குருவின் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கும் இருப்பதை பார்க்கிறோம். ஆனால், குருவின் அருகில் இருப்பதாலேயே ஒருவருக்கு ஞானம் கிடைத்துவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது! குருவின் அருகில் இருப்பதென்றால் உண்மையில் என்ன? சத்குருவின் இந்த விளக்கம் விடைதருகிறது!

Question: சத்குரு.. நான் குருவின் அண்மைக்காக ஏங்குகிறேன். ‘ஐயோ.. எப்போதும் குருவுடனேயே இருப்பதென்பது சாத்தியமற்றதாயிற்றே, இதற்கு எல்லை இருக்கிறதே’ என்னும் உண்மை என்னை வெகுவாகத் துயரத்துக்கு உள்ளாக்குகிறது.. இந்த ஏக்கத்திலிருந்து மீள்வது எவ்வாறு?

சத்குரு