ஈஷா யோகா வகுப்புகள் பல இடங்களில் பல வருடங்களாக நடந்து வருகிறது. அதுவும் சமீபத்தில் அதன் வளர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. இதற்கு இந்த வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களும், இந்த வகுப்பை திறமையாக ஒருங்கிணைத்து நிகழ்த்தும் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். என்றாலும் இது ஏன் இன்னும் பல மக்களை சென்றடையவில்லை..? சத்குருவின் பதில் இதோ...

Question: நான் பார்த்தவரை இந்த யோகப் பயிற்சிகள் செய்பவர்கள் உண்மையாகவே மாறியிருக்கிறார்கள், வளர்ந்திருக்கிறார்கள். முன்பிருந்ததைவிட, இன்று அவர்கள் இன்னும் ஆனந்தமான மனிதர்களாக இருக்கிறார்கள். இதனை ஏன் சமூகத்திற்கு நீங்கள் பெரிய அளவில் கொண்டுபோவதில்லை?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இதை எல்லோருக்குமே வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசையும். ஆனால் தேவையான அளவிற்கு கைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். நமது தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகம் தான். ஆனால் இந்த பயிற்சி வகுப்புகளை எடுக்க வேண்டுமெனில், அதற்கு இன்னும் அதிகமான கட்டுப்பாடும், அர்ப்பணிப்பு உணர்வும் தேவை.

இதை செய்ய வேண்டுமெனில், உங்கள் வாழ்வில் யோகா ஒரு சிறு அங்கமாக இருந்தால் போதாது. உங்கள் வாழ்வையும்விட அது முக்கியமானதாக இருக்க வேண்டும்.

இந்த வகுப்புகளில் நடப்பது வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. இது ஒரு உயிரோட்டமான அனுபவம். இந்த அனுபவத்தை சரியான முறையில் ஒருவர் வழங்க வேண்டுமெனில், அதற்கு அதீதமான பயிற்சியும், அர்ப்பணிப்பு உணர்வும் தேவை. இதை ஒரு தொழிலாகச் செய்ய முடியாது. இதை செய்ய வேண்டுமெனில், உங்கள் வாழ்வில் யோகா ஒரு சிறு அங்கமாக இருந்தால் போதாது. உங்கள் வாழ்வையும்விட அது முக்கியமானதாக இருக்க வேண்டும். உங்கள் உயிரையும் விட அது மேலானதாக இருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் இந்த பொறுப்பை சரியான வகையில் ஏற்று, சரிவர செய்யமுடியும்.

நீங்கள் பங்குபெற்ற வகுப்பின் மகத்துவமும், நீங்கள் தினமும் செய்து வரும் பயிற்சியின் பலன்களையும் இந்நேரம் உணர்ந்திருப்பீர்கள். முழு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு மனிதர் அங்கே இல்லாவிட்டால் அந்த வகுப்பு அங்கே நிகழாது. இதுபோன்ற ஒரு மனிதரை, இந்நிலையில் இருந்து செயல்படக் கூடிய ஒரு மனிதரை உருவாக்க வேண்டுமெனில், அதற்கு குறைந்தது நான்கைந்து ஆண்டுகளேனும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் முழுமையான ஆசிரியர்களாக வளர முடியும்.

இன்றைய உலகில் முழு அர்ப்பணிப்பு என்பது, கிடைத்தற்கரிய ஒன்றாக இருக்கிறது. என்றாலும், நம்மோடு முழுமனதாய் சேர்ந்து, இதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்களோடு நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் பலர் இதில் மனமுவந்து பங்குபெறும் போது, இதை பெருமளவில் நிகழ்த்தலாம். அதற்காகத் தான் நாங்களும் முயற்சித்து வருகிறோம்.

இதை வெறும் தகவலாக தரமுடியும் என்றால், என்றோ இதை புத்தக வடிவத்தில் வெளியிட்டு, வெகுவிரைவில் லட்சக்கணக்கானவர்களை எட்டியிருக்கலாம். ஆனால் இது அவர்களை எட்டுமே தவிர, அவர்களைத் தொடாது. அவர்கள் உள்நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாது. அது நிகழ வேண்டுமெனில், இந்த வகுப்பு, உயிரோட்டமுள்ள ஒரு அறிவாக, உணர்வாக அவர்களைத் தொட வேண்டும். ஒன்றை உயிரோட்டமுள்ள ஞானமாக வைத்திருப்பதற்கும், அதையே வெறும் தகவலாக வைத்திருப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக இன்றைய நவீன கல்வி, வெறும் தகவல்களின் தொகுப்பாகி விட்டது. இதில் அனுபவத்திற்கான பரிமாணம் எதுவுமேயில்லை. இன்றிருக்கிற மக்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் எதுவும் தெரியாது. மெல்ல மெல்ல அந்த நிலையை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் பற்றியும், அதைக் கடந்து பல விஷயங்களைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அவர்களுக்குத் தெரியாது. பலபேருக்கு விடியற்காலையில் எப்படி எழுவது, அந்தக் காலைப்பொழுதை எப்படி அனுபவிப்பது என்றுகூடத் தெரிவதில்லை.

இந்நிலை மாற வேண்டுமெனில், வாழ்க்கை பற்றிய அவர்கள் கண்ணோட்டம் மாறவேண்டும். வாழ்வை தகவல்களாக அணுகாமல், உணர்வோடும் அணுகவேண்டும். உணர்வு ஊற்றெடுக்கும்போது, வாழ்க்கை அனுபவம் ஆழமாகும் போது, தானாகவே தெரிந்து கொள்ளவேண்டியது அனைத்தும் தெளிவாகப் புரியும். வாழ்வும் ஆனந்தமாகும்.

உலகில் இந்த ஆனந்த அலை பெருக்கெடுக்க கைகொடுங்கள்... கைகோர்த்து, ஒன்றாக அதை நிகழ்த்துவோம்!