இப்பிறவியில் செய்யும் தியானம் அடுத்த பிறவியில் உதவுமா?
தினமும் விழுந்துவிழுந்து தியானம் செய்கிறேனே. ஒருவேளை, திடீரென்று இறந்துவிட்டால்... செய்யும் சாதனா அனைத்தும் வீண்தானா..? அல்லது இதுவரை செய்ததை சேமித்து வைத்து, அடுத்து பிறக்கும் போது உபயோகிக்கலாமா? இதுபோன்ற கேள்விகள் உங்களுக்கு வருகிறதா?! சத்குருவின் பதில் இதோ...
 
 

தினமும் விழுந்துவிழுந்து தியானம் செய்கிறேனே. ஒருவேளை, திடீரென்று இறந்துவிட்டால்... செய்யும் சாதனா அனைத்தும் வீண்தானா..? அல்லது இதுவரை செய்ததை சேமித்து வைத்து, அடுத்து பிறக்கும் போது உபயோகிக்கலாமா? இதுபோன்ற கேள்விகள் உங்களுக்கு வருகிறதா?! சத்குருவின் பதில் இதோ...

Question:அன்புள்ள சத்குரு, இந்தப் பிறவியில் நான் முக்தி பெறவில்லை எனில், நான் இன்று செய்துவரும் பயிற்சிகள், அடுத்த பிறவியில் எனக்கு பயன்படுமா?

சத்குரு:

‘சேசின கர்மமு, சேதனி பதார்த்தமு’ என்று சொல்வார்கள். அதாவது, 'கர்மா என்பது அழிந்து போகக் கூடியதல்ல'. அதற்காக, "தியானத்தை இங்கு விட்டேன். அடுத்தமுறை அங்கேயே தொடங்கிடுவேனா?". இது அதுபோல் அல்ல. 'கர்மா' என்பதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். செய்யும் செயல் எல்லாம் கர்மா ஆகிவிடாது. ஒரு செயலை செய்யத் தூண்டும் நோக்கம் தான் கர்மாவாக உருவெடுக்கும்.

மெல்ல மெல்ல ஒரு சூழ்நிலை உருவாகும். அதற்கான வாய்ப்புகளை வாழ்க்கை உங்களுக்கு வழங்கத் துவங்கும்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு கசாப்புக் கடைக்காரர் என்று வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உணவு படைக்க நீங்கள் தினமும் விலங்குகளைக் கொல்கிறீர்கள். அவற்றை கொல்ல வேண்டும் என்ற ஆசையால் இல்லாமல், அதை ஒரு தொழிலாக மட்டுமே செய்கிறீர்கள். எனவே கொலை செய்கிற கர்மா உங்களைச் சேர்வதில்லை. உங்களுக்கு அறியாமையின் கர்மா மட்டும்தான். ஆனால் இதுவே, அந்த விலங்கை கோபத்துடனோ, பழி வாங்கும் உணர்வுடனோ அல்லது அது துடிப்பதைப் பார்ப்பதற்கோ கொன்றால், அது வேறுவிதமான கர்மாவாக உங்களை வந்தடைகிறது.

துரதிர்ஷ்டவசமாக சிலரின் வலி, சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. விலங்குகளை வேட்டையாடுவதை ஒரு பொழுதுபோக்காக செய்கிறார்கள். கொன்ற விலங்கினை, உண்பதற்காகக் கொன்றிருந்தால் கூட பரவாயில்லை. எல்லோருக்கும் உணவு வேண்டும். நீங்கள் உங்கள் உணவை (விலங்கை) தேர்ந்தெடுத்தீர்கள் என்று கொள்ளலாம். ஆனால், கொலை செய்வதில் இருக்கிற மகிழ்ச்சிக்காகவே கொல்வது, வேறு விதமான கர்மாவை ஏற்படுத்துகிறது. நாம் வாழவேண்டுமெனில், சுயமாய் உணவு தயாரிக்க முடியாது என்பதால், நம் உணவிற்காக வேறொன்றை கொல்ல வேண்டும் தான். சிலர் 'கேரட்'டைக் கொல்கிறார்கள். சிலர் கோழிகளைக் கொல்கிறார்கள். சிலர் மான்களைக் கொல்கிறார்கள். ஏதோ ஒன்று கொல்லப்படுகிறது.

உதாரணத்திற்கு, தினமும் வேர்க்கடலைகளை வாயில் போட்டு மெல்கிறபோது, கண்களை மூடி முழுமையாய் அதை உணருங்கள். வேர்க்கடலையில் உயிர்த்தன்மை நிறைந்திருப்பதை உணர்வீர்கள். ஒவ்வொரு முறை வேர்க்கடலையை மெல்லும்போது, அதில் உயிர்த்தன்மை நிரம்பியிருப்பதையும், அவை வாழத் தவிப்பதையும், நீங்கள் அவற்றைக் கொல்வதையும் உணர்ந்தால், உங்களால் அவற்றைச் சாப்பிட முடியாது. ஆனால், உங்களுக்குப் போதிய மனமுதிர்ச்சி இருந்தால், நன்றி உணர்வோடு அவற்றைச் சாப்பிடுவீர்கள். இந்த வேர்க்கடலைகள் உங்களுக்காக தம் உயிரையே தருவதை நன்றிப்பெருக்கோடு நினைப்பீர்கள். பொதுவாக வாழ்வின் சில கணங்களிலாவது உங்கள் தாய்மீது அதீத நன்றியுணர்வோடு இருந்திருப்பீர்கள். அதே உணர்வை இந்த வேர்க்கடலையின் மீதும் நீங்கள் செலுத்த வேண்டும். அத்தகைய மனநிலையில் நீங்கள் இருந்தால் நெகிழ்ந்து விடுவீர்கள். எனவே, கர்மா என்பது செயலல்ல. நோக்கம்தான்.

இப்போது ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள். அடுத்த பிறவியில் தாயின் கருவிலிருந்து வெளிப்பட்டவுடனேயே, நீங்கள் எழுந்து, அமர்ந்து தியானம் செய்யப் போவதில்லை. மற்றவர்கள் போலவே முட்டாள்தனமாகத்தான் வாழ்வீர்கள். ஆனால் மெல்ல மெல்ல ஒரு சூழ்நிலை உருவாகும். அதற்கான வாய்ப்புகளை வாழ்க்கை உங்களுக்கு வழங்கத் துவங்கும். உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகக் கவலைப்படும் நிலை, பொதுவாக ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு இருக்காது. அதைவிட உயர்ந்த ஒன்றை நோக்கி உங்கள் கவனத்தைச் செலுத்த முடியும். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், வசதிகள், பதவிகள், போன்றவற்றில் சிக்குண்டு அவற்றிலேயே அமிழ்ந்து விடுவீர்கள். எனவே உங்கள் போராட்டம் மறுபடியும் வேறொரு நிலையில் தொடங்குகிறது. மற்றபடி, வாழ்வின் வாய்ப்புகளை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், நிச்சயமாக நீங்கள் விட்ட இடத்திலிருந்தே துவங்கலாம்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1