மஹாசிவராத்திரிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?

சத்குரு:

ஒரு வருடத்தில் 12 சிவராத்திரிகள் உள்ளன. ஒவ்வொரு மாதத்தின் பதினான்காவது நாளும், அதாவது அமாவாசைக்கு முந்தைய தினம், சிவராத்திரி என்றழைக்கப்படுகிறது. இந்த எல்லா சிவராத்திரிகளிலும், 'மாசி' மாதத்தில் தோன்றும் சிவராத்திரியை (தோராயமாக பிப்ரவரி-மார்ச் மாதத்தில்) மஹாசிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினத்தில், பூமியின் வடக்கு அரைகோளத்தில், இயற்கையாகவே சக்தியை மேல்நோக்கி இழுக்கும் தன்மை நிலவுகிறது. முதுகுத்தண்டை நேராக வைத்து அமர்ந்தால், இது அவரின் நல்வாழ்விற்கு உதவும்.

முதுகுத்தண்டு அற்ற நிலையில் இருந்து முதுகுத்தண்டு உடைய உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்ததுதான், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான படிநிலை. மூளையின் வளர்ச்சியில் மற்றொரு மிக முக்கியமான கட்டம், முதுகுத்தண்டு கிடைநிலையில் இருந்து, செங்குத்தாக உயர்ந்தது. மனித இனம் மட்டுமே செங்குத்தான முதுகுத்தண்டுடைய நிலைக்கு உயர்ந்திருக்கிறது. மஹாசிவராத்திரி அன்று கிரகங்கள் இருக்கும் நிலையில், இயற்கையிலேயே சக்தி மேல்நோக்கி நகரும் தன்மை நிலவுவதால், அன்றிரவு முழுவதும் முதுகுத்தண்டை நேராக வைத்திருப்பது நமக்கு பெருமளவில் நன்மைகள் வழங்கிடும். ஆன்மீக சாதகர்களுக்கு மட்டுமல்ல, செல்வச் செழிப்பை விரும்புவோருக்கும் கூட நன்மைகள் கிட்டிடும்.

'ஷிவா' என்றால் முழுமையான உள்வாங்கும் திறனின் சாரம். இந்த அடிப்படையில்தான் ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரியைக் கொண்டாடுகிறோம். இன்னும் சொல்லப்போனால், ஈஷா யோக மையத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமுமே, மஹாசிவராத்திரியை எதிர்நோக்கி காத்திருப்பது போலாகிவிட்டது. இந்நாள், இந்த இரவு, ஒரு வாய்ப்பு. நம் உள்வாங்கும் திறனை சிறிதளவேனும் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு இது. உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், உங்கள் முன்முடிவுகள் போன்றவற்றின் இடையூறின்றி வாழ்வை அணுகுவதற்கான வாய்ப்பு.

வெறும் கண்விழித்திருக்கும் ஒரு நாளாக இல்லாமல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் ஆசையும் அருளும். 'ஷிவா' எனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நீங்கள் எல்லோரும் உணர்வீர்களாக!

மஹாசிவராத்திரி!

சிவராத்திரி, மஹாசிவராத்திரி இரண்டுமே இருளின் அம்சம். இவற்றைக் கொண்டாடுவது, இருளைக் கொண்டாடுவதற்கு ஒப்பு. காரண அறிவின் அடிப்படையில் இயங்கும் எந்த ஒரு மனமும் இருளை எதிர்க்கும். ஒளியைத்தான் கொண்டாடும். ஆனால் இருள் என்பது கெட்ட சக்தி அல்ல.

வானில், மிகச்சிறிய புள்ளிகளாகத் தெரியும் ஆகாயவெளி மண்டலங்கள்தான் (Galaxies) அதிகமான கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றைத் தாங்கி இருக்கும் பரந்த வெறுமை அனைவருடைய கவனத்துக்கும் வருவதில்லை. இந்தப் பரந்துவிரிந்த எல்லையற்ற வெறுமையைத்தான் சிவன் என்று சொல்கிறோம். இன்றைய நவீன விஞ்ஞானமும், அனைத்துமே ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்து, மீண்டும் அதற்குள்ளாகவே செல்கிறது என்று நிரூபித்துள்ளது. இதே அடிப்படையில்தான் இந்த பரந்த வெறுமையை, ஒன்றுமற்ற தன்மையை, இருளை, ‘மஹாதேவா' என்று குறிப்பிடுகிறோம்.

