சற்றே புதிரான ஒரு கேள்வியாய் தெரிந்தாலும் வாழ்வின் மர்மங்களை நம் கண்களுக்கு உணர்த்தும் வாழ்க்கை இரகசியம் இது. முற்றிலும் புரியாவிட்டாலும் கைவிளக்காய் நம்மை சிறிய வெளிச்சத்திற்கு கூட்டிச் செல்கிறது சத்குருவின் இந்த கேள்வி-பதில் பகுதி...


Question: யோகா என்பது கலையா? விஞ்ஞானமா?

சத்குரு:

துவக்கத்தில் அது ஒரு திறன். தொடர்ந்த பயிற்சி மூலம் அந்தத் திறன் கைவரப் பெற்றதும் அது ஒரு விஞ்ஞானமாகிறது. அந்த விஞ்ஞானத்தின் நுட்பங்களைப் புரிந்து, மிகத் தேர்ச்சி பெற்றதும் ஒரு கட்டத்தில் அது கலையாகிறது.

கலை என்ற வார்த்தையில்கூட யோகா முழுமையாக அடங்கிவிடாது. ஆழமாகப் போகப் போக, அது ஒருவித சாதுர்யமான தந்திரமாவதை வேண்டுமானால், கலை என்று சொல்லலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: உடலை விட்டு நம் உயிர் நீங்கியபின், அதன் அடுத்த கட்டம் என்ன?

சத்குரு:

உடலைவிட்டு உயிர் எப்படி நழுவி வெளியேறுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் அடுத்த கட்டம் அமையும்.

பொதுவாக ஒருவரது உயிர் பிரிந்ததும், அவர் இனி இல்லை என்கிறோம். அப்படிச் சொல்வது சரியில்லை. உண்மையில் அவர் இனி உங்கள் அனுபவத்தில் இல்லை என்பதே சரி. அவர் வேறு ஏதேதோ விதத்தில் அங்கே இருக்கிறார்.

உடலை எந்தவிதத்திலும் காயப்படுத்தாமல், சிதைக்காமல் முழு உணர்வுடன், ஒரு ஆடையை உதறுவது போல், உங்கள் உடலைவிட்டு உயிர் வெளியேறுமானால், அதை மஹாசமாதி என்கிறோம். அந்த நிலை அடைந்தவர்களுக்கு உயிர்ப் பயணம் அத்துடன் ஓரு முடிவுக்கு வருகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து துவங்கிய பயணம் அந்த ஒன்றுமில்லாததுடன் கலந்து ஐக்கியமாவதுடன் வாழ்க்கையின் வட்டம் முழுமையடைகிறது!

Question: கௌதம புத்தர் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தார் என்பது உண்மையா? பண்டைய யோகிகள் ஏன் உடைகளைத் துறந்து நிர்வாணமாக இருந்தார்கள்? உடைகளற்று இருப்பது தியான நிலைக்கு ஒரு வழியா?

சத்குரு:

கௌதம புத்தர் சமூகத்துடன் பலவிதங்களில் இயங்கிக்கொண்டு இருந்ததால், அவர் நிர்வாணமாக இல்லை.

வனங்களிலும் மலைகளிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடும் யோகிகள் எத்தனை காலத்துக்குத் தங்கள் உடைகளைப் பாதுகாக்க முடியும்? அந்த உடைகள் நைந்து பயனற்றுப் போனால், விலங்குகளைக் கொன்று அவற்றின் தோல்களை ஆடைகளாக அணிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள். அதனால் யோகிகள் தங்கள் உடைகள் பற்றி கவலைப்படவில்லை.

தவிர, ஆன்மீகப் பாதையில் யோகிகள் பயணம் செய்கையில் உடல் பற்றிய கவனத்தை வெகு குறைவாகவே வைத்திருக்க விரும்புவார்கள். நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்கையில், தேவையற்ற விஷயங்களை மினிமைஸ் செய்து வைத்திருப்பது போல், யோகிகள் தங்கள் உடல் பற்றிய கவனத்தைக் குறைத்து வைத்திருப்பார்கள். வெளியாருக்குத்தான் அவர்களுடைய நிர்வாணம் பற்றிய கவனமே இருக்கும். யோகிகளுக்கு அவர்களுடைய உடல் பற்றிய கவனமே இருக்காது.