இந்திய கல்விமுறையில் ஏன் மாற்றம் தேவை?
கல்வி நம் தேசத்தை முன்னேற்றும் சக்திகொண்டது என சொல்லிக்கொள்ளும் அதே வேளையில், நாம் எத்தகைய கல்விமுறையைக் கொண்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அப்படியொரு சிந்தனையுடன் நடிகர் சித்தார்த் தனது கேள்வியை இப்பகுதியில் சத்குருவிடம் கேட்கிறார். இந்திய கல்விமுறை மாற்றங்களுக்கு உட்பட வேண்டியதன் அவசியத்தை சத்குரு இதில் தெளிவுபடுத்துகிறார்.
 
 

ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 8

கல்வி நம் தேசத்தை முன்னேற்றும் சக்திகொண்டது என சொல்லிக்கொள்ளும் அதே வேளையில், நாம் எத்தகைய கல்விமுறையைக் கொண்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அப்படியொரு சிந்தனையுடன் நடிகர் சித்தார்த் தனது கேள்வியை இப்பகுதியில் சத்குருவிடம் கேட்கிறார். இந்திய கல்விமுறை மாற்றங்களுக்கு உட்பட வேண்டியதன் அவசியத்தை சத்குரு இதில் தெளிவுபடுத்துகிறார்.

சித்தார்த்இன்றைய கல்வி சூழல் குறித்து என் நண்பர்கள் பலருக்கும் அதிக கவலை இருக்கிறது. இது குறித்து நாங்கள் பலமுறை விவாதித்து இருக்கிறோம். நம் தேசத்தை ஒரு மரியாதையான முறையில் பிரதிபலிக்கும் ஒரு மாற்றம், வெளிப்பாடு, கல்வி முறையில், குறிப்பாக ஆரம்பக் கல்வியில் எப்பொழுது ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சத்குரு:

கல்வி குறித்த நமது கருத்து மாற வேண்டும். 120 கோடி மக்களுக்கும் நீங்கள் கல்வி கொடுக்க வேண்டுமென்ற நிலையில், கல்வி குறித்த உங்கள் கருத்தும் மாற வேண்டும். தேசத்தில் திறன் குறித்து நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம். தேசத்தில் 50 சதவிகிதத்திற்கு அதிகமாக 30 வயதுக்கு கீழே, அதாவது இளைஞர்கள் இருக்கும் பொழுது அவர்கள் திறனை வளர்க்கா விட்டால், நீங்கள் தேசத்தை அழித்து விடுவீர்கள். எனவே இது அடுத்த 5 அல்லது 10 வருடங்களில் மிக அவசரமாக செய்ய வேண்டிய ஒரு விஷயம்.

இந்தியாவில் இன்றைக்கு ஒரு அணு விஞ்ஞானியை பார்த்து விடலாம், ஆனால் ஒரு மரத்தச்சர் கிடைப்பதுதான் சிரமமாக இருக்கிறது.

தேசத்தின் நிதர்சனம் என்ன என்பது அறியாமல் எங்கோ உட்கார்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றுகிறோம். கல்வி உரிமை சட்டத்தை எடுத்துக் கொள்வோம். ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை. ஒன்பதாவது படித்து முடிக்கும், 15 வயதில் இருக்கும் 60% மேலானவர்களுக்கு அவரவர் தாய் மொழியில் ஒரு வாக்கியம் முழுவதுமாக எழுத தெரியவில்லை. அவர்கள் தந்தையின் தொழில் செய்யும் திறனும் இல்லை, சரியான கல்வியும் இல்லை. ஆனால் படித்தவர்கள் போன்ற மனப்பாங்கு மட்டும் இருக்கிறது.

நம்மிடம் இருக்கும் கட்டமைப்பை வைத்துக் கொண்டு 120 கோடி மக்களுக்கு கல்வி கொடுக்க நினைக்கிறோம். ஒரு 5 வயது சிறுவன் அவன் தந்தையோடு வயலுக்கு செல்வது குழந்தை தொழில் அல்ல. அது கல்வி. திறன் அப்படிதான் வளர்க்க முடியும். பாரம்பரிய முறையை அழித்து விட்டு, நவீன முறையை சரியான முறையில் நிறுவ தவறி விட்டீர்கள். சட்டம் மட்டும் இயற்றுகிறீர்கள். அந்த சட்டமே மக்களை குழிக்குள் தள்ளுகிறது. திறனற்ற லட்சக்கணக்கான இளைஞர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

சித்தார்த்திறனற்ற பட்டதாரிகளை உருவாக்குவது ஒரு முறையான நோய் போலாகி விட்டதா? தேவை இல்லாத மேற்படிப்பு, ஆரம்ப கல்வி இல்லாமை இந்த பிரச்சனை எப்பொழுது மாறும்?

சத்குரு:

இது ஒரே இரவில் நிகழக் கூடிய மாற்றம் அல்ல. நமக்கு பொறுமை தேவை. நம் சட்டங்கள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஒரு தந்தை மகனை வயலுக்கு அழைத்து சென்றால் மகன் அதில் மிகுந்த திறனோடு, அனைத்தும் அறிந்தவனாக இருக்கும் படி கற்றுக் கொடுப்பான். இந்த கல்வி முறை வேலையும் செய்தது.

இதே விவசாயிகளுக்கு பல்கலைகழகம் மூலம் கற்றுக் கொடுக்க நினைத்தால் எத்தனை ஆரம்பிக்க வேண்டும்!? நமக்கு தேவைகள் குறித்த யதார்த்தமான புரிதல் இல்லை. ஒரு சமூகத்தில் 25% பேருக்கு கல்வி பொருத்தமாக இருக்க முடியும். மற்றவர்களுக்கு திறன், வாழ ஒரு வருமானம் இவையே தேவை. பொருளாதார சுபிட்சம் திறன்களை வளர்த்தால் மட்டுமே ஏற்படும். இந்தியாவில் இன்றைக்கு ஒரு அணு விஞ்ஞானியை பார்த்து விடலாம், ஆனால் ஒரு மரத்தச்சர் கிடைப்பதுதான் சிரமமாக இருக்கிறது. சட்டம் இயற்றுவது தப்பில்லை. ஆனால் சட்டம் கால்கள் இல்லாமல் இருக்கிறது.

ஒரு நாளில் பாதி நேரம் விவசாயம் பற்றி ஒரு சிறுவனுக்கு வகுப்பெடுங்கள். மீதி நேரம் தன் தந்தையோடு அவன் வயலில் வேலை செய்யட்டும். அதன்பின், கற்ற கல்வியை உபயோகப்படுத்தி, உத்திகளை மேம்படுத்தும் விவசாயிகளை உருவாக்க முடியும்.


அடுத்த வாரம்...

மற்றவர் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் மனப்பான்மை குறித்த சத்குருவின் பொருள் செறிந்த பதில் அடுத்த வாரம்.

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1