நம் கலாச்சாரத்தில் எப்போதுமே கடவுளிடம், "எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு, என்னைக் காப்பாற்று" என்பது போலான பிரார்த்தனைகள் இருந்ததில்லை. ‘அனைத்திலும் உயர்ந்தவனே! என்னை அழித்து விடு! அப்போதுதான் நான் உன்னைப் போலாக முடியும்‘ என்றுதான் பிரார்த்தனைகள் இருந்தன. ஆகவே மாதத்தின் இருளான நாளாகிய சிவராத்திரி என்பது, ஒருவர் தன்னுடைய கட்டுப்பாடுகளையெல்லாம் கரைத்துவிட்டு, தன்னுடைய உருவாக்கத்துக்கு விதையான, படைப்பின் மூலமான எல்லையற்ற தன்மையை, உணர்வதற்கான ஒரு வாய்ப்பு. மஹாசிவராத்திரி அன்று, ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளும் இருக்கும் இந்தப் படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி ஒரு மனிதரின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு காரணமாக, அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருக்கும்போது, அவருக்குள் இயற்கையாகவே ஆன்ம எழுச்சி நிகழ்கிறது.

பாரம்பரியமாகவே இந்தியாவின் பல்வேறு புனிதத் தலங்களிலும், ஆலயங்களிலும் மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புராணங்கள், இதிகாசங்கள், சான்றோர்கள் கூற்றுப்படி, இந்நாளின் இரவன்று உறங்காமல் விழித்திருப்பதற்கான பலன்கள் எடுத்துரைக்கப்பட்டு, மக்களை விழித்திருக்கச் செய்வதற்கான பல உபாயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரவில் ஆன்மீகப் பயிற்சிகள் செய்யும்போது அதன் பலன் பன்மடங்காகிறது. எந்தவொரு மத மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையையும் சாராமல், இந்த இரவு அறிவியல் ரீதியாகவே அனைவரின் ஆன்மீக வளர்ச்சிக்கும் துணைபுரிவதால், மஹாசிவராத்திரி விழா, ஆண்டுதோறும், ஈஷா யோக மையத்தில் மாபெரும் விழாவாக இரவு முழுவதும் நிகழ்கிறது.

இருளில், சிவனின் அருளில்!

மஹாசிவராத்திரி பற்றி எது பிரபலமோ இல்லையோ, இன்று விரதங்களும் பூஜைகளும் சடங்குகளும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வருகின்றன. ஒன்று, நமக்கு என்னாகி விடுமோ என்கிற பயம். மற்றொன்று, நான் மற்றவர்களை விட சிறப்பானவனாகி விட வேண்டும் என்கிற போட்டி. இன்றைய நவீன உலகம் நம்மை எத்திசையில் அழைத்துச் செல்கிறது என்று தெரியாமலேயே குருட்டுத்தனமாக பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு மஹாசிவராத்திரியின் இருள் ஒளியைத் தருமா?

இந்தக் கேள்வியுடன், மஹாசிவராத்திரி ஒரு க்ளோஸ் அப் பார்வை...

மஹாசிவராத்திரி என்றால் கஷ்டப்பட்டு கண்விழித்து, ஸ்ட்ராங்கான காபியுடன் ஹிட்டான படம் ஒன்றைப் பார்க்கும் நாளாகத்தான் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் அதனை மாற்றியமைத்து அதன் அறிவியல் மகத்துவங்களை உணர்த்தி மக்களை தங்கள் விழிப்புணர்வினால் உயர்வடையச் செய்து வருகிறது ஈஷா யோக மையம் நிகழ்த்தி வரும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள்.

