இந்தியாவின் தாகம் தீர்க்கும், சத்குருவின் நதி மந்திரம்
Deccan Chronicle பத்திரிக்கையில் வெளியான சத்குருவின் இந்த நேர்காணல் மூலம் Rally For Rivers இயக்கத்தின் சாராம்சத்தை முழுமையாய் அறியலாம்! செப்டம்பர் 3ல் சத்குரு மேற்கொள்ள உள்ள பயணத்தின் காரணத்தையும், அதனால் உண்டாகவிருக்கும் தாக்கத்தையும் விரிவாக பேசுகிறது இக்கட்டுரை.
 
 

Deccan Chronicle பத்திரிக்கையில் வெளியான சத்குருவின் இந்த நேர்காணல் மூலம் Rally For Rivers இயக்கத்தின் சாராம்சத்தை முழுமையாய் அறியலாம்! செப்டம்பர் 3ல் சத்குரு மேற்கொள்ள உள்ள பயணத்தின் காரணத்தையும், அதனால் உண்டாகவிருக்கும் தாக்கத்தையும் விரிவாக பேசுகிறது இக்கட்டுரை.

சத்குரு அவர்கள் நமது தேசத்தின் ஜீவநதிகளை மீட்டெடுத்து, அவை கரைபுரண்டு ஓடும் நிலையை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் தற்சமயம் ஈடுபட்டுள்ளார். இதற்காக "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்" எனும் இயக்கத்தை துவக்கியுள்ள சத்குரு, நமது நதிகள், உடனடியாக பாதுகாத்திட வேண்டிய விளிம்பு நிலையில் இருக்கிறது என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

1947ல் ஒரு தனிமனிதனுக்கு இருந்த நீரின் அளவில், 75 சதவிகிதம் குறைவாக நமக்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட 25 சதவீத இந்திய நிலப்பரப்பு பாலைவனமாக மாறி வருகிறது என்பது அதிர்ச்சிகரமாகவும் ஆச்சரியமான உண்மையாகவும் இருக்கின்றது.

குமரி முதல் இமயம் வரை பரந்துவிரிந்த நமது பாரத தேசத்தின் 16 மாநிலங்களின் வழியாக நடைபெறவிருக்கும் சத்குருவின் இந்த பயணம், நதிகளை காக்கும் நோக்கில் மக்களின் ஆதரவு வாக்கை "மிஸ்டு கால்" மூலம் திரட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

செப்டம்பர் 3ம்தேதி கோவை ஈஷா மையத்திலிருந்து இந்த பயணம் துவங்கும் முன்பே குறைந்தது 30 கோடி மிஸ்டுகால்கள் பதிவாகியிருக்கும் அளவுக்கு மக்களிடையே நதிகளை காக்கும் இந்த இயக்கம் பற்றிய விழிப்புணர்வு சென்றடைந்திருக்க வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறார் சத்குரு.

பயணத்தின் நிறைவாக, அக்டோபர் 2ம் தேதியன்று பிரதமரை நேரில் சந்தித்து, நம் தேசத்தின் முன்நிற்கும் இக்கட்டான சூழ்நிலையை பற்றி விளக்கி, நதிகளை காக்கும் திட்டவரைவை வழங்க இருக்கிறார்.

பெங்களூரில் சமீபத்தில் சத்குருவை சந்திக்க கிடைத்த வாய்ப்பில், அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் நம் நதிகளின் நிலை எப்படி இருக்கும் என்று கேட்டபோது "நமது நதிகளையும், ஏரி, குளங்களையும் புத்துயிரூட்ட நாம் இப்போதே உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கடவுளின் சொந்த தேசம் என்று பெருமையுடன் பேசப்படும் கேரளத்திலிருந்து தலைநகர் புதுதில்லி வரை வெறும் பாலைவனங்களை மட்டுமே பார்க்கமுடியும்," என்று நம்முன் அமைதியாக நிற்கும் பயங்கரத்தின் விளைவை சுட்டிக் காட்டுகிறார்.

நதிக்கரை ஓரத்தில் வளர்ந்த நாகரிகம் நம்முடையது. நமது தேசத்தின் உயிர்நாடி நமது நதிகளே. ஆனால், ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதிகள் என்று பெருமை பெற்ற காவிரி, கிருஷ்ணா அல்லது நர்மதை என எந்த நதியாக இருந்தாலும், இன்று அவை நீர்வரத்து குறைந்து அபாயகரமான நிலையில் இருக்கிறது.

அடுத்த 50 ஆண்டுகளில் நமது பெரும்பாலான நதிகளில் எதுவுமே ஜீவநதியாக இருக்காது. மழைக்காலத்தில் மட்டும் மழைநீர் வடியும் வடிகாலாக மாறிவிடும் என்று எச்சரிக்கி்றார்.

