இறக்கும் தருவாயில் இருப்பவருக்கு சத்குரு உதவுவாரா?
முக்தியை எட்டாத ஒரு மனிதர், இறக்கும் தருவாயில் இருக்கும்போது உங்களால் அவருக்கு உதவ முடியுமா?
 
 

Question:முக்தியை எட்டாத ஒரு மனிதர், இறக்கும் தருவாயில் இருக்கும்போது உங்களால் அவருக்கு உதவ முடியுமா?

சத்குரு:

பிராரப்த கர்மம் என அழைக்கப்படும், தனக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை முழுமையாக கரைத்துவிட்டவர் இருந்தால், அவர் விழிப்புணர்வில்லா நிலையில் இல்லாமல் விழிப்புணர்வாய் உயிர்விட நம்மால் உதவ முடியும். ஏனெனில், அவரிடம் ஏதுவான சூழ்நிலை அமைந்திருக்கும். அவர் கரைவதற்கும் முக்தி அடைவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பாலானோர் தனக்கு விதிக்கப்பட்ட பிராரப்தத்தை முழுமையாய் கரைப்பதில்லை. ஒருவரது பிராரப்தம் நிறைவு பெறுவதற்குள் அவர் வியாதியுற்று இறந்தால், அது வேலை செய்யாது. அப்போது அந்த மனிதர் சற்று மேம்பட்ட உணர்வுடன் உயிர்விட நம்மால் உதவ முடியும். அதன்பின், வேறெங்கோ ஓரிடத்தில் அவர் சற்றே மேம்பட்ட வாழ்க்கை வாழ்வார்.

தன் சாதனாவிற்கு தன்னை முழுமையாய் கொடுத்தவர்கள், ஒரு கணம் கூட, தன் முக்தியைப் பற்றி வருத்தப்பட தேவையில்லை.

ஒருவர் தன் பிராரப்தத்தை முழுமையாக கரைத்திருந்தால், அனைத்தும் முடிந்துபோகும். அவர் ஒரு குறிப்பிட்ட வெளியில், கர்ம இடைவெளியில் இருப்பார். தன் வாழ்நாள் முழுவதும் அடிமுட்டாளாக வாழ்ந்தவர்கள் கூட, தன் இறுதி நாட்களில் மிகுந்த விழிப்புணர்வுடன், ஞானத்துடன் இருப்பதை காண முடியும். ஏனெனில், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பிராரப்த கர்மம் நிறைவிற்கு வந்துவிட்டது. சொற்ப விஷயங்களே எஞ்சி இருக்கும். அவருக்கான அடுத்தக்கட்ட பங்கு, கரைக்கவேண்டிய பங்கு, இன்னும் உள்ளே நுழையவில்லை. அதனால் அதனை ஆசீர்வதிக்கப்பட்ட காலகட்டம் என்றே சொல்ல வேண்டும்.

அறியாமையில் வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும், திடீரென அவருக்கு சில விஷயங்கள் தெரியத் துவங்கும். “அடுத்த 3 நாட்களில் நான் இறந்துவிடுவேன்” எனவெல்லாம் சொல்லத் துவங்குவார். வயதான காலத்தில் முழு ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு இது துல்லியமாகத் தெரியும். அவர்களை நம்மால் கரைத்துவிட முடியும். ஏனெனில், அவர்கள் அப்படியொரு ஆசீர்வதிக்கப்பட்ட நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடம் கர்ம பந்தங்கள் கிடையாது. வேறெங்கோ அவர்களுக்கான கையிருப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இங்கோ, கர்மமற்ற ஒரு சிறிய வெளி இருக்கிறது. கர்மம் இல்லாது போனால், அந்த மனிதரிடம் தனிப்பட்ட குணமும் இல்லை. அங்கு தனிமனித இயல்புகள் நடைபெறுவதற்கான சமாச்சாரங்களே இல்லை. நீங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் கரைந்து போவது போன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறீர்கள். அடுத்தக்கட்ட கையிருப்பு இன்னும் விடுவிக்கப்படவில்லை அல்லவா? இப்பிறப்பிற்கான பங்கை தீர்த்துவிட்டீர்கள். அப்போது கரைவது மிகச் சுலபம். ஒருவர் இந்த நிலையை அடையாத பட்சத்தில், உடல் காயமுற்றோ, நோயுற்றோ இறப்பினை அணுகிக் கொண்டிருந்தால், அந்த மனிதர் இன்னும் சற்று மேம்பட்ட உணர்வு நிலையில் உடல்விட நம்மால் உதவி செய்ய முடியும். இதன்மூலம், பின்னர், அவர் இன்னும் சற்று மேன்மையான வாழ்க்கை வேறிடத்தில் வாழ்வார்.

Question:அப்போது சத்குரு, ஒருவர் ஒவ்வொரு முறை பிறக்கும்போதும் ஏதோ ஒரு மூட்டை கர்மத்துடன் பிறந்து, அதனை கழிப்பதற்காகவே வாழ்கிறாரா?

