இல்லறத்தில் இருந்தாலும் நான் முக்தி அடையமுடியுமா?
பொதுவாக, உடல் ரீதியாக தொடர்பில் இருக்கும்போது ‘பற்று’ ஆழமாக ஏற்படுவதை பார்க்கலாம். திருமண பந்தத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிக பற்றுகொள்ளும்போது முக்தியை எப்படி அடைய முடியும்? இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்று இருக்கும் நிலையை அடைய சத்குரு காட்டும் வழி என்ன என்பதை இங்கே படித்தறியுங்கள்!
 
 

பொதுவாக, உடல் ரீதியாக தொடர்பில் இருக்கும்போது ‘பற்று’ ஆழமாக ஏற்படுவதை பார்க்கலாம். திருமண பந்தத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிக பற்றுகொள்ளும்போது முக்தியை எப்படி அடைய முடியும்? இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்று இருக்கும் நிலையை அடைய சத்குரு காட்டும் வழி என்ன என்பதை இங்கே படித்தறியுங்கள்!

Question:இல்லறத்தில் இருந்தாலும் நான் முக்தி அடையமுடியுமா? ஏனெனில் திருமணமானவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் பற்றுதலுடன் இருக்கிறார்கள்.

சத்குரு:

எந்த ஒரு உறவுநிலையிலும் பற்றுதல் என்பது இருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் உறவுகளை பற்றுதலாக மட்டுமே பார்க்கிறார்கள். இந்த பற்றுதல் அடுத்த மனிதரோடு ஏற்படுவதில்லை. உங்கள் கணவன் அல்லது உங்கள் மனைவியுடனான பற்று ஒரு பெரிய விஷயமில்லை. வேறு வழி இல்லாததால்தான் நீங்கள் அவர்களுடன் பற்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு வழி இருந்தால், அவர்களுடனான பற்றுதல் அறுந்துவிடும். உங்கள் கணவனையோ அல்லது மனைவியையோ விட்டுவிடுவதை ஒரு பெரிய விஷயமாக நினைக்காதீர்கள். நீங்கள் யார்மீது பற்று கொண்டிருக்கிறீர்களோ, அவர் திடீரென்று உங்களுக்கு பிடிக்காதவராக ஆகிவிட்டால், உங்கள் பற்று ஆவியாகிவிடும். அவர் செய்த ஏதோ ஒரு செயலோ அல்லது பேசிய ஏதோ ஒரு பேச்சோ உங்களுக்கு பிடிக்காமல் போனால், உங்கள் பற்றுதலும் காணாமல் போய்விடும்.

உங்கள் உடல் மீது கொண்டிருக்கும் அடையாளம்தான் மற்ற உடல்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிணைப்புகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

இதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பற்றுதல் என்பது வேறு யாருடனோ அல்ல, அது உங்கள் உடலுடன்தான். இந்த (உங்கள்) உடலுடன் நீங்கள் தீவிரமாகப் பற்று கொண்டிருப்பதால்தான், நீங்கள் வேறு யார் மீதோ பற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் உறவுகளைக் களைவதற்காக நீங்கள் ஏதும் செயல் செய்ய வேண்டியதில்லை. உங்கள் சொந்த உடல் மீதுள்ள பற்றுதலைக் களைவதற்காகத்தான் நீங்கள் ஏதோ செயல் செய்ய வேண்டியதிருக்கிறது. இதிலிருந்து நீங்கள் விடுதலை பெற்றுவிட்டால், பிறகு நீங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் விடுபடலாம்.

உடல் மீதான உணர்வு மனித மனத்தில் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆன்மீக செயல்முறைகளின் நோக்கமே அந்த உணர்வைக் கடந்து செல்வதுதான். ஏனெனில் அதுதான் உங்களை சிக்கவைக்கும் பொறியாக இருக்கிறது. உங்கள் உடல் மீது கொண்டிருக்கும் அடையாளம்தான் மற்ற உடல்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிணைப்புகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. நீங்கள் உங்கள் உடலுடன் பிணைப்பு கொள்ளாமல் இருந்தால், நீங்கள் மற்ற உடல்களுடனும் (அதாவது மற்றவர்களுடனும்) பிணைப்பு கொள்ள மாட்டீர்கள். உடலுறவு தொடர்பான உறவுகளில், எப்போதும் பற்றுதல் தீவிரமாக இருக்கிறது. ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் பிரம்மச்சரியம் பற்றியோ அல்லது இதுபோன்ற உறவுகளைத் தவிர்ப்பது பற்றியோ பேசுவது ஏனென்றால், அவர்கள் உறவுநிலைகளுக்கு எதிரானவர்கள் என்பதால் அல்ல, இதுபோன்ற உறவுகள் பற்றுதலைத் தீவிரப்படுத்தும் என்பதால்தான்.

