Question: புத்தர், ஏசு, நபிகள் போன்றுள்ள தாங்கள் எங்களுடைய சமகாலத்தில் தெய்வம் நேரில் வந்ததுபோல் வாழ்கிறீர்கள். இதனை அனைவரும் உணரவில்லையே என்று மனம் வேதனையடைகிறது. அனைவரையும் எவ்வாறு அப்படி உணரச் செய்வது?

சத்குரு:

நீங்கள் கூறிய மூவருக்கும் எனக்குமான அடிப்படை வித்தியாசம் என்னவென்றால், நான் உயிரோடு இருக்கிறேன். மேலும் பல வித்தியாசங்கள் இருந்தாலும், நாம் இப்போது அதுபற்றிப் பேச வேண்டாம். முக்கியமாகப் பார்க்க வேண்டியது என்னவென்றால், அவர்களுடைய நோக்கம் எதுவாக இருந்தாலும் அவர்களின் பெயரால் இந்த மனித இனத்தை நாம் துண்டு துண்டாக்கி பிரித்துவிட்டோம். மறுபடி இணையமுடியாத அளவுக்குப் பிரித்துவிட்டோம். அவர்களின் நோக்கம் அனைவரையும் இணைப்பதுதான் என்றாலும், அவர்கள் பெயரிலேயே மனிதநேயம் துண்டாக்கப் பட்டுள்ளது. இப்போது ஒருவர் மற்றவரோடு பேச முடியாது என்று கூறுமளவிற்கு உடைத்துவிட்டோம். மனிதகுலம் பிரிந்துவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்பொழுது எவையெல்லாம் மதத்தின் பெயரால் நிகழ்கின்றனவோ, அவையெல்லாம் உலகத்தில், ஏதோ ஒரு காலகட்டத்தில் ஆன்மீகமாகத்தான் துவங்கியது. ஆனால் நாளடைவில் அவரவர் விருப்பத்திற்கேற்றபடி மாற்றிவிட்டனர். இதனைத் தவிர்ப்பதற்காகத்தான் இப்போது நான் கூறுவதை அப்படியே ஒலி, ஒளி நாடாவில் பதிவு செய்கிறார்கள்.

முக்கியமாக, அவர்கள் உயிரோடு இருந்தபோது அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே புரிந்திருந்தது. குறைந்த காலமே அவர்கள் உயிருடன் இருக்க முடிந்தது. புத்தரை மட்டுமே வாழ அனுமதித்தனர். அவர்கள் கூறிய விஷயங்களை நெருக்கமான ஒருசிலர் மட்டுமே புரிந்து கொண்டனர். மற்றவர்களுக்கு அவர்கள் கூறிய எதுவுமே தெரியவில்லை. இதனால் பலவிதமான விளைவுகள் ஏற்பட்டுவிட்டன. அவர்களின் பெயரால் மிகுந்த நன்மையும் ஏற்பட்டது. அதேநேரம் மிகுந்த துன்பமும், பாதிப்பும் கூட ஏற்பட்டுவிட்டது. ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் இப்பொழுது எவையெல்லாம் மதத்தின் பெயரால் நிகழ்கின்றனவோ, அவையெல்லாம் உலகத்தில், ஏதோ ஒரு காலகட்டத்தில் ஆன்மீகமாகத்தான் துவங்கியது. ஆனால் நாளடைவில் அவரவர் விருப்பத்திற்கேற்றபடி மாற்றிவிட்டனர். இதனைத் தவிர்ப்பதற்காகத்தான் இப்போது நான் கூறுவதை அப்படியே ஒலி, ஒளி நாடாவில் பதிவு செய்கிறார்கள்.

ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள ஆன்மீகத்தைத் தட்டி எழுப்பும் வகையான 7 நாள் வகுப்பில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஒருநாள் இடைவெளி கூட ஏற்படக்கூடாது. கட்டாயம் 7 நாளும் வர வேண்டும் என்று கூறுவது ஏனென்றால், பாதி மட்டுமே புரிந்துகொண்டு, இன்னொரு மதம் ஆரம்பித்துவிடுவீர்களோ என்று நாம் அஞ்சுகிறோம். பாதி புரிந்தால் அதுதான் நிகழும். அவர்கள் கூறியதை பாதி மட்டும் புரிந்துகொண்டு, ஒரு சிலர் சேர்ந்து மதமே உருவாக்கிவிட்டனர். ஆன்மீகம் கெட்டுப் போகும்போது அது மதமாகிவிடுகிறது. நீங்களும்கூட உங்களது அலைபேசியில் பதிவுசெய்து, சிறிது சிறிதாக ஆன்மீகம் கேட்டுக்கொள்ள முடியும். ஆனால் அது முழுமையாகப் புரிந்தால்தான் ஆன்மீகம். சிறிது சிறிதாகக் கேட்டால் மிகுந்த பிரச்சினை. ஆகையால் ஒரு பாதுகாப்பு வளையமாக நான் கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் பதிவு செய்யப்படுகிறது. நீங்கள் இதை மாற்ற முடியாது. அப்படி மாற்றினாலும் அதைச் சுட்டிக் காட்டுவதற்கான ஆதாரம் இங்குள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடு அந்த நாளில் இல்லாமல் போனதால் யார் என்ன கூறினாலும் அதுவே உண்மையாகிவிட்டது.

இப்பொழுது அந்த விதமான பிரச்சினை நமக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது. முழுமையாகக் குறைந்துவிட்டதாகக் கூறமுடியாது. நீங்கள் மற்றவர்களுக்கு எந்தவிதமாக ஈஷா யோகாவை போதனை செய்கிறீர்கள் என்று யாருக்குத் தெரியும்? நீங்கள் நினைத்தவிதமாக உங்களுடைய கணவனோ, மனைவியோ, குழந்தைகளோ நடக்கவில்லை என்றால், “சத்குரு பொறுப்பாக நடக்க வேண்டுமென்று உங்களிடம் கூறியிருக்கிறார்” என்று கூறுவீர்கள்தானே? ஆனால் மற்றவர் பொறுப்பு பற்றி நான் எப்போதும் பேசியதில்லை. ‘நான் என்னளவில் பொறுப்பாக இருக்க வேண்டும்‘ என்றுதானே கூறி வந்திருக்கிறேன், அப்படித்தானே? இப்படியெல்லாம் வீட்டில் நீங்களும் உங்கள் விருப்பப்படி ஈஷாவை மதமாக மாற்றியிருக்கிறீர்களா? இல்லையா?

சிறிது நாட்களுக்கு முன், ஒரு அம்மையார் என்னிடம் வந்து பெருமையாக, “எங்களுடைய வீட்டில் என் குழந்தை தினமும் உங்கள் புகைப்படத்தை வணங்குகிறது. நான் குழந்தையிடம், “நீ பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று சத்குரு கூறுகிறார் என்று அறிவுரை கூறுவேன்” என்றார். நான் அவர்களிடம், “அம்மா, நான் அப்படிக் கூறவில்லை. குழந்தைக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டுமென்றுதான் நான் கூறினேன். பொறுப்பு என்ற வார்த்தையை குழந்தைக்குக் கற்றுத் தர வேண்டாம். குழந்தை குழந்தையாக இருக்கட்டும். நீங்கள் பொறுப்பாக இருங்கள். சூழ்நிலை நன்றாக இருக்கும். நல்ல சூழ்நிலையில் குழந்தை வளர்ந்தால் நல்லவிதமாக வளரும். பொறுப்பாக இரு என்று நீங்கள் யாருக்கும் கற்றுத் தர வேண்டாம் என்று கூறினேன்.

இது உயிரோட்டமாக இருக்கின்ற ஆன்மீகம். இது ஒரு மதமாக உருவாக வாய்ப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஈஷா யோகா ஆசிரியர்கள், பிரம்மச்சாரிகள் என்று பல பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, இப்போதே இப்படி வீட்டில் மதமாக மாற்றம் கொண்டு வர முயற்சிப்பது வேண்டாம். இதனை ஒரு உயிரோட்டமுள்ள ஆன்மீகமாக வைத்துக்கொள்ளலாம். இதுதான் அடிப்படையான வித்தியாசமாக இருக்கிறது. இது உயிரோட்டமாக இருக்கின்ற ஆன்மீகம். இது ஒரு மதமாக உருவாக வாய்ப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஈஷா யோகா ஆசிரியர்கள், பிரம்மச்சாரிகள் என்று பல பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய ஏற்பாடுகள் ஏன் தேவைப்படுகிறது என்றால், இது மதமாக மாறுவதற்கு நான்கு தலைமுறைகள் வேண்டாம். நான்கு நாட்கள் மட்டுமே போதும்.

மதமாக்கிவிட்டால் ஈஷா வெகு சுலபமாக வளர்ந்துவிடும். இவ்வளவு கஷ்டம் எதுவும் இல்லாமல் உலகம் முழுவதும் வேகமாக பரவிவிடும். இது ஆன்மீகமாக, உயிரோட்டமாக பரப்பப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அளவுக்கு நிதானம் தேவைப்படுகிறது. இப்பொழுது, நான் தமிழ்நாடு முழுவதிலும் மரம் வைப்பதற்குப் பதிலாக, சிங்கப்பூர் பிளாஸ்டிக் செடியைத் தயாரித்து, வெகு சுலபமாக ஒரே நாளில், உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி வியாபாரம் கூட துவங்கிவிடலாம். ஆனால், உண்மையும் உயிரோட்டமும் இருக்காது.

நீங்கள் சொன்ன அனைவரும் ஆன்மீகம்தான் துவங்கினார்கள். ஆனால் 1000, 2000 வருடங்களுக்குப் பிறகு அவரவருக்கு விருப்பம்போல் மாற்றிவிட்டார்கள். ஈஷா யோகா அப்படியாகிவிடக்கூடாது என்பதற்காக, பலவிதமான கருவிகளை இதற்கு உருவாக்கி வைத்திருக்கிறோம். கட்டாயமாக, 700, 800 வருடங்களுக்கு இது உயிரோட்டமாக ஆன்மீகமாகவே நிலைத்திருக்கும். அதன்பிறகு, அது உயிரோட்டத்தை இழந்து விட்டால் அது ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆனால் மதமாக மாறிவிடாது. அதற்கான கருவியும் இதில் உள்ளது. ஆகையால் இது மதமாவதற்கு துளியளவும் வாய்ப்பில்லை. ஆனால் ஈஷா யோகாவை விலக்கிவிட்டு, வெறுமனே என்னுடைய புகைப்படம் மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மதமாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அப்படிச் செய்ய வேண்டாம்.