இந்தியா பற்றி நம்பிக்கை இருக்கிறதா என்று ஒருவர் கேட்கும் கேள்விக்கு தன் கணிப்புகளைச் சொல்லாமல் நிதர்சனத்தை விளக்கும் சத்குரு, இப்பதிவில் நேர்மை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

Question: எதிர்கால இந்தியா பற்றி உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா, அல்லது நம்பிக்கை விட்டுப் போய்விட்டதா?

சத்குரு:

இரண்டும் இல்லை. இந்தத் தலைமுறையினர் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்து வந்தால், அற்புதங்கள் நிகழும். அப்படிச் செய்யத் தவறினால், மிக மோசமான நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஒரு நாடு என்ற முறையில், சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமான மக்கள் தொகையின் சுமை நம்மை அழுத்திக் கொண்டிருக்கிறது. சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றால், போதிய உணவின்றி, நீரின்றி பாதி ஜனத்தொகை எப்படியும் நலிவுற்று அழியும். அதை உங்கள் கண்களால் நீங்கள் பார்க்க வேண்டிவரும்.

அத்தனை பேர் பட்டினி கிடக்கையில், ஒரு கவளம் உணவை உட்கொள்ளக்கூட உங்களுக்குத் தயக்கம் வரும். வாழ முடியாதவர்கள் சாவார்கள். வாழ முடிந்தவர்கள் குற்ற உணர்வால் வருந்தி வேதனை கொள்வார்கள்.

இந்நிலை மாற வேண்டுமானால், வாழ்க்கையை கடவுள் கையில் ஒப்படைப்பதை நிறுத்தி விட்டு, நம் கையில் எடுத்துக் கொண்டு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

Question: நேர்மையானவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்?

சத்குரு:

யார் சொன்னது? நேர்மையற்றவர்களும் தான் துன்பப்படுகிறார்கள். நேர்மையானவர்கள் அதை வெளியில் சொல்லிப் புலம்புகிறார்கள் அவ்வளவு தான். நேர்மை என்று நீங்கள் சொல்வதுகூட சமூகத்தின் ஒரு அளவுகோல் தான்.

நேர்மையற்றவராக இருப்பவர்கள் இன்றைக்கு சில வசதிகள் பெற்றவர்கள் போல் தோன்றினாலும், காலப்போக்கில், அவர்களுக்குப் பல எதிரிகள் உருவாகி விடுவார்கள். அது அவர்களுக்குப் பெரும் பாதிப்பாக மாறக்கூடும். நேர்மையாக இருப்பவர்கள் உடனடியாக சந்தோஷம் கிடைக்காதவர்களாக இருக்கலாம். ஆனால், அதற்குரிய பலன்கள் வெளியுலகில் காலப்போக்கில் கிடைக்கலாம்.