முக்தியடைதல் என்று பார்க்கும்போது, எந்தமாதிரியான உறவு நிலைகளில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதும் ஒருவிதத்தில் எந்த அர்த்தமும் கொண்டதல்ல. ஆனால் தேவையான ஆதரவை உருவாக்குவது என்னும் கோணத்தில் பார்க்கும்போது அது அர்த்தமுடையதாக இருக்கிறது. நாம் நமக்காக ஒரு ஆதரவான சூழ்நிலையை உருவாக்க விரும்புகிறோமா இல்லையா என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். தங்கள் வாழ்வில் ஓரளவு வேரூன்ற நினைக்கும் சிலருக்கு இதுபோன்ற உறவுகள் தேவைப்படலாம். இத்தகைய உறவுகள் இல்லையென்றால், அவர்கள், தங்கள் வாழ்வில் எதையும் தேடுவதற்கு மிகவும் தயக்கப்படுவார்கள். தானாகப் பறப்பதற்கான திறமை உங்களுக்கு இருந்தால் அது மிகவும் அழகானது. ஆனால் பறப்பதற்கான திறமையும் இல்லாமல் அதேநேரத்தில் வாழ்வில் வேரூன்றாமலும் இருந்தால் நீங்கள் எங்கோ தொலைந்து போவீர்கள். வாழ்வில் வேரூன்றுதல் என்பதை பார்க்கும்போது, ஒருவிதத்தில், அது பின்னேற்றம்தான், ஆனால், தற்போதைக்கு நீங்கள் வாழ்க்கையின் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, அது உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

உங்கள் உள்புறத்தை எப்படி சமாளிப்பது என்று உங்களுக்குத் தெரியாத காரணத்தால், உங்கள் உள்புறத்தைக் கையாள, வெளிப்புறத்தை ஒரு வழியாக உபயோகிக்கிறீர்கள். அது ஒரு தாற்காலிகமான ஏற்பாடாகத்தான் இருக்கும். அது யாருக்குமே, ஒரு நிரந்தரத் தீர்வாக இருக்காது, இருக்க முடியாது.

நீங்கள் இதை நேர்மையாகப் பார்க்க விரும்புகிறேன், நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட உறவை விரும்புகிறீர்கள்? அகராதியில் இல்லாத எல்லாவித அர்த்தங்களையும் கொடுத்து உங்கள் உறவை நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாம். நீங்கள் ஏன் உறவைத் தேட முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏற்கனவே தொலைந்துவிட்டீர்கள், உங்களுக்கு மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஆதரவு தேவைப்படுகிறது. உங்கள் பயத்தையும் போராட்டங்களையும் சமாளிக்க அது ஒன்றுதான் உங்களுக்கு வழியாகத் தெரிகிறது. ஆனால் இது மாதிரியான உறவுகள், வெளிப்புறத்தில், உங்களுக்கு இன்னும் அதிக போராட்டத்தையும் மன வேறுபாட்டையுமே கொடுக்கும். உங்கள் உள்புறத்தை எப்படி சமாளிப்பது என்று உங்களுக்குத் தெரியாத காரணத்தால், உங்கள் உள்புறத்தைக் கையாள, வெளிப்புறத்தை ஒரு வழியாக உபயோகிக்கிறீர்கள். அது ஒரு தாற்காலிகமான ஏற்பாடாகத்தான் இருக்கும். அது யாருக்குமே, ஒரு நிரந்தரத் தீர்வாக இருக்காது, இருக்க முடியாது.

இந்த உறவுகள் உங்கள் ஆன்மீக செயல்முறைகளுக்கு எந்த அர்த்தத்தையும் தராது. ஆன்மீக செயல்முறை என்பது உங்கள் உள்நிலையில் செய்ய வேண்டிய ஒன்று. உங்கள் வெளிப்புறத்தை எப்படி நிர்வகிக்க விரும்புகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் உள்நிலை மாறும்போது, அந்த மாற்றம் இயல்பாகவே உங்கள் வெளிப்புறத்திலும் பிரதிபலிக்கும். ஆனால் உங்கள் வெளிப்புறத்தை ஓரளவிற்கு நிர்வகிக்க நீங்கள் விரும்பினால், வெளிப்புறத்தில் ஏதோ சில விஷயங்களை நடத்திட விரும்பினால், உங்கள் வெளிப்புறத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பத்தைச் சார்ந்தது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1