சிவராத்திரி என்றால் சிவன் கோயில்களிலெல்லாம் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. 'அன்று சிவனுக்கு வில்வம் அர்ப்பணித்தால் புண்ணியம் கிடைக்கும், விரதம் இருந்தால் வேண்டியதை சிவன் அருள்வார்' என்று பல நம்பிக்கைகள் இன்று வலம் வருகிறது. ஆனால் விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், அன்றிருக்கும் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே மனிதனின் சக்தி நிலையை மேல்நோக்கி செலுத்துகிறது. மேலும் ஒருவர் சுலபமாக தியான நிலையை அடைவதற்கு இந்த நாள் உறுதுணையாக உள்ளது.

தன்னுடைய 23 வது ஆண்டில் நுழைந்திருக்கும் ஈஷா மஹாசிவராத்திரி, ஒவ்வொரு வருடமும் தன்பால் ஈர்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு இவ்விழா நிகழும் விதத்தையே காரணமாகச் சொல்ல வேண்டும்.

சத்குரு வழங்கும் சக்திவாய்ந்த தியானங்கள், உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் அற்புதமான சங்கீதம், சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் துள்ளலான இசை என நாம் பிரயத்தனப் படாமலேயே நம்மை விழிப்பாய் இவர்கள் வைத்திருக்கிறார்கள். அதோடு நம் உயிரையே உலுக்கிடும் நள்ளிரவு மஹா மந்திர உச்சாடனை மிக சக்திவாய்ந்த அனுபவமாய் அமைகிறது.
காணும் இடம் எங்கிலும் துடிப்பு, உற்சாகம், உயிரோட்டம் கரைபுரளும் இந்த கொண்டாட்டங்களில் லட்சோப லட்சம் மக்களுடன் நீங்களும் தியானத்தில் சங்கமிக்க முடியும். புனிதம் வாய்ந்த வெள்ளியங்கிரி நிழலில், தியானலிங்க ஷேத்திரத்தில், சத்குருவின் அருளில் இவ்வருடமும் மஹாசிவராத்திரி விழா மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற இருக்கிறது.

இது சிவனின் நாள். ஏன்?

மஹாசிவராத்திரித் திருநாள், சிவனின் நாள். அன்று ஜடாமுடி பிரபஞ்சமெங்கும் அசைந்தாட, பிறை நிலவை நெற்றியில் சூடியபடி உடம்பெல்லாம் திருநீற்றோடு உடுக்கை ஒலியோடு, இரவு முழுவதும் சிவன் ஆடுகிறான் என்றே நம் பெரியவர்கள் நமக்குச் சொல்லி இருப்பார்கள். இப்படிச் சொல்வதற்கு வேறு ஒரு ஆழமான காரணம் உண்டு. வாழ்வின் ஆழமான அம்சங்களை உணர, நமக்கு சக்தியின் தீவிரம் அவசியம். தீவிர சக்தியின் உச்சம், சிவன். இந்நாள், நம் சக்தி இன்னும் தீவிரமாக ஆக, மேலே உயர்வதற்கு இயற்கையே வழங்கும் ஒரு வரம். அதனாலேயே, சிவனின் அம்சமான இந்நாள், மஹாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிவன் முதலும் முடிவுமானவன். ஆதியோகியாய் அமர்ந்து, நம் சக்தியை முறையாக, நம் முயற்சியினாலேயே உயர்த்திக் கொள்வதற்கு வழிவகுக்கும் யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகள் மூலம் அகிலமெங்கும் பரவச் செய்தவன் அவன். சிவா என்றால் ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒன்றுமில்லாததை அடைய என்ன செய்து விட முடியும்?! அவனுடன் சும்மா இருப்பதே வழி. ஆனால், தூக்கத்தில் அல்ல; முழு விழிப்போடு! போர்வைக்குள் படுத்துக் கொண்டு அல்ல; முதுகுத்தண்டை நேராக வைத்து அமர்ந்தபடி!

முதுகு ஏன் நேராக இருக்க வேண்டும்?!

நம் சக்தியின் சாரம், நம் முதுகுத்தண்டு. இன்று கோள்களின் நிலை, நம் சக்தியை மேல்நோக்கி இழுப்பதால், நம் முதுகுத்தண்டை நேராக வைத்து, விழிப்புடன் அமர்ந்தால், இந்த சக்தி நம் உடலுள் தடையின்றி செயல்படும். இதனால் நம் சக்தி சிறிதேனும் மேலெழும்பினாலும், அது நம் நல்வாழ்விற்கு உதவும்.

