Question: நம் நாட்டில் பணம் உள்ளவர்களிடம் மேலும் பணம் சேர்ந்து கொண்டே உள்ளது. நடைபாதையில் உள்ள குழந்தைகள் உணவுக்கே ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். இந்தியாவின் வறுமை எப்போது தீரும்? பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியாவை, என் வாழ்நாள் முடியுமுன் பார்க்க வேண்டும், இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

சத்குரு:

இது சிறிது நாட்கள் முன்னால் நடந்தது. யாரோ ஒருவரை பேட்டி கண்டபொழுது அவர், "ஒருவர் தேர்தலில் போட்டியிட்டார். அவர் ஒரு காசு கூட சம்பாதிக்கவில்லை. அவருக்கு இன்னும் 20,000 ரூபாய் கடன் இருக்கிறது. அதைக்கூட தீர்க்க முடியவில்லை அவரால். அவர் தேர்தலில் போட்டியிட்டார். அவர் எவ்வளவு மகத்தான ஆள்" என்றார். நான் கேட்கிறேன், 20 ஆயிரம் கடன் கூட தீர்க்க முடியவில்லை என்றால், அவரை எப்படி நமது நாட்டின் தலைவனாக்குவது? அந்த மாதிரி ஆள் வேண்டாம். நம்முடைய ஏழைத்தனத்தையே நாம் பாராட்டிக் கொள்கிற நிலை வந்துவிட்டது. எப்பொழுது, நாம் தோல்வியையே வெற்றி என்று பார்க்கிறோமோ அப்போது நமக்கு தோல்விதான் நடக்கும், இல்லையா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
எப்பொழுது, நாம் தோல்வியையே வெற்றி என்று பார்க்கிறோமோ அப்போது நமக்கு தோல்விதான் நடக்கும்

ஏழ்மையே நல்லது என்று நமக்கு நிறைய போதனை நடக்கிறது. மக்கள் ஏழையாக இருப்பது ஒரு துரதிர்ஷ்டமான சூழ்நிலை இல்லையா? ஏழ்மையே நல்லது, ஏழ்மையே நல்லது என்று நாம் ஏழ்மையைப் பெருமைப்படுத்த ஆரம்பித்தால் நாம் ஏழ்மையிலேயேதான் இருப்போம். இப்போது யாரோ ஒரு பணக்காரர், உங்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கிறார் என்றால், அவரை ஏதாவது செய்யலாம். அவர் முறைப்படியாக, நாட்டில் என்ன சட்டம் இருக்கிறதோ, அதன்படி பணம் சேர்த்து இருந்தால் அவரைப் பார்த்து நீங்கள் கைதட்ட வேண்டுமா? இல்லை கஷ்டப்பட வேண்டுமா? வெற்றியைப் பார்த்தால் கை தட்ட வேண்டுமா? இல்லை பொறாமைப்பட வேண்டுமா?

எங்கே வெற்றி நடந்தாலும், மனிதன் தானாகவே கைதட்டுகிறானா இல்லையா? அப்படியானால் இந்த ஏழ்மை போக வேண்டுமானால் எல்லோரும் பணக்காரராக ஆக வேண்டும். ஆனால் உங்களுக்கு பணக்காரரைப் பார்த்தால், பிடிக்காது. இப்படி எப்படி செயல்பட முடியும்? ஏழ்மை இருக்கக்கூடாது. பணக்காரரும் இருக்கக்கூடாது. எப்படி நடக்கும்? எங்கேயோ நமது மனதில் தேவையில்லாத சிக்கல் இருக்கிறது. நமது மனம் குழப்பத்தில் இருக்கும்பொழுது சிந்தனை செய்தால், நம் வாழ்க்கை குழப்பமாகத்தான் இருக்கும்.

இப்போது நடைபாதையில் (platform) குழந்தைகள் இருக்கின்றன. நடைபாதையில் எப்படி குழந்தைகள் வந்தார்கள் என்று பார்க்க வேண்டும் அல்லவா? பிச்சைக்காரர்களுக்கு எல்லாம் நான்கு குழந்தைகள், எட்டு குழந்தைகள் இருக்கிறார்கள். புழு, பூச்சி மாதிரி குழந்தைகள் வந்துவிட்டார்கள். 120 கோடி என்பது ஒரு சாமான்யமான ஜனத்தொகை அல்ல. 120 கோடிக்கு தேவையான நிலமும், மண்ணும், இடமும் கிடையாது. மழையும் கிடையாது. ஆறு, தண்ணீர் கிடையாது. ஆகாயம் கூட நம்மிடம் சரியாக இல்லை. உண்மைதானே? நமக்கு தேவையான உணவு இல்லை, பேருந்துகள் போதவில்லை, கழிப்பறைகள் போதவில்லை. ஒன்றும் போதவில்லை.

