கேள்வி : ஒரு குருவின் கடமை என்ன?

சத்குரு: நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஒரு குருவின் நோக்கம் அடிப்படையில் அழிப்பதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களின் இன்றைய நிலையை அழித்தால்தான், இன்னும் பெரிதான ஒன்றை அனுபவிக்க நீங்கள் தயாராவீர்கள். சிறைப்பட்டுக் கிடக்கும் உங்கள் தளைகளை அவர் அறுத்தால்தான், எல்லையற்ற தன்மையை நீங்கள் ருசிக்க முடியும். உங்கள் அகங்காரத்தைத் தொடர்ந்து சிதைத்தால்தான் சில உயரங்களை உங்களால் தொடமுடியும்.

உங்களை உன்னத அனுபவங்களுக்கு எடுத்துச் செல்ல, இப்படி உங்கள் அடிப்படைகளை அழிக்கும் நண்பரே உங்கள் குரு.

கேள்வி: தியானத்தில் நான் எந்த அளவு முன்னேற்றத்தை எட்டியிருக்கிறேன் என்பதை எப்படி அளவிடுவது?

சத்குரு: அளவு கோல்களைப் பயன்படுத்துவது எதற்காக? ஒப்பிடுவதற்காக. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பும்போது தான் அளந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வருகிறது. அளந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, உங்களிடம் தியான நிலை இல்லை என்று தான் அர்த்தம்.

தியானம் என்ற அம்சம் யாருடனும் போட்டியில் ஈடுபடுவதல்ல. முன்னே போகிறோமா, பின்னால் போகிறோமா என்பதைக் கூட கவனிக்க வேண்டியிருக்காத ஓர் இடத்தை அடைந்து விட்டால், அங்கே இருப்பதே போதுமானது.

மற்றபடி, தியானத்தில் இருக்கிறீர்களா, அல்லது தூக்கத்தில் இருக்கிறீர்களா என்று தெரிந்து கொள்வதற்கு வேண்டுமானால், சில விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்த முடியும். உங்கள் நாடித் துடிப்பு, ரத்தக் கொதிப்பு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை அளந்து பார்க்க முடியும். இவை கூட தியானத்தின் பின்விளைவுகள் தான். இந்த விளைவுகளை அளப்பதற்கு விஞ்ஞானம் பயன்படலாமே தவிர, தியானத்தை அளப்பது என்ற கேள்விக்கே இடம் இல்லை.