ஈஷா 20 - 20 இன்னிங்ஸ்

ஈஷா உருவாகி, சென்ற ஆண்டோடு 20 வருடங்கள் முடிவடைந்தது. அந்த 20 வருட அனுபவங்கள், மற்றும் இனி வரும் ஆண்டுகளில் ஈஷாவின் செயல்திட்டம் பற்றி சத்குரு பகிர்ந்து கொண்டது, இதோ உங்களுக்காக...
 

ஈஷா உருவாகி, சென்ற ஆண்டோடு 20 வருடங்கள் முடிவடைந்தது. அந்த 20 வருட அனுபவங்கள், மற்றும் இனி வரும் ஆண்டுகளில் ஈஷாவின் செயல்திட்டம் பற்றி சத்குரு பகிர்ந்து கொண்டது, இதோ உங்களுக்காக...

சத்குரு:

20 வருடங்கள் முன்பு...

20 வருடங்களுக்கு முன்னர், டிசம்பர் மாதத்தில் அந்த ஏழாவது மலையின் முகட்டை நான் முதல்முறையாக பார்த்தேன். அதற்கடுத்த வருடம், ஜுன் மாதத்தில் 90 நாள் ஹோல்னஸ் வகுப்பைத் துவங்கினோம். முதல் 30 நாட்களுக்கு மட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 68 பேரும், 3 மாதங்களும் விடாமல் அந்நிகழ்ச்சியில் இருந்த 39 பேரும், பலவகையில் இன்றிருக்கும் ஈஷாவின் அடித்தளமாய் இருந்திருக்கின்றனர்.

நான் வாழ்க்கை மேல் காதல் கொள்ளவில்லை, அதன்மேல் தீராத் தாபம் கொண்டிருக்கிறேன் என்றேன்.

அதில் பலர் ஓசையின்றி ஈஷாவில் வாழ்கின்றனர். “நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன்,” என்று அவர்கள் எதற்கும் உரிமைக் கொண்டாடிக் கொள்வதில்லை. முதல் நாளிலிருந்தே நாம் ஈஷாவில் உருவாக்கி வைத்த கலாச்சாரம் இது. பலரும் தனக்கு கொடுக்கப்பட்ட செயல்களை எந்தக் கேள்வியும் இல்லாமல் செய்கின்றனர். இது அபரிமிதமான குணம்.

கடந்த 20 ஆண்டுகளாக, கண் கட்டப்பட்டிருக்கும் குதிரையைப்போல் நாம் ஒரே நோக்கோடு பயணித்திருந்தோம், இதனால் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் பல்வேறு நிகழ்வுகள், ஏதோவொரு இடத்தில் நிகழ்ந்தபடியே இருந்தன. நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் விரிவடைந்து கொண்டே செல்கிறது, நாம் நினைத்ததை விடவும் அனைத்து செயல்களும் பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலை, எல்லா நேரத்திலும் விறுவிறுப்பாக செயல்படும் நிலையை உருவாக்கியது. இதுபோன்ற வாழ்வை எப்படி அமைத்துக் கொள்வதென்பது பலருக்குப் புரிவதில்லை. நம் கைகளில் 10 ரூபாய் இருந்தால், அதில் 100 ரூபாய்க்கான வேலையைச் செய்கிறோம். நம்மிடம் 10 பேர் இருந்தால் அவர்களை வைத்து 25 பேருடைய வேலையை நாம் செய்கிறோம்.

காதல் இல்லை தாபம்

சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் என்னிடம், “சத்குரு, நீங்கள் வாழ்க்கைமேல் தீராக் காதல் கொண்டிருக்கிறீர்கள்,” என்றார். நான் வாழ்க்கை மேல் காதல் கொள்ளவில்லை, அதன்மேல் தீராத் தாபம் கொண்டிருக்கிறேன் என்றேன். நான் “தாபம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் காரணம், இரண்டாம் நபர் உடன்படாவிட்டால், காதல் அணைந்து போகும். தாபமோ இன்னொருவர் சார்ந்தது அல்ல, அது எப்போதுமே இருக்கும். மனிதகுலத்திற்கு நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்ய இந்த ஒரு ஜென்மம் போதாது. நாம் 100 வருடங்கள் வாழ்ந்து, ஓயாமல் வேலை செய்து கொண்டே இருந்தாலும்... அதுவும் போதாது. இதனை நிகழச் செய்ய ஒரே வழி, அடுத்து வரும் தலைமுறையை ஊக்கமடையச் செய்து, அதனை பெரிய அளவில் நிகழச் செய்வதே.