சத்குரு:

கிடங்கு உள்ளதே... ஒரே ஒரு லாரி லோடு வெளியே எடுக்கப்பட்டு இந்த முறை கரைக்கப்படுகிறது. ஆனால், கிடங்கு உங்கள் மண்டையில் அமர்ந்திருக்கிறதே! சம்யமா வகுப்பில் நாம் பிராரப்த கர்மாவிற்குள் செல்வதில்லை, சஞ்சித கர்மாவிற்குள் செல்கிறோம். அதாவது கிடங்கிற்குள் செல்கிறீர்கள். இதனால்தான், ஆன்மீகப் பாதையில் செல்லும் ஒருவர், சூழ்நிலையை சரியாகக் கையாளாவிட்டால், பிறரைவிட, அதிக பாதிப்புகள் அவருக்கு ஏற்படும் என்று சொல்கிறோம். ஏனெனில், அவர் அதிகளவிலான கர்மத்தை தன் கைகளில் எடுக்கிறார். இயல்பு வாழ்க்கையில் இருப்போர், தனக்கு விதிக்கப்பட்டதை மட்டுமே கழிப்பார்கள். ஆனால், ஆன்மீகத்தில் இருப்பவர்களோ, மொத்த கிடங்கினையும் கையில் எடுக்கப் பார்க்கின்றனர். படிப்படியாக செல்லாமல், ஒரு நாளிலேயே பிஹெச்டி பட்டம் வாங்க நினைக்கின்றனர். இதனால்தான், யோகப் பாரம்பரியத்தில் நிறைய ஒழுக்கமுறைகள் எடுத்து வரப்பட்டன. உங்களை நாம் திளைப்பில் ஆழ்த்தும்போது, உங்களுக்கு அந்தச் சூழ்நிலையைக் கையாளக்கூடிய பக்குவம் ஏற்படும். அப்படி இல்லாத பட்சத்தில், நீங்கள் தயாராய் இல்லாத ஏதோ ஒரு விஷயத்தை உங்களுக்குத் திறந்து காட்டுகையில், கர்மப் பிடிப்பு உங்களை திக்குமுக்காட வைத்துவிடும்.

Question:பல சூழ்நிலைகளில், உங்கள் சீடர்களிடம், “நான் உங்களுக்கு பாதையைத் தான் காண்பிப்பேன், விடுவிக்கமாட்டேன்” என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படியென்றால், அவர்களுடைய கர்மத்தினை நீங்கள் கரைக்கமாட்டீர்களா?

சத்குரு:

நான் இதுபோன்ற சூழ்நிலைகளில் இறப்பு பற்றி பேசவில்லை. நான் உங்களது தற்போதைய வாழ்க்கையைப் பற்றி பேசுகிறேன். இதனால், நீங்கள் வாழ்வினை அர்த்தமுள்ளதாய் வாழ முடியும். இறக்கும்வரை எப்படியோ வாழ்ந்துவிட்டு, இறக்கும் தருவாயில் நான் அடைப்பானைப் பிடுங்கிவிடுமாறு எதிர்பார்க்காதீர்கள். நான் உங்களுக்கு பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கிறேன், அதைச் செய்து, உங்கள் வாழ்வினை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள். அருளுடன் அறிவுடன் வாழுங்கள் எனச் சொல்கிறேன். உங்கள் வாழ்வை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், ஞானோதயத்தை நோக்கி செயல்படுங்கள், இங்கு வாழும்போதே மேன்மையான வாழ்வினை வாழ்ந்திடுங்கள்.

தன் சாதனாவிற்கு தன்னை முழுமையாய் கொடுத்தவர்கள், ஒரு கணம் கூட, தன் முக்தியைப் பற்றி வருத்தப்பட தேவையில்லை. முக்தி - உத்திரவாதம். ஆனால், வாழ்வினை நேர்த்தியாக வாழ்கிறீர்களா என்பதற்கு உறுதியில்லை. அது நீங்கள் சம்பாதித்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதற்கு மாற்று வழியே இல்லை.

நாம் சாதனா செய்யக் காரணம், வாழ்க்கை 100 சதவிகிதம் உங்கள் கைகளில் இல்லை. மக்கள் தன் முழுமையான பிராரப்தத்தைக் கழிப்பதில்லை. ஒன்று விபத்தினாலோ, வியாதியினாலோ, ஏதோ ஒரு காரணத்தினால் உயிர்விடுகின்றனர். இன்று பெரும்பாலான மக்கள், தன் பிராரப்தத்தை முழுமையாய் கழிக்காமல் மருத்துவமனைகளில் உயிர் விடுகின்றனர். இன்று எத்தனை பேர், வியாதி இல்லாமல், வெறும் முதுமையினால் உயிர் விடுகின்றனர் என நினைக்கிறீர்கள்? வெகு சொற்பமான சிலர் மட்டுமே அப்படி.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு நிலையை உருவாக்குவதற்காகவே சாதனா செய்கிறீர்கள். இதன்மூலம், நீங்கள் கர்மத்தை கழிக்கும் செயலையும் துரிதப்படுத்துகிறீர்கள். வேக வேகமாய் கர்மம் கழிகிறது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிராரப்தத்தின் சில அம்சங்களை நீங்கள் கரைத்துவிட்டால், நெடுநாட்களுக்கு நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழலாம்.

பொதுவாக, மக்கள் தங்கள் மன, உணர்ச்சி சார்ந்த பிராரப்தத்திற்காக செயல் செய்கிறார்கள். அந்த பிராரப்தத்தை நீங்கள் கரைக்கும் பட்சத்தில், உடல் சார்ந்த பிராரப்தம் மட்டும் எஞ்சியிருக்கிறது. அதனால் நீங்கள் தொடர்ந்து உயிர் வாழ்கிறீர்கள். ஆனால், அந்த வாழ்வில் தடுமாற்றம் இல்லை, திண்டாட்டம் இல்லை, மனப் போராட்டங்களும் இல்லை. இது ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நிலை. உடலது பிராரப்தமும் முடிந்தால், பிறகு இந்த உடல் விழுந்துவிடும். இதன்மூலம், முக்திக்கான சாத்தியங்கள் மிக மிக அதிகம்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1