Question: சந்தோஷமாயிரு, ஆனந்தமாயிரு என்றுதான் உங்களைப் போன்றவர்கள் அறிவுரை சொல்கிறீர்கள். ஆனால், என்னைப் போன்ற இளைஞர்கள் சிலர் கவலைகளை மறந்து சந்தோஷமாக இருப்பதற்காக, சிகரெட் பிடித்தாலோ, மது அருந்தினாலோ, போதை மருந்துகளை உட்கொண்டாலோ... 'ஐயோ, அதெல்லாம் கெட்ட பழக்கம்' என்று பெரியவர்கள் அலறுகிறார்களே... யார் பேச்சைத்தான் நாங்கள் கேட்பது?

சத்குரு:

உங்களை ஆனந்தமாய் இருங்கள் என்று நான் சொல்வது அறிவுறுத்தல் இல்லை. நினைவூட்டல்!

ஆனந்தமாய் இருப்பதுதான் எந்த உயிருக்கும் இயல்பானது. அப்படி இருக்கத்தான் நீங்கள் படைக்கப்பட்டு இருக்கிறீர்கள். தேவையில்லாத எண்ணங்களால் மனதை நிரப்பிக் குப்பை மேடாக்கிக் கொண்டு, மனதோடு சேர்த்து உடலையும் நீங்களே வருத்திக் கொள்ளாவிட்டால், ஆனந்தமாகத்தான் இருப்பீர்கள்.

சிகரெட், மது போன்ற உடலுக்குத் தீங்கு செய்யும் பழக்கங்களால் ஆனந்தத்தை வளர்த்தெடுக்க முடியாது. அவற்றின் மூலம் உங்களுக்குக் கிடைக்கப்போவது ஆனந்தம் அல்ல. தற்காலிக இன்பம்.

ஆனந்தத்தை நானோ, நீங்களோ புறக்கருவிகளால் உற்பத்தி செய்ய முடியாது. சிகரெட், மது போன்ற உடலுக்குத் தீங்கு செய்யும் பழக்கங்களால் ஆனந்தத்தை வளர்த்தெடுக்க முடியாது. அவற்றின் மூலம் உங்களுக்குக் கிடைக்கப்போவது ஆனந்தம் அல்ல. தற்காலிக இன்பம்.

ஆனந்தமாய் இருப்பதற்கு நீங்கள் எதையும் நாட வேண்டாம். ஆனால், இன்பமாய் இருப்பதற்கு எதையாவது துணையாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்பத்துக்காக எதையாவது நாடும்போதெல்லாம், அது உடலுக்குக் கெடுதலா என்பதைப் பற்றி நீங்கள் யோசிப்பது இல்லை.

ஒரு கட்டத்தில், அது மகிழ்ச்சி தரக்கூடியது என்பதற்காக, அதைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அதன் மீது சார்ந்து விடுகிறீர்கள். அடுத்த கட்டத்தில், அதற்கு அடிமையாகவே ஆகிவிடுகிறீர்கள்.

எந்த ஒன்றுக்கும் அடிமையாக இருப்பது ஆனந்தம் அல்ல!

'சந்தோஷமாக இருக்கக் கவலைகளை மறக்க வேண்டும். நான் கவலைகளை மறப்பதற்காகத்தான் குடிக்கிறேன்' என்று சொல்பவர்கள் வசதியாக ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.

போதை அடங்கி இன்பம் அகன்றதும், அதுவரை அடங்கியிருந்த கவலை, பல மடங்கு வீரியத்தோடு வெளிக்கிளம்பி, ஆவேசத்துடன் மீண்டும் தலையை சிலிர்த்துக் காட்டாதா?

இரண்டு இளைஞர்கள் பாரில் குடித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒருவன் சொன்னான்... "நமக்காக இரண்டு பெண்களைப் பார்த்து வைத்திருக்கிறேன்!"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அடுத்தவன் கேட்டான்... "அழகாக இருப்பார்களா?"

"சில கோப்பைகள் விஸ்கி உள்ளே போனால், யாராக இருந்தாலும் அழகாகத்தான் தெரிவார்கள்" என்றான் நண்பன்.

பின்பு, இருவரும் தள்ளாடியபடி, குறிப்பிட்ட வீட்டின் கதவைத் தட்டினார்கள்.

கதவைத் திறந்த பெண்ணைக் காட்டி நண்பன் கேட்டான்... "எப்படி? அழகாகத் தெரிகிறாளா?"

அடுத்தவன் பெருமூச்சுடன் சொன்னான்... "அதற்குக் கோப்பைகளில் குடித்தது போதாது. பீப்பாய்களில் குடிக்க வேண்டும்!"

உங்கள் கவலைகளும் அப்படித்தான். கோப்பைகளில் குடித்தால், பீப்பாய்களைக் கேட்கும்.

நீங்கள் முட்டாள்தனமாக இன்பத்தைத் தேடிப் போவதற்கும், ஆனந்தமாக இருப்பதற்கும் இடையில் பல கோடி சூரியத்தொலைவு இருக்கிறது.

