இருட்டைக் கண்டாலோ, இருட்டினுள் சென்றாலோ என்ன நடக்கும்? என்ற பயம் வருவது இயல்பானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இருட்டுதான் உண்மையை உணர்த்தக் கூடிய கருவி என தன் இளவயது அனுபவத்தை இக்கட்டுரையில் கூறி விளக்குக்கிறார் சத்குரு!

சத்குரு:

இருளைக் கண்டு ஏன் பயம்?

மனிதர்களுக்குத்தான் இருள் பற்றிய அச்சம் இருக்கிறது. பெரும்பாலான மிருகங்கள் விழிகளைவிட தங்கள் செவித்திறனையும் நுகரும் திறனையும்தான் அதிகம் நம்பி இருக்கின்றன. ஆனால் மனிதர்களுக்கு 80 சதவிகிதம் அவர்களுடைய விழிகள்தான் உணர்தலுக்கு உதவுகின்றன. அதனால், வெளிச்சம் அவனுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. இருள் என்பது பார்வையற்றவனாக அவனை உணர வைக்கிறது. அச்சம் பிறக்கிறது. நீங்கள் ஆந்தையாக இருந்தால், இருளைக் கண்டு பயப்படமாட்டீர்கள்.

நீக்கமற எங்கும் நிறைந்திருப்பது வெளிச்சம் அல்ல... இருள்தான். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதை என்னவென்று அழைக்கிறோம்? கடவுள் என்றுதானே? கடவுள் என்றால் இருள்தான்.

சிறு வயதில், என் சகோதரிகளுக்கும், சகோதரனுக்கும் இருள் குறித்த அச்சங்கள் உண்டு. இடி, மின்னலுடன் மழை வந்தால் என் சகோதரன் மிரண்டுவிடுவான். எனக்கோ உடனே மழைக்கு ஓட வேண்டும். அதில் நனைந்து கும்மாளமிட வேண்டும் என்று துடிப்பு எழும்.

மின்னலைப் பிடிக்கும் ரகசியம்!

'மின்னல் ஒரு வெளிச்சக் கழிபோல் பூமிக்குள் குத்தியிட்டு இறங்கும். ஒரு செப்புப் பாத்திரத்தில் பசுவின் சாணத்தை நிரப்பி, அதை மின்னல் இறங்கும் இடத்தில் பிடித்தால், மின்னல் சிறைப்பட்டுவிடும். அந்த வெளிச்சக் கழியை வைத்து எந்த சுவரைத் தொட்டாலும் அது அப்படியே திறந்துகொள்ளும். இந்த மாதிரி மின்னல்களைப் பிடித்துத்தான் கன்னக்கோல்களாகத் திருடர்கள் பயன்படுத்துகிறார்கள்' என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

மழை பெய்யத் துவங்கியதும், பசுவின் சாணத்தைத் தேடி ஓடுவேன். செப்புப் பாத்திரத்தில் நிரப்பி வைத்துக் கொண்டு, மின்னலுக்காகத் துடிப்புடன் காத்திருப்பேன். ஆனால், இடிச் சத்தத்தைக் கேட்டாலே என் சகோதரன் குலை நடுங்குவான். ஏதாவது ஒரு மூலையில் போய் ஒடுங்கிக் கொள்வான். பயத்தில் அழுவான்.

எது ஏழை வாழ்க்கை?

ஒரு பணக்காரத் தந்தை தன் மகனைப் பண்ணைக்கு அழைத்துச் சென்று சில நாட்கள் தங்கினார். பங்களாவுக்குத் திரும்பியவுடன் மகனிடம் கேட்டார். 'இப்போது தெரிகிறதா ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று?'

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

'தெரிகிறது அப்பா! நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது. குடிசையில் இருந்தவர்களிடம் நான்கு நாய்கள் இருந்தன. நாம் உணவைக் கடையில் போய் வாங்க வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் உணவைத் தாங்களே வளர்க்கிறார்கள். நம் கூரையில் 20 விளக்குகள் எரிகின்றன. அவர்கள் கூரையில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன. நம் வீட்டில் நீச்சல் குளம் இருக்கிறது. அவர்களுக்கோ முடிவில்லாத ஒரு ஓடை இருக்கிறது. அதையெல்லாம் பார்த்த பிறகுதான், நாம் எவ்வளவு ஏழைகளாக இருக்கிறோம் என்று புரிந்ததப்பா!" என்றான் மகன்.

எதையுமே நாம் பார்க்கும் கோணத்தில்தான் பார்வை வேறுபடுகிறது.

எது நிரந்தரமானது?

இருள் எது... ஒளி எது? எல்லாமே மனிதரின் பார்வையில்தான் இருக்கிறது. எதைப் போற்றுவீர்கள்? வெளிச்சத்தையா, அதன் மூலமான இருளையா? வெளிச்சம் தற்காலிகமானது. இருள் நிரந்தமானது. இருளைச் சற்று நேரத்துக்குத்தான் விலக்க முடியும். வெளிச்சத்தை நிரந்தரமாக விலக்க முடியும். எப்படிப்பட்ட வெளிச்சத்தையும் உங்கள் உள்ளங்கைகளை விழி அருகில் வைத்து மூடிவிட முடியும்.