20 வருடங்களுக்கு முன் இங்கிருந்தவர்கள் ஈஷா யோகா மையத்தில் இருக்கும் முக்கோண கட்டிடத்தை கட்ட கான்கிரீட் சுமந்தனர். இங்குள்ள தியானலிங்கத்திற்கு கற்களைச் சுமந்தனர். அதனை உருவாக்கியதில் உள்ள நிறைவும் திருப்தியும் அவர்களிடத்தில் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் ஈஷாவில் இருந்திராத உங்களில் பலருக்கும், அதுபோன்ற வாய்ப்பை வழங்க விரும்புகிறோம்.

வருங்கால திட்டம்

ஈஷா யோகா மையத்தில் வாழ முடியாதவர்கள், உங்களை அருள் முழுமையாய் தழுவிடவேனும் அனுமதியுங்கள்.

20 வருடங்கள் முடிந்திருக்கும் இச்சமயத்தில், அடுத்து வரும் சில மாதங்கள் புதிய செயல்களைத் துவங்காமல், இதுவரை செய்துள்ள செயல்களை மறுசீரமைப்பு செய்யவேண்டும். இதுவரை நாம் செய்தவற்றை திரும்பிப் பார்க்க நேரம் இருந்ததில்லை. இனி அவ்வாறில்லாமல், பல விஷயங்களை அவை எப்படி நடக்கவேண்டுமோ அப்படி மாற்றவேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கிறது. இந்த இடத்தை சீரமைக்கும் முயற்சியில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு, பலகோடி மக்களின் வாழ்வைத் தொடும் உன்னத செயலைச் செய்வதில் உள்ள ஆனந்தத்தை உணர வேண்டும். இனிவரும் பற்பல ஆண்டுகளுக்கு, மக்கள் பலரும் இதன் பலனை அனுபவித்து, உணர்ந்து, பாராட்டும் செயல் அல்லவா இது!

நாம் செய்யும் மறுசீரமைப்புகள், வெளிக்கட்டமைப்பில் மட்டுமல்லாமல் மனித கட்டமைப்பிலும் செய்யவிருக்கிறோம். நாம் ஈடுபட்ட காரியங்கள் வெற்றியடைந்திருந்தாலும், அவற்றை இன்னும் சிறப்பாக நம்மால் செய்ய முடியும். இங்குள்ள மக்கள் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள உறுதி, அர்ப்பணிப்பு, பக்தியை பார்க்கும்போது நாம் தற்சமயம் செய்து கொண்டிருப்பதைவிட பல மடங்குச் சிறப்பாக செய்ய முடியும்.

ஈஷாவை உணர வாருங்கள்!

தனிமனித இதயங்களில் உள்ள அழகெல்லாம் தனக்குப் பொருத்தமற்ற செயல்களைச் செய்வதால் வீணாகிடக் கூடாது. நாம் சிறப்பாகச் செய்யக் கூடியவற்றை சிறப்பாகச் செய்யாமல் இருப்பதும், சிறப்பாக உருவாக்கக் கூடியதை சிறப்பாக உருவாக்காமல் இருப்பதும் தான் உண்மையிலேயே நமக்குப் பொருத்தமற்ற செயல்கள். மனித உயிரை வீணாக்கும் செயல்கள் இவை. அதீத தீவிரத்தாலும், அன்பாலும், பக்தியாலும் நிகழும் செயல்களின் வெளிப்பாடாய் ஈஷா யோகா மையம் இருக்க வேண்டும். மனித இதயங்களின் துடிப்பை இவ்விடம் பிரதிபலிக்க வேண்டும். இங்கு நுழையும் ஒவ்வொருவரும் அதை உணர வேண்டும்.

தங்கள் வாழ்வில் தன்னைவிட பெரிதான ஒன்றை படைக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் யாரும் உணர்வதில்லை. பெரும்பாலான மனிதர்கள் வெறும் பணம் சம்பாதிப்பதிலேயே தங்கள் வாழ்வைக் கழிக்கின்றனர். ஆனால், கோடிக்கணக்கான உயிர்களை உருமாற்றம் பெறச் செய்யும் ஒரு கருவியை, ஒரு இடத்தை உருவாக்கும் ஆனந்தத்தை நீங்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். உங்களையும் என்னையும் கடந்து வாழும் ஒன்றைப் படைக்கும் ஆனந்தத்தை நீங்கள் உணர வேண்டும்.

ஈஷா யோகா மையத்தில் வாழ முடியாதவர்கள், உங்களை அருள் முழுமையாய் தழுவிடவேனும் அனுமதியுங்கள். உங்களில் இருந்து பக்தியும், அன்பும், பொங்கிப் பெருகட்டும். உங்கள் உயிரின் இனிமை உங்களைச் சுற்றியுள்ள உலகை தொடட்டும். உங்களால் இயலும்போதெல்லாம் மையத்தில் தங்கியிருந்து செல்லுங்கள். நான் உங்களில் இருக்கிறேன்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1