கேள்வி : நமஸ்காரம் சத்குரு. சப்தம் - சக்தி இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது. எனவே நமது பாரம்பரிய இசையில் உள்ள வெவ்வேறு ராகங்களை கேட்பதன் மூலம் நமக்குள் ஷக்தி செயல்படும் விதத்தை மாற்றியமைத்து, நமது எண்ணங்களையும், உணர்வுகளையும் மாற்றிக்கொள்ள முடியுமா..? இசையும் ஒரு வகை கிரியா யோகாவா?

சத்குரு:

"கிரியா" என்ற வார்த்தைக்கு "உள்ளுக்குள் நடக்கும் செயல்" என்று பொருள். ஒலி அல்லது நாதம் என்பது பெருமளவில் வெளியே நடக்கும் செயல். பெரும்பாலான மனிதர்களுக்கு, ஒலியோ அல்லது ஒலியை வெளிப்படுத்துவதோ கர்மாவாக இருக்கிறது. கிரியாவாக இல்லை.

இதுவரையில் நீங்கள் வெளியில் இருந்து சேகரித்துள்ளதை வைத்தே உங்கள் உடல் மற்றும் மனதின் அமைப்பு உருவாகி இருக்கிறது. 

இது உள்ளுக்குள் நடக்கும் செயலாக இல்லாமல், வெளியில் நடக்கும் ஒரு செயலாகவே இருக்கிறது. நீங்கள் இப்போது இருக்கும் உடல் மற்றும் மனதின் எல்லைகளைக் கடந்த ஒன்றை உள்ளுக்குள் உருவாக்குவதையே கிரியா என்கிறோம்.

உள்ளுக்குள் ஏற்படுத்தும் தாக்கம்

இதுவரையில் நீங்கள் வெளியில் இருந்து சேகரித்துள்ளதை வைத்தே உங்கள் உடல் மற்றும் மனதின் அமைப்பு உருவாகி இருக்கிறது. கிரியா என்பது உங்கள் உண்மையான உள்தன்மையை வடிவமைக்கும் செயல். உங்கள் அடிப்படை உயிர்த்தன்மையிலே தாக்கம் ஏற்படுத்தும் வடிவமைப்பை அமைப்பது கிரியாவாகும். அப்படிப்பட்ட வடிவமைப்பு என்னவாக இருக்க முடியும்? முக்திக்கும், உள் சுதந்திரத்திற்கும் வழிவகுக்கும் வடிவமைப்பே இந்த மூல உயிர்த்தன்மைக்கு உகந்த ஒன்றாகும்.

படைப்பின் வரைபடம்

"சப்தங்களை எழுப்புவதால் அல்லது சப்தங்களை கேட்பதால் நாம் கிரியா யோகா செய்ய முடியுமா என்பது தானே உங்கள் கேள்வி..?" - இங்கே நாம் இசை என்ற வார்த்தைக்கு பதிலாக சப்தம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். ஏனெனில் இசை என்பது ஒலிகளை குறிப்பிட்ட விதத்தில் கோர்ப்பது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொதுவாக நாம் அறிந்திருக்கும் ஏழு ஸ்வரங்கள், வானவில்லின் ஏழு வண்ணங்களுடனும், நம் உடல் இயக்கத்தின் ஏழு சக்கரங்களுடனும் தொடர்புடையதாக அமைந்துள்ளது. 

இருபத்திரண்டு ஸ்ருதிகள் - சிறிய ஸ்வரங்களாக, - ஒரு ஸ்வரத்திற்குள் இன்னொரு ஸ்வரமாக இருக்கிறது! கம்பிகளின் உள்ள விகிதங்களின் எண்ணிக்கை பகா எண்களாக (prime numbers) 1,2,3,5 என பஞ்சபூதங்களில் ஆகாயத்தை தவிர்த்து மற்ற நான்கையும் குறிக்கிறது.

22 ஸ்ருதிகளும் விகிதங்களும் பகா எண்களின் பெருக்கல்களாக..

இந்த இருபத்திரண்டு ஸ்ருதிகளும் - இவற்றை இணைக்கும் பாலமாக இருக்கும் பகா எண்களும்(prime numbers) சேர்ந்து உறுதியான ஒரு அமைப்பாக வடிவெடுக்கிறது. இந்திய பாரம்பரிய இசையை பாடும் பாடகர் தனித்தனி இசைத் துண்டுகளாக பாடுவதில்லை. அடிப்படையான ராகத்துடன் துவங்கும் இசையில் அவரவர் திறமைக்கு ஏற்ப ஒரு இசைக்கோட்டையை கட்டமைக்கிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு கணித அடிப்படை இருக்கிறது. இன்று நவீன விஞ்ஞானம், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் கணித சூத்திரங்களாக எழுத முடியும் என்கிறது. பிரபஞ்சத்தின் முதுகெலும்பாக, மூல வரைபடமாக இருப்பதும் இதுதான்.

