Question: நமஸ்காரம் சத்குரு. ஈஷா யோக மையத்தில் வெவ்வேறு இடங்களில் சிறிய லிங்கங்கள் நிறுவி இருக்கிறீர்கள். இதன் நோக்கமென்ன? அந்த லிங்கங்கள் விபூதியால் கவரப்பட்டுள்ளது எதனால்?

சத்குரு:

நாம் 11 லிங்கங்களை நிறுவியிருக்கிறோம். இது தொழில்நுட்பம் சார்ந்த ஒரு அம்சம். ஏதோ ஒரு குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் சப்ஸ்கிரைப் (subscribe) செய்து கொள்வது போன்றதொரு விஷயமிது. பேஸ் ஸ்டேஷன் ஒரு இடத்தில் இருக்கும், ட்ரான்ஸ்மிட்டர் மூலம் தன் சேவையை பல இடங்களில் வழங்கிக் கொண்டிருப்பார்கள், அது போலத்தான் இதுவும். இந்த கோவில் உருவாக்கப்பட்ட நோக்கம் அதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நீங்கள் எந்த அளவிற்கு பெற்றுக் கொள்ளும் திறனுடன், நுண் உணர்ச்சியுடன் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கை சில அம்சங்களை உங்களுக்கு வழங்கும்.

ஈஷா யோக மையத்தின் பூகோள அமைப்பிற்கு ஏற்றார் போல் தியானலிங்கம், லிங்கபைரவி, இந்த சிறிய லிங்கங்கள் ஆகியவற்றை நாம் அமைத்துள்ளோம். அதிர்ஷ்டகரமாக, அருள் வெள்ளமாய், சக்தி பிரவாகமாய் நம் பின்னணியில் வெள்ளியங்கிரி மலை நின்று கொண்டிருக்கிறது. தியானலிங்கத்தை உருவாக்க நம் சக்தியை நாம் முழுமையாக செலுத்தி இருக்கிறோம். அங்கு அமரும் பலர் பெயரில்லா ஆனந்தப் பரவசத்தில் திளைகின்றனர்.

அருள் பெறும் விதம்

நீங்கள் எந்த அளவிற்கு பெற்றுக் கொள்ளும் திறனுடன், நுண் உணர்ச்சியுடன் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கை சில அம்சங்களை உங்களுக்கு வழங்கும். நாம் அனைவரும் ஒரே உலகத்தில் வாழ்ந்தாலும், அனைவரும் வாழ்க்கையை ஒரே போல் உணர்வதில்லை. ஒருவருக்கு அத்தனையும் அற்புதமாக இருக்கிறது, மற்றொருவருக்கு அத்தனையும் கோரமாக இருக்கிறது. இதற்கிடைப்பட்ட வாழ்க்கை வாழ்வோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஊசலாடிக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள். இன்றைய நாள் நன்றாக இருப்பார்கள், மற்றொரு நாள் பிரச்சனையில் உழல்வார்கள். நாளை மறுநாளோ நன்றாக இருக்கும். உலகில் மட்டுமல்ல, ஈஷா யோக மையத்திலும் இதுதான் உண்மை. மக்களுக்கு பெற்றுக் கொள்வதில் சிரமம் இருப்பதால், அவர்களது பெற்றுக் கொள்ளும் திறனை மேம்படுத்த இந்த லிங்கங்களை நாம் ஸ்தாபித்து இருக்கிறோம்.

லிங்கம் விபூதியால் சூழப்பட்டுள்ளதே எனக் கேட்டீர்கள். அந்த லிங்கம் உருவாக்கும் அதிர்வினை நீங்கள் சிறிது பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினோம். இந்த புனிதமான சாம்பல் குறிப்பிட்ட சில பொருட்களால் ஆனது. அது ரசலிங்கத்துடன் தொடர்பில் உள்ளது. அதனை நீங்கள் 11 இடங்களிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் தியானலிங்கத்திற்கோ, சாதனா மண்டபத்திற்கோ போகாதவராய் இருந்தால், நீங்களும் அவற்றின் அருளைத் தவறவிடக்கூடாது என்பதற்காக இவற்றை நிறுவியிருக்கிறோம்.

இந்த 11 லிங்கங்களும் சூழ்நிலையை நிச்சயமாக மாற்றி அமைக்கின்றன. குறிப்பாக குளிரான நாட்களில், காலை நேரங்களில் இதனை உங்களால் உணர முடியும். காலை 3.40 மணியிலிருந்து 6 மணிக்குள் 11 லிங்கங்களையும் நீங்கள் சென்று பார்த்துவிட்டு வரவேண்டும். அவர்களுக்கே உரிய மெருகுடன் அவர்கள் மிளிர்வதை பார்க்கலாம்.