நடைபாதையில் உள்ள குழந்தைகளைக் கட்டாயமாக பார்க்க வேண்டும். ஆனால் ஏன் அவர்கள் நடைபாதையில் இருக்கிறார்கள், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டாமா? என்ன செய்து கொள்ள வேண்டுமோ அதை செய்ய வேண்டும்தானே? அதற்குத் தேவையான விஞ்ஞானம் எல்லாம் நம்மிடம் இப்பொழுது இருக்கிறது அல்லவா? ஆனால் இதைப் பற்றியெல்லாம் யாரும் பேச மாட்டார்கள். ஏனென்றால், இந்த மதம் இருக்கிறது. அரசியல் கண்ணோட்டம் இருக்கிறது. ஓட்டு இருக்கிறது. என்னவெல்லாமோ இருக்கிறது. நாளைக்கு என்ன செய்ய முடியும் என்று பார்ப்பதற்கே நாம் தயாராக இல்லையென்றால் நமக்கு எப்படித் தீர்வு வரப்போகிறது?

நாளைக்கு என்ன செய்ய முடியும் என்று பார்ப்பதற்கே நாம் தயாராக இல்லையென்றால் நமக்கு எப்படித் தீர்வு வரப்போகிறது?

இப்பொழுது இந்த கங்கை ஆறு இன்னும் 8, 10 வருடங்களில் வற்றாத நதியாக இருக்காது, வருடத்தில் 7, 8 மாதம்தான் தண்ணீர் இருக்கும் என்று சொல்கிறார்கள். பனி கரைவதால்தான் கங்கை ஆறு முக்கியமாக ஓடுகிறது. ஏதோ, பனி கரைகிறபொழுது ஓடும். பிறகு நின்று போய்விடும். இது 9 வருடங்களில் நடக்கப் போகிறதோ? இல்லை 20 வருடங்களில் நடக்கப் போகிறதோ இதைச் சரிப்படுத்த வேண்டாமா? இதைச் சரி செய்ய வேண்டுமானால் மரம் வைக்க வேண்டும் என்று சொன்னோம். மரம் வைப்பது மட்டும் பெரிய விஷயம் இல்லை. 'மரம் வைக்க வேண்டும். மனிதன் குறைய வேண்டும்.' (கூட்டத்தில் கைதட்டல்) இல்லையென்றால், நடைபாதை மட்டுமல்ல. இரயில்வே தண்டவாளத்திலும் குழந்தைகள் இருப்பார்கள்.

ஆனால் இப்பொழுது நடைபாதையில் இருக்கும் குழந்தைகளுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும். அந்த அளவுக்கு நமக்கு திறமை இருக்கிறது. இல்லையா? தமிழ்நாடு முழுக்க தேடினால், அனாதையாக இருக்கும் குழந்தைகள் ஒரு 10,000 இருக்குமா? ம்.... ஒரு 50,000 குழந்தைகள் இருப்பார்களா? 50,000 குழந்தைகளை நம்மால் பார்த்துக் கொள்ள முடியாதா? கட்டாயம் பார்த்துக் கொள்ள முடியும். முதலில் பிரச்சனைக்கு அடிப்படையாக இருப்பதை நாம் குறைத்தால், பிரச்சனையை நாம் கவனிக்க முடியும். அப்படியென்றால் நாம் பணம் சம்பாதித்து சும்மா அதை வைத்துக் கொண்டு இருக்கலாமா? ஏதாவது பண்ண வேண்டும்தானே? உங்களுக்கு நிறைய பணம் இருந்தால், அதை எல்லாருக்கும் கொடுக்கத் தேவையில்லை. வேறு நல்ல வழிகளில் பயன்படுத்தலாம்.

பணத்தைப் பிரித்துக் கொடுத்தால், ஒருநாள் செலவு பண்ணி, திரும்பவும் அடுத்த நாள் பிச்சைக்கு வருவார்கள். அதனால் கொடுக்க வேண்டாம். வேறு ஏதாவது நல்ல வழியில் பயன்படுத்தலாம். ஒரு கல்லூரி கட்டலாம். ஒரு பள்ளிக்கூடம் கட்டலாம். ஒரு தொழிற்சாலை கட்டலாம். ஏதோ பண்ணினால் பத்துபேர் உழைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் ஒருவரே சாப்பிட முடியாது. நீங்கள் சாப்பிட வேண்டும் என்றாலும், நான்கு பேர் வேண்டும்தானே? ம்... பயிர் வளர்ப்பதற்கு, சமையல் செய்வதற்கு, கடையில் விற்பதற்கு எல்லாவற்றுக்கும் 10 பேர் வேண்டும்தானே? அதனால் நீங்கள் நன்றாக சாப்பிட்டால் அது நல்லதுதானே? நீங்கள் எல்லாம் சாப்பாட்டை விட்டால், தொழில் எல்லாம் கீழே போய்விடும். அதனால் எது வெற்றிகரமா நடக்கிறதோ, அதை எப்பொழுதும் தப்பாக நினைக்க வேண்டாம். வெற்றி கிடைக்க வேண்டும் என்று பார்க்கலாம். ஒருத்தருக்கு வெற்றி கிடைத்தால், மற்றவர்கள் கோபப்பட வேண்டாம். திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றி பார்த்து கோபம் வர வேண்டாம். திறமை வர வேண்டும். கோபம் வந்தால் திறமையை, வெற்றியை அழித்துவிடுவோம்.