இதனால் தான் இந்திய பாரம்பரிய இசையை ஒரு பாடகர் பாடும்போது, மக்கள் விரல்விட்டு எண்ணி அவர் என்ன வடிவத்தை உருவாக்க முயற்சி செய்கிறார் என்று கவனிப்பார்கள். இது இசையின் அழகியல் பற்றி மட்டுமல்ல, அதன்பின் உள்ள கணிதத்தின் அதனால் உருவாக்கப்படும் வடிவங்களைப் பற்றியது இது. இசையை குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தும்போது உங்கள் அடிப்படை அமைப்பையே மாற்றிக் கொள்ள முடியும். உடல் மற்றும் மனம் அமைப்புகளை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

வண்ணங்களை கடந்து…

உதாரணத்திற்கு, இப்போது ஒரு குறிப்பிட்ட சப்தங்களை உச்சரித்து கருணை அல்லது அன்பை, ஒரு கணக்கியல் வடிவமாக இங்கே உருவாக்குவதாக வைத்துக் கொள்வோம். அதன்பிறகு நீங்கள் இங்கு வெறுமனே அமர்ந்தால் போதும். யாரும் உயிர் உருக பேசவோ, எந்த வார்த்தைகளையும் உபயோகிக்கவோ தேவையிருக்காது. ஒலியைக் கொண்டே ஒவ்வொருக்குள்ளிருக்கும் ஆனந்தம், பரவசம், கருணை, துயரம் என அனைத்தும் கண்ணீராக பொங்கி பிரவாகமாக வெளிப்படுவதைப் பார்க்க முடியும்.

63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தேவார பதிகங்களைப் பாடி, இப்போது வேதாரண்யம் என்ற பெயரிலும் வழங்கப்படும் திருமறைக்காடு ஆலயத்தின் பூட்டிய கதவுகளை திறந்திருக்கிறார். அப்போது கோவில் கதவுகளின் பூட்டுகளுக்கு ஒற்றை lever சாவி செய்வது வழக்கம். அதற்கேற்ப பொருத்தமான ஒலிகளை உருவாக்கி கதவுகளை திறக்கச் செய்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

இன்னும் பல அற்புதமான நிகழ்வுகள் டான்சென் மற்றும் அவரது குரு ஹரிதாஸ் பற்றி சொல்லப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ராகத்தில் பாடுவதன் மூலம் விளக்குகளை ஏற்றக்கூடியவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்; உடலில் உஷ்ணத்தை உருவாக்குவார்கள். ஒரு ஒலியை உச்சரிப்பதால் எவ்வளவு உஷ்ணத்தை நமது உடலில் உருவாக்க முடியும் என்பது யோக முறையில் அறியப்படும் ஒன்றே. எந்த பருவகாலமாக இருந்தாலும், குறிப்பிட்ட ஒலிகளை உச்சரித்தவுடன் உடல் உடனே வியர்க்கத் துவங்கும்.

விதவிதமான சப்தங்களை பயன்படுத்தி, வெவ்வேறு பருவகாலங்களை நாம் குறிப்பிடுகிறோம். தமிழ்நாட்டில் பருவகாலங்கள் 6 ஆக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு பருவகாலம் என வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஒரு ராகம் இருக்கிறது.

அப்படியானால் சப்தங்களை எழுப்புவது, மற்றும் இசையை கேட்பது, அல்லது குறிப்பிட்ட இசையை எழுப்புவது கிரியா யோகாவாகுமா? இப்போது நீங்கள் உச்சரிக்கும் ஒலிகள் கர்மாவாக - உங்கள் பொருள் தன்மையின் வெளிபாடாக இருக்கிறது. இதையே உங்கள் முக்திக்காகவும் உள்நிலையில் உருவாக்கிக் கொள்ளலாம்.

இதையே, வைராக்யா இசை தொகுப்பை வெளியிடும்போது, இதில் உள்ள ஐந்து பாடல்களை எந்தவித முன்முடிவும் இல்லாமல் வெறுமே கேளுங்கள் என்று நாம் சொன்னோம். வண்ணங்களை கடந்து செல்வதும் ஒருவகையில் கர்மாவை கடந்து செல்வதுதான். கர்மா என்பது ஒரு வகையில் வண்ணங்கள்தான்.