நதிகள் வற்றி வருவதற்கான காரணங்களை பற்றி கேட்ட போது மக்கள் தொகை பெருக்கத்தினாலும், வேகமான வளர்ச்சியின் காரணமாகவும் ஏற்கனவே பல சிறு நதிகள் காணாமல் போய்விட்டது என்று குறிப்பிடும் சத்குரு, நம்புவதற்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் ஒரு புள்ளி விவரத்தையும் சுட்டிக் காட்டினார். 1947ல் ஒரு தனிமனிதனுக்கு இருந்த நீரின் அளவில் 75 சதவிகிதம் குறைவாக நமக்கு கிடைக்கிறது என்பதுடன், கிட்டத்தட்ட 25 சதவீத இந்திய நிலப்பரப்பு பாலைவனமாக மாறி வருகிறது என்பதுதான் அது.

நதிகளை காக்கும் அவரது திட்டத்தை பற்றி விளக்குமாறு கேட்ட போது, "இப்போதைய உடனடி தேவை, விசாலமான திட்டத்துடன் நதிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதுதான். நதியின் மொத்த நீளத்திற்கும், அதன் இரு கரையோரங்களிலும் குறைந்தது 1 கிமீ அகலத்திற்கு நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். அரசு நிலமாக இருந்தால் இயற்கை காடுகளும், தனியார் நிலமாக இருக்கும் பட்சத்தில் வேளாண் காடுகளும் உருவாக்கப்பட வேண்டும்."

 

இது எப்படி நதிகளை மீட்டெடுக்க உதவும் என்று கேட்க நினைக்கும் போதே அருவியாக வந்து விழுந்தது பதில். "நமது நாட்டில் உருவாகும் நதிகள் அனைத்துமே வனப்பகுதிகளால் வளர்ந்தவையே. மழை பொழிய மரங்கள் உதவுகிறது. வனப்பகுதியில் அடர்த்தியாக உள்ள தாவரங்கள் மழைநீரை நன்கு உறிஞ்சி கொள்கின்றன. அவற்றின் வேரில் சேகரித்திருக்கும் அபரிமிதமான நீர் மெல்ல கசிந்து துளிதுளியாக சேர்ந்து சிற்றோடையாக மாறுகிறது. இப்படி உருவாகும் சிற்றோடைகள் சேர்ந்து ஓடையாகி, அளவிலும் வேகத்திலும் பெருகும்போது நதியாக பாய்கிறது.

நதிகளை மீட்கும் திட்டம் நடைமுறையில் சாத்தியமாக வேண்டும் என்றால் நாட்டின் கொள்கை அளவில் மாற்றம் தேவை. எனவே அரசின் ஆதரவு இதற்கு மிகவும் முக்கியமாகிறது. நதிக்கரை ஓரங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் முறையில் பழமரங்கள் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வும் ஊக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நமது உணவில் 30 சதவீதம் அளவிற்கு மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள நாமும் பழகவேண்டும். இதன்மூலம், 3 முதல் 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் குறைந்தது 3 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் நதிகளை மீட்பது என்பது ஒரே நாளில் நடந்து விடக்கூடியதும் அல்ல.. நமது செயல் பலன்தருவதற்கு சிலகாலம் எடுத்து கொள்ளும். அதுவரை விடாமுயற்சியுடனும் பொறுமையுடனும் காத்திருக்க வேண்டும்.

யூட்யூபில் இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள், பூக்களின் அரும்பு ஒவ்வொரு இதழாக மொட்டவிழ்ந்து மலர்வதை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு இதழாக மலர்வதை பார்க்கவே அற்புதமாக இருக்கும்தானே. அதைப் பதிவு செய்ய அந்த கலைஞர்கள் எடுத்துகொண்ட முயற்சியும் உழைப்பும், மலர் மலர்வதை பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆனந்தத்தை ஏற்படுத்தும். இதுவும் அப்படித்தான். நமது முயற்சியின் பலன், நமது நதிகள் மீண்டும் பொங்கி பிரவாகமாக கண்ணுக்கு நிறைவாக ஓடும் போதுதான் நிறைவாக இருக்கும்.

கண்ணுக்கு மட்டுமல்ல, அப்போதுதான் நம் மக்கள் ஒவ்வொருவரின் வயிறும் நிறையும். ஒவ்வொருவரும் என நாம் குறிப்பிடுவது, தண்ணீர் பருகும் ஒவ்வொரு மனிதரையும்தான். மற்றவர்களை நாம் விட்டுவிடுவோம். ஆனால், தண்ணீர் பருகும் ஒவ்வொரு மனிதரும் நிச்சயமாக நதிகளை மீட்க துணைநிற்க வேண்டும் தானே.

இந்த நதிகளை காக்கும் திட்டத்தில் மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திர பிரதேச மாநில அரசுகள் பெரும் ஆர்வத்துடன் களமிறங்கியுள்ளன. நதிகளை மீட்கும் இத்திட்டம் மக்கள் இயக்கமாகும்போது, அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் கவனத்தை நிச்சயமாக ஈர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்று முடித்தார் சத்குரு.

இல்லையில்லை... பயணத்தை துவக்கியிருக்கிறார் சத்குரு.

நன்றி: Deccan Chronicle

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1