முற்றிலுமான இருளில் எந்தப் பாகுபாடும் இல்லை. நல்லதும் இல்லை. கெட்டதும் இல்லை. உயிரற்ற இருளை சவம் என்கிறோம். உயிருள்ள இருளைச் சிவம் என்கிறோம். இருளைக் கொண்டாடும் விதமாகத்தான் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

இருள்தான் எல்லாவற்றுக்கும் மூலம், அதெப்படி என்று கேள்வி எழும். அர்ச்சுனனுக்குக் கூட இதே கேள்வி பிறந்தது. 'அது எப்படி கிருஷ்ணா, துரியோதனனும் தர்மனும் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்க முடியும்?' என்றுதான் கேட்டான்.

ஒரே மண்ணிலிருந்துதான் முள்ளும் வருகிறது. மலரும் வருகிறது. அதுதான் படைப்பின் அதிசயம்!

இரவில் வானை நிமிர்ந்து பார்க்கிறீர்கள். அங்கே எண்ணற்ற நட்சத்திரங்கள் மின்னுகின்றன. படைப்பின் பிரமாண்டத்தை வியக்கிறீர்கள். உண்மையில் அந்த நட்சத்திரங்கள் அண்டத்தையே ஆக்கிரமித்திருக்கும் மாபெரும் இருளில் சிறு வெளிச்சப் புள்ளிகள்தாம்.

கவனியுங்கள்... நீக்கமற எங்கும் நிறைந்திருப்பது வெளிச்சம் அல்ல... இருள்தான். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதை என்னவென்று அழைக்கிறோம்? கடவுள் என்றுதானே? கடவுள் என்றால் இருள்தான்.

ஹாசனுக்கும் மங்களூருக்கும் இடையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு குறிப்பிட்ட ரயில்பாதை இருக்கிறது. கிட்டத்தட்ட 36 கி.மீ. தொலைவு. வழியில் பல பாலங்கள். சில குகைகள் வழியே அந்த ரயில்பாதை செல்லும். கும்மிருட்டில் அந்த ரயில் பாதையில் நடப்பது எனக்குப் பிடிக்கும்.

குகைக்குள் பொட்டு வெளிச்சம் கூட இருக்காது. டார்ச்சைப் பயன்படுத்தாமல் நடந்து கொண்டே இருந்தால், தண்டவாளங்கள், சரளைக் கற்கள் இவற்றைத் தவிர எதையுமே உணரமாட்டீர்கள். உங்கள் கையையே உங்களால் பார்க்க முடியாது. சற்று நேரத்தில் கண்களைத் திறந்து வைத்திருக்கிறீர்களா, மூடி வைத்திருக்கிறீர்களா என்பது கூடப் புரியாது. அந்த அளவுக்கு இருள் சூழ்ந்திருக்கும். திடீர் திடீர் என்று வௌவால்கள் 'ஷ்யூ ஷ்யூ' என்று பறந்து போகும். அச்சப்படத் தேவையில்லை. வௌவால்கள் உங்கள் மீது வந்து மோதிவிடாது. அவை வெளிச்சத்தை நம்பி இல்லை.

தற்காலிகமான வெளிச்சம்!

அந்த இருளுக்கு முற்றிலுமாக உங்கள் புலன்கள் பழகிவிட்டபின், இதையும் அதையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில், அந்த இருளில் தொடர்ந்து இருந்து பார்த்தால், உங்களுக்கு ஓர் அற்புதம் நிகழும். வார்த்தைகளால் விவரிக்க இயலாத அற்புதம் அது.

வெளிச்சம் என்பது தற்காலிகம். வந்து போவது. சூரியனக்குக் கூட ஆயுள் குறிக்கப்பட்டுவிட்டது. இருள் அப்படி அல்ல. வெளிச்சத்தின் ஆயுள் முடிந்தபின்னும், தொடர்ந்து இருக்கப்போவது இருள்தான்.

வெளிச்சத்துக்கு ஓர் ஆதாரம் தேவை. இருள் எந்த ஆதாரத்தையும் சார்ந்திருக்க வில்லை. இருளின் மாபெரும் மடியில்தான் இந்தப் படைப்புகள் எல்லாம் வெளிப்பட்டு இருக்கின்றன என்று விஞ்ஞானம் கூட ஒப்புக் கொள்கிறது.

நம் இரு விழிகள் பார்ப்பதை வைத்துத் தீர்மானம் செய்யும் எதுவும், உண்மையான பரிமாணத்தைக் காட்டாது என்பதால்தான் மூன்றாவது விழி பற்றி ஆன்மீகம் பேசுகிறது. ஈஷாவில் ஐம்புலன்களால் உணர முடியாத பரிமாணங்களை அறிவதற்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. மூன்றாவது விழியைப் பயன்படுத்தத்தான் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த விழி திறந்துவிட்டால், உங்களுக்கு உள்ளே வெளிச்சம் வெள்ளமாகப் பாயும். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எவருக்கும் இருள் ஒருபோதும் அச்சம் தராது.

குரு என்பவர் இருளை விலக்க வந்தவர் அல்ல. இருளை விளக்க வந்தவர்!