வண்ணமில்லாமல் என்று சொல்வதை ஏதோ எதிர்மறையானது என்று நீங்கள் நினைக்கலாம். "யாருமே வண்ணங்களின்றி இருக்க விரும்பமாட்டார்களே" எனலாம். எனவே நாம் இங்கு transparent எனும் வார்த்தையை பயன்படுத்துகிறோம்.

எது தன்னை ஊடுருவ அனுமதிக்கிறதோ எது வண்ணமின்றி இருக்கிறதோ, அது எந்த வண்ணத்தையும் தன்னில் எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.

இப்போது இந்த ஜன்னலில் இருக்கும் கண்ணாடி தன்னுள் ஒளியை ஊடுருவ அனுமதிப்பதால்தான் இங்கே பயனுள்ளதாக இருக்கிறது. வெளியே என்ன இருக்கிறதோ, அதை அப்படியே அதே வண்ணத்துடன் நாம் பார்க்க கண்ணாடி எந்த நிறமும் ஏற்காமல் இருப்பதுதானே காரணம். நீங்கள் பார்க்கும் அனைத்தையும், எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பார்க்கும் நிலைக்கு உங்களைக் கொண்டு வரமுடியும்போது, உங்கள் பார்வை எந்த நிறமும் பூசிக்கொள்வதில்லை -பழைய ஞாபகங்களில் இருக்கும் எதுவும் உங்களை ஆளுமை செய்து, பார்க்கும் அனைத்துக்கும் நிறம் பூசாது. உங்கள் மனம் எந்த நிறமும் இல்லாமல் வெளிப்படையாக இருந்தால் மட்டுமே- உங்கள் புத்திசாலித்தனம் வைராக்கிய நிலையில் வெளிப்படையாக இருக்கும். இந்த நிலை நிகழும்போது உங்கள் புத்திசாலித்தனமே விடுதலையை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். உங்கள் புத்திசாலித்தனம் எதாவது சாயம் பூசிக் கொள்ளும்போது, நீங்கள் என்ன செய்தாலும் சரி, அது உங்களை பிணைப்பதாகவே இருக்கும்.

கூர்மையான கவனம் (செவி)

வைராக்யா என்பதன் அர்த்தம் இதுவே.. "வைராக்" என்ற வார்த்தை நிறமற்று இருப்பது என்று பொருள் தந்தாலும், தன்னை ஊடுருவிச்செல்ல அனுமதிக்கும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது என்பதையே இது குறிக்கிறது. இதுவரையில் பல நிறங்களில் சேர்த்திருக்கும் கர்மாக்களின் தாக்கத்தை கடந்து உங்கள் மனம் வெளிப்படையானதாக மாறும்போது, இயல்பாகவே நீங்கள் முக்தியை நோக்கி நகர்வீர்கள், ஆம். உங்கள் புத்திசாலித்தனமே உங்களை தெய்வீகத்தின் வாசலை நோக்கி அழைத்துச் செல்லும்.

எனவே இசை கிரியா யோகாவா..? இசையை கேட்பவர் ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருந்தால், நிச்சயமாக இசையை கிரியாவாக மாற்றியமைக்கலாம். இசையின் தரம் இசைக்கலைஞரிடம் மட்டும் இல்லை, அது பெரிதும் ரசிகனிடமே - எவ்வளவு கூர்மையாக ஒருவர் கவனிக்க முடியும் என்பதில் இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் கேட்பது கூர்மையாகும்போது, உங்கள் செவிப்பறைகளில் ஏற்படும் அதிர்வுகள் மட்டும் கிரகிப்படுவதில்லை. உங்கள் கேட்கும் திறன் செவிப்பறைகளை கடந்து - உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் ஒலியை எதிரொலிக்கும்.

இதனால்தான் உணரும் தன்மையின் உச்சமாக பாம்பு பார்க்கப்படுகிறது, ஏனென்றால் அதன் காதுகள் எப்போதும் தரையோடு தொடர்பில் இருக்கிறது. பாம்பிற்கு காதுகளே இல்லாதபோதும், கேட்பதற்கான எந்த அமைப்பும் இல்லாதபோதும், ஒட்டுமொத்த உடலையும் தரையோடு படரவைத்து அவர் கவனிக்கிறார். அவருக்கு என்ன தேவையோ அந்தளவிற்கு இந்த பூமியில் நடக்கும் அனைத்தையும் அவர் உணர்ந்திருக்கிறார். உங்கள் முழு உடலும் கேட்கும்திறனை பெற்றால், எது பொழுதுபோக்காக இருக்கிறதோ அதுவே கிரியா யோகாவாகவும் நிச்சயம் நிகழும்.