இருபத்து மூன்று ஆண்டுகளாக, மஹாசிவராத்திரி இரவு, ஈஷா யோக மையத்தில், சத்குருவின் முன்னிலையில் மாபெரும் கொண்டாட்டமாக களைகட்டுகிறது. இந்த வருடமும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வெகுசிறப்பாக நிகழவிருக்கிறது.

உலகின் தலைசிறந்த இசை மற்றும் நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், சத்குருவின் அருளுரை, சக்திவாய்ந்த தியானங்கள், மஹாமந்திர உச்சாடனை என இரவு முழுக்க நடக்கவிருக்கிறது ஈஷாவின் கொண்டாட்டங்கள்.

ஈஷாவின் மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்கள்

இவ்வருடத்தின் மஹாசிவராத்திரி பிப்ரவரி 13, 2018 அன்று வருகிறது. அன்று மாலை 5:40 மணியளவில், சத்குரு வழிநடத்தும் பஞ்சபூத ஆராதனாவுடன் கொண்டாட்டங்கள் துவங்க இருக்கின்றன. இதைத் தொடர்ந்து ஆன்மீக குருமார்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், தியானலிங்கத்தில் குருபூஜை நடைபெறும். இவ்விரண்டும் ஆசிரம வளாகத்தில் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடகம்' உச்சாடனத்தை ஈஷா பிரம்மச்சாரிகள் உச்சரிக்க, மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் மைதானத்தில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து அன்றைய தினத்திற்கான ஆன்மீக செயல்முறைகளுக்கு தங்களை தயார் செய்துகொள்ள, சத்குரு குறிப்புகள் வழங்குவார். சரியாக நள்ளிரவில், திரண்டிருக்கும் மக்கள் அனைவரையும், அவர்கள் எதிர்நோக்கிக் காத்திருந்த அந்த சக்தி வாய்ந்த தியானத்தை வழிநடத்துகிறார் சத்குரு. இந்த அற்புதமான இரவில் திரண்டிருக்கும் லட்சக் கணக்கானவர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் நம் தன்னார்வத் தொண்டர்களே சமைத்து அன்னதானம் வழங்குகிறார்கள். மறுநாள் காலை 6 மணி அளவில், சத்குரு வழங்கும் மற்றொரு தியானத்தோடு இந்தக் கொண்டாட்டம் நிறைவு பெறுகிறது.

ஈஷாவின் மஹாசிவராத்திரி விழாவில் பங்குபெற்ற ஒருவரின் பகிர்தல்:

"நான் இதுவரை சிவராத்திரியன்று இரவு விழித்திருந்ததே இல்லை. சத்குரு முதுகுத்தண்டை நேராக வைக்கும்படி சொன்னவுடன், எனக்கு என் வழக்கமான முதுகுவலிதான் யோசனையாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சிகள் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே என் முதுகு வலி எல்லாம் மறந்துபோய், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென இரவெல்லாம் முயற்சியே இன்றி கண்விழித்திருந்தேன். மறுநாள் காலை விடுப்பு எடுக்க தேவைப்படாததால் வேலைக்கும் சென்றுவிட்டேன்," என்று சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த திருமதி. அமுதா அவர்கள் குதூகலமாய் பகிர்ந்து கொண்டார்.

இது போன்ற ஆனந்தமான அனுபவத்தை நீங்களும் வந்து உணர்ந்துதான் பாருங்களேன்!

நீங்களும் பங்குபெறலாம். அனுமதி இலவசம்!

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரும் அளவில் நிகழும் இந்த விழாவுக்கென கோவையில் இருந்து இரவு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் விடப்படுகின்றன. நேரில் வர இயலாதவர்கள் தொலைக்காட்சி மூலமாகக் கண்டு களித்திட பாலிமர், பொதிகை, புதுயுகம், சங்கரா மற்றும் ஆஸ்தா டி.வி. சேனல்களில், இந்நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகிறது. விழாவிற்கு வருகின்ற அனைவருக்கும் நள்ளிரவு வரை அன்னதானமும் நடைபெறுகிறது.