உங்கள் சந்தோஷம் எதன் மீதாவது சார்ந்திருக்கும் என்றால், அது எப்போது வேண்டுமானாலும் உங்கள் வாழ்க்கையிலிருந்து விலகிப் போகலாம் என்கிற கத்தி, கழுத்துக்கு மேலே தொங்கிக் கொண்டு இருக்கிறது.

அதுவாக விலகலாம். அல்லது மருத்துவர்களாலோ, அரசாங்கத்தாலோ, நீங்கள் சார்ந்திருக்கும் இனத்தினாலோ அது கட்டாயமாக விலக்கப்படலாம். எதற்காவது அடிமையாகிவிட்டால், அது மறுக்கப்படும்போது, உங்கள் இன்பத்துக்கு வெட்டு விழுகிறது.

அது கையை விட்டுப் போகுமோ என்கிற கவலையும், பீதியுமே உங்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிடும்.

மது அருந்தும் ஒரு பாருக்கு சங்கரன்பிள்ளை வந்திருந்தார். அங்கே ஓர் இளைஞன் தனக்கு முன் இருந்த கோப்பையை சோகமாகப் பார்த்துக் கொண்டு இருந்ததை கண்டார். அவன் கவனத்தைத் திருப்புவதற்காக, அந்தக் கோப்பையில் இருந்ததைக் கடகடவென்று எடுத்துக் குடித்தார்.

அந்த இளைஞன் அழ ஆரம்பித்தான். "அட, இதற்காகவா அழுகிறாய்? சும்மா விளையாட்டுக்காகத்தான் அப்படிச் செய்தேன்," என்றவர், அவனுக்கு ஒரு கோப்பை பீர் ஆர்டர் செய்தார்.

இளைஞன் சொன்னான்... "என் அதிர்ஷ்டம் அப்படி! காலையில் டயர் பஞ்ச்சர், அலுவலகத்துக்கு லேட்டாகப் போனேன். இன்றைக்குப் பார்த்து ஜெனரல் மேனேஜர் வந்திருந்தார். என்னை வேலையிலிருந்தே தூக்கிவிட்டார். வெளியே வந்தால், என் பைக்கை யாரோ களவாடிப் போய்விட்டார்கள். பஸ்ஸில் ஏறினேன். என் பர்ஸை யாரோ பிக்பாக்கெட் அடித்துவிட்டார்கள். வீட்டுக்குப் போனால், என் மனைவி எதிர்வீட்டுக்காரனுடன் படுத்திருந்தாள். வாழ்க்கையே வெறுத்துப் போய், தற்கொலை செய்து கொள்ளலாம் என்று விஷத்தை பீரில் கலந்து வைத்திருந்தேன். என் துரதிர்ஷ்டம், அது கூட எனக்கு கிடைக்காமல், நீ எடுத்துக் குடித்துவிட்டாய்!"

இப்படித்தான் அறியாமையால், இன்பம் என்று நினைத்துத் துன்ப விஷத்தை விரும்பிச் சேர்த்துக் கொள்கிறீர்கள்.

ஆனந்தத்தை உணர, போதைப் பொருட்களை நாடுவது, சமுத்திரத்தின் ஆழத்தை அரையடி ஸ்கேலால் அளந்து பார்க்க முயல்வது போல.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... சிகரெட் பிடிப்பதாலோ, குடிப்பதாலோ உங்களுக்குச் சந்தோஷம் வந்துவிடுவதில்லை. அதில் நீங்கள் காட்டும் தீவிரமான ஈடுபாடுதான், அந்த சந்தோஷத்தைக் கொண்டு வருகிறது. முழுமையான ஈடுபாடுதான் ஆனந்தத்தின் ஆணிவேர்!

முழுமையான ஈடுபாட்டுடன் விரும்பிச் செயலாற்றிப் பாருங்கள். அதில் கிடைப்பதுதான் உண்மையான ஆனந்தம்!

யோசியுங்கள்... உங்களுக்கு போதை ஏறியபோதெல்லாம், கவலை இடத்தைக் காலி செய்து கொண்டு போய்விட்டதா? இல்லை. அங்கேயேதான் அழுத்தமாக உட்கார்ந்திருந்தது. நீங்கள்தான் கொஞ்சம் நேரம் அதன் பக்கம் பார்க்காமல், முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தீர்கள்!

காட்டுக்குள் வந்த இருவரை, ஒரு கரடி துரத்த ஆரம்பித்தது.

"எப்படித் தப்பிப்பது? எங்கே ஒளிவது?" என்று ஒருவன் கேட்டான்.

அடுத்தவன் சொன்னான்... "ஒளிவதற்கு வேறு இடமே இல்லை. பேசாமல், அந்தக் கரடியின் நிழலிலேயே ஒளிந்து கொள்வோம்!"

கவலைகளை மறப்பதற்காகப் போதைப் பொருட்களை நாடுவது, கரடியிடமிருந்து தப்பிக்க அதன் நிழலில் ஒளிந்து கொள்வது போலத்தான்! பிரச்சனைகளிடமிருந்து தப்பிக்க நினைக்காமல், அவற்றை எதிர்கொண்டு தீர்த்துவிடுவதுதான் புத்திசாலித்தனம்.

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த சிறப்புக் கட்டுரை. உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Theis Krofoed Hjorth @ Flickr