இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முக்கியமாக, இங்கே சொர்க்கத்துக்கு வழி சொல்வதாக யாருக்கும் ஆசை காட்டுவதில்லை. கடவுளை அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்துவதாக பொய் வாக்குகள் கொடுப்பதில்லை. அந்தரத்திலிருந்து மாங்காய்களை வரவழைக்கும் அற்புதங்கள் செய்து காட்டுவதில்லை.

கூட்டத்தைச் சேர்க்கும் தந்திரம் எதுவும் இங்கே இல்லை. சொல்லப்போனால், உன் கசப்புகளுக்கெல்லாம் காரணம் நீதான் என்று முகத்தில் அடித்தாற்போல் நேரடியாகச் சொல்கிறோம். நீதான் பிரச்சினை, அந்தப் பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடித்துவிட்டால், உலகில் வேறு பிரச்சினை ஏதும் இல்லை என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறோம்.

ஈஷா ஆட்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இங்கு வருபவர்களுக்கு இன்னும் சிறப்பாக வாழ்வதற்கான வாய்ப்புகளை எப்படி ஏற்படுத்தி உதவலாம் என்பதில் கவனமாக இருக்கிறோம். கனிகளை வழங்குகிறோம். ஆனால், காற்றிலிருந்து தருவித்து அல்ல. கனிந்த மரங்களிலிருந்து பறித்து.

ஏதோ ஒரு கட்டத்தில் நலமாக வாழ்வதன் ருசியை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அது அவர்களை ஈர்த்து இழுத்து விடுகிறது. அந்த ருசியை மற்றவருக்கும் அறிமுகப்படுத்தும் ஆர்வத்தில் மற்றவர்களையும் இழுத்து வரவைக்கிறது. அதனால் கூட்டம் சேர்கிறது.

மக்கள் தங்களை உணர்ந்து மாற்றிக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியால் உந்தப்பட்டு வருகிறார்கள். இது அற்புதமான, அமைதியான, ஆனந்தமானதொரு புரட்சி.

Question: திருவண்ணாமலையில் ஒரு யோகி யோக ஆசனத்தில் அண்ணாந்து பார்த்து அமர்ந்தபடி அப்படியே காற்றில் எழுகிறார் என்று இணையதளத்தில் ஒரு வீடியோவில் பார்த்தேன். என் கண்களையே நம்ப முடியவில்லை, இது சாத்தியமா?

சத்குரு:

சாத்தியம் தான், ஆனால் உண்மையான யோகிகள் இந்த சர்க்கஸ் வேலைகள் செய்து காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். வாழ்க்கை என்பதே மிக வியக்கத்தக்க அதிசயம். ஒரே மண்ணிலிருந்து ஒவ்வொரு விதையும் வெவ்வேறு மரமாக வெளிவருவது அதிசயம். உண்பதை உடலின் ஒரு பகுதியாக மாற்றும் உயிரின் அமைப்பு ஒரு அதிசயம். சேற்றில் செந்தாமரை பூப்பது அதிசயம். பூமி சுழல்வது அதிசயம்.

இத்தனை அதிசயங்களை செய்து காட்டி விட்டு இயற்கை ஆர்ப்பாட்டமில்லாமல இருக்கிறது. இந்த பேரதிசயங்களின் ஆழத்தை உணரும் ஆர்வத்தை விட்டு விட்டு, நீங்கள் ஏன் அதிசயங்கள் செய்து காட்ட விரும்புகிறீர்கள்?

பறக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்காக செய்வதற்கு இன்றைய தொழில் நுட்பம் தேவையான அளவு வளர்ந்து விட்டது. வாழ்வின் ஆழ அகலத்தை உணரக் கிடைத்த அற்புத வாய்ப்பை விட்டு விட்டு, இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான விஷயங்களில் சக்தியை விரயம் செய்வதில் அர்த்தமேயில்லை. யாருக்கோ வித்தை செய்து காட்டுவதை விடுத்து, வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்துவோம்.