ஈஷா யோக மையத்தின் பூகோள அமைப்பிற்கு ஏற்றாற் போல் சில இடங்களில் அவற்றை நிறுவி உள்ளோம். நீங்கள் வணங்குவதற்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தருவது இந்த லிங்கங்கள் வழங்கும் மற்றொரு சாத்தியம். ஒரு நாளைக்கு வெறும் 11 தடவை மட்டும் செய்ய வேண்டாம், பல கோடி முறை நீங்கள் இதனை செய்ய வேண்டும். மேகங்கள் அசையும்போதும், தென்றல் வீசும்போதும், மற்றொரு மனிதர் வரும்போதும், நாய் வரும்போதும், ஒரு பசு, மரம் எது வந்தாலும், உங்கள் சுவாசம் உள்ளேயும் வெளியேயும் சென்று வரும்போதும் வணங்குங்கள். வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத்திற்கும் தலை வணங்குங்கள். ஏனென்றால், உங்கள் புத்திசாலித்தனத்தை விட இந்தப் பிரபஞ்சத்தினுடைய ஒவ்வொரு அம்சமும் பல மடங்கு அறிவாற்றலுடன் உள்ளது.

படைத்தவனுக்கு உங்கள் பக்தி தேவையில்லை. ஆனால், உங்களுக்குள் பக்தி இல்லாது போனால், நீங்கள் தொலைந்துபோன மனிதராகிவிடுவீர்கள்.

இந்த சுவாசம் நிகழும் விதத்தைப் பாருங்கள். எளிமையான காற்று உள்சென்று வெளிவருவதைப் பாருங்கள். இதுவல்லவா நம் வாழ்வை பேணி வளர்க்கிறது. அதுதானே மரத்தினுள் செல்கிறது. மரங்களுக்கு, தான் என்ன வழங்க வேண்டுமோ அவற்றை வழங்குகிறது. 15,000 வருடங்களுக்கு முன் எந்த காற்று சுவாசிக்கப்பட்டதோ, அதனையே நாமும் இன்றும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அவர், அந்த மஹாதேவன் தன் சுவடினை இந்த காற்றில் நிச்சயமாய் பதித்துச் சென்றிருக்கிறார். பிற உயிர்களும் தன் சுவடினைப் பதித்துச் சென்றுள்ளன. மற்ற சில சோம்பேறிகளின் சுவடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதே காற்று, பல கோடி வருடங்களாய் தன்னை சீராய் வைத்துக் கொண்டிருக்கிறது.

அதனை நாம் அசுத்தம் செய்யாமல் இருந்தால், இன்னும் பலநூறு கோடி வருடங்களுக்கு இதே காற்று நிலைத்திருக்கும். புது காற்று தேவையில்லை. புது நீர் தேவையில்லை. இருக்கும் பொருட்களே நீடித்து, நிலைத்திருக்கும். மிக அற்புதமான வடிவமைப்பு அல்லவா இது? அதனால் வணங்குவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். மரியாதையாய், எதையோ ஒன்றன் மீது மட்டுமல்ல, நீங்கள் வாழும் விதமே உயர்வானதாய், மரியாதையுடையதாய் அமையட்டும்.

பக்தி எதற்கு?

படைத்தவனுக்கு உங்கள் பக்தி தேவையில்லை. ஆனால், உங்களுக்குள் பக்தி இல்லாது போனால், நீங்கள் தொலைந்துபோன மனிதராகிவிடுவீர்கள்.

எதையும் உயர்ந்ததாய் பார்க்க வேண்டாம், எதையும் தாழ்வானதாய் பார்க்க வேண்டாம், எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்துடன் பாருங்கள். வாழ்வில் ஆழமான ஈடுபாடு ஏற்படுவதை நீங்கள் கவனிக்க முடியும். எதையும் தாழ்வாகவோ, உயர்வாகவோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறிப்பிட்ட விழிப்புணர்வும், ஒழுக்கமும் உங்களுக்குள் இருந்தாலே ஒழிய உங்களால் அனைத்தையும் ஒரேவிதமாக, பாகுபாடு இல்லாமல் பார்க்க முடியாது. அந்நிலையை அடையும் வரை, அனைத்தையும் உயர்வாக பாருங்கள். இது உங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்தும்.

ஆசிரமத்திலுள்ள பதினோரு லிங்கங்களும் அதற்குத்தான். நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்குள் பக்தி எனும் உணர்வினை நினைவூட்டிக் கொள்ள முடியும். எதை நோக்கியும் நீங்கள் பக்தியுடன் இல்லாமல் இருக்கலாம், அங்குள்ள லிங்கங்களுக்கும் உங்கள் பக்தி தேவையில்லை. அவற்றிற்கு நீங்கள் பக்தியுடன் இருக்கிறீர்களா, இல்லையா என்பதைப் பற்றி கவலை இல்லை. நீங்கள் உள்வாங்கிக் கொள்ளும் திறனுடன் இருந்தால், நலம். நீங்கள் உள்வாங்கிக் கொள்ளும் திறனுடன் இல்லாது இருந்தால், தோல் மட்டம் வரை செல்லும். உள்வாங்கிக் கொள்ளும் திறனுடன் இருந்தால் உங்களை பரிபூரணமாய் அருள் நனைத்திடும்.