மஹாசிவராத்திரி அன்னதானம்

ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும் இந்த மஹாசிவராத்திரி இரவில், உலகெங்கிலும் இருந்து லட்சோப லட்ச மக்கள் பங்கேற்க, இவ்விழா மிகப் பிரம்மாண்டமாக நம் ஈஷாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தியானலிங்கத்தின் அருள் அதிர்வுகளோடும், சத்குரு அவர்களின் முன்னிலையிலும் நிகழும் இந்த மகத்தான விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.

அன்னதானம் என்பது காலங்காலமாக ஆன்மீக வாழ்க்கையின் அங்கமாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்னம், பிரசாதமாக வழங்கப்படுவதால் அந்த உணவு நம் உயிர்த்தன்மையில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்துகிறது. ஞானியர் பலரால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அன்னதானம், நம் ஈஷா யோக மையத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மஹாசிவராத்திரி அன்று நம் ஈஷா யோக மையத்திற்கு வரமுடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறே அன்றிரவு செய்யக்கூடியவை:

- இரவு முழுவதும் படுத்திடாமல், கண்விழித்து, முதுகை நேர்நிலையில் வைத்து, விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.

- நீங்கள் அமர்ந்திருக்கும் அறையில் விளக்கு (நல்லெண்ணெய்/ விளக்கெண்ணை/ நெய் விளக்கு) அல்லது லிங்கஜோதி ஏற்றி, அவ்விடத்தில் தியானலிங்கம் அல்லது சத்குருவின் படத்தை முன்வைத்து, அவ்விடத்தில் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம்.

- ஒன்று நீங்கள் உச்சாடனை செய்யலாம், அல்லது பக்திப் பாடல்களோ உச்சாடனங்களோ கேட்டவாறு அமர்ந்திருக்கலாம்.

- தனியாக இருக்கிறீர்கள் என்றால் நடந்த வண்ணம் இருக்கலாம் அல்லது இயற்கையுடன் ஒன்றி அமரலாம். பலபேர் சேர்ந்திருக்கிறீர்கள் என்றால், முடிந்தவரை மௌனமாக இருப்பது நல்லது.

- நள்ளிரவு சாதனா குறிப்புகள்:
இரவு 11:10 - 11:30 --- சுக பிராணாயாமா
இரவு 11:30 - 11:50 --- 'ஆஉம்' உச்சாடனை
இரவு 11:50 - 12:10 --- 'ஆஉம் நமஷிவாய' மஹாமந்திரம் உச்சாடனை

- டி.வி மூலம் நேரடி ஒளிபரப்போ, அல்லது இணையம் மூலம் ஒளிபரப்பை காண்கிறீர்கள் என்றால், அதில் கூறப்படும் குறிப்புகளை பின்பற்றலாம்.

ஈஷா மஹாசிவராத்திரி: குறுந்தகவல்கள்

மஹாசிவராத்திரி பற்றி நீங்கள் கவனம் வைத்துக் கொள்ள வேண்டிய சிற்சிறு தகவல் குறிப்புகள்:

#1 இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தி மேல்நோக்கி எழும்புகிறது

ஒரு மாதத்தின் மிக இருளான நாள் சிவராத்திரி. அன்று இயற்கையே நம் சக்தியை மேலெழும்பச் செய்யும் வண்ணம் இருப்பதால், அன்று ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர்.

யோகப் பயிற்சிகளும் பிற ஆன்மீக செயல்முறைகளும் ஒரு மனிதனின் உயிர்சக்தியை உயரச்செய்து, அதன் மூலம் அவன் தன் எல்லைகளைக் கடந்து, எல்லையில்லாமல் விரிய வேண்டும் என்பதற்காகத்தான் செய்யப்படுகிறது. மஹாசிவராத்திரி அன்று இயற்கையே இவ்வழியில் நமக்கு உதவுவதாக அமைகிறது. அதனால் இப்போதிருப்பதை விட இன்னும் சிறிதேனும் விரிவடைய வேண்டும் என்று முயல்பவர்களுக்கு சிவராத்திரி, அதிலும் மஹாசிவராத்திரி மிக மிக முக்கியமான நாள்.

#2 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்

கிரஹஸ்தர்களுக்கு மஹாசிவராத்திரி, சிவனின் திருமண நாள். அவர் சதியையும், பின்னர் பார்வதியையும் இந்த நாளிலேதான் மணந்தார். லட்சியவாதிகளைப் பொருத்தவரை இது சிவன் தன் எதிரிகளை அழித்த நாள். ஆனால் யோகியருக்கும், முனிவர்களுக்கும் இந்நாள் 'நிச்சலனத்தின்' சாரம். ஆதியோகி சிவன் பல்லாயிரம் ஆண்டுகால தவத்திற்குப் பின், 'அச்சலேஸ்வரராக', நிச்சலனத்தின் உச்சத்தில், கைலாய மலையுடன் கலந்து, தான் அறிந்த அனைத்தையும் கைலாய மலையில் பதித்த நாள் இது.

#3 இரவெல்லாம் விழிப்போடு, முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், அதிகளவில் பலன்கள்

புராணக்கதைகள் கூறும் காரணம் எதுவாகினும், இந்நாளின் முக்கியத்துவம் அன்று இயற்கையாகவே நம் உயிர்சக்தி மேலெழும்புகிறது என்பது. அதனால் இந்த இரவை விழிப்போடு, விழிப்புணர்வோடு, முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால், அதிக அளவில் பலன் பெற்றிடுவோம். அன்று நாம் செய்திடும் ஆன்மீக சாதனாவிற்கும் பலன் அதிகமாக இருக்கும்.

வேறு பரிமாணத்திற்கு நாம் வளர வேண்டுமெனில், நம் சக்திநிலை உயர்வது அவசியம். இதை நோக்கித்தான் நாம் செய்யும் எல்லாப் பயிற்சிகளும் இருக்கின்றன. அதனால் இந்நாள் நமக்கு மிக முக்கியமான நாள்.

#4 இரவெல்லாம் நீடிக்கும் இசை நிகழ்ச்சிகள்

பிரம்மாண்டமாய், ஆனந்தமாய், மாபெரும் கொண்டாட்டமாய், இரவெல்லாம் நீடிக்கிறது நம் ஈஷா யோகா மஹாசிவராத்திரி திருவிழா. சக்திவாய்ந்த தியானங்கள், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் அற்புதமான இசைநிகழ்ச்சிகள், ஈஷாவின் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவின் இசை, இரவெல்லாம் நம்மோடு உடனிருக்கும் சத்குரு என விசேஷமான அந்நாளின் மகத்துவத்தை நாம் உணர்ந்திட நமக்குப் பல உறுதுணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

#5 சத்குரு உடனிருக்க, தியானலிங்கத்தில் நிகழும் பஞ்சபூத ஆராதனா

நீங்கள் சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், உண்ணும் உணவு, நடந்து செல்லும் நிலம், உங்களை வாழச் செய்யும் நெருப்பாக உங்கள் உயிர்சக்தி, ஆகியவற்றால்தான் ஒரு படைப்பாக நீங்கள் இங்கு வாழ்கிறீர்கள். இந்த ஐந்து அடிப்படைக் கூறுகளும் நமக்குள் எப்போது நன்றாக ஒருங்கிணைந்து செயல்படுகிறதோ அப்போது நமக்கு ஆரோக்கியமும் நல்வாழ்வும் நிச்சயம் உண்டாகும். இதற்கென யோகத்தில், 'பூத ஷுத்தி' என்ற தனி விஞ்ஞானப் பிரிவே இருக்கிறது.

இந்த ஆழ்ந்த விஞ்ஞானத்தின் பலனை நாமும் பெற, 'பஞ்சபூத ஆராதனா' எனும் செயல்முறையை சத்குரு நமக்கு வழங்குகிறார். ஒவ்வொரு சிவராத்திரி அன்றும், தியானலிங்க வளாகத்தில் பஞ்சபூத ஆராதனா நடக்கிறது. மஹாசிவராத்திரி அன்று நடக்கும் பஞ்சபூத ஆராதனாவில் சத்குருவும் உடன் இருப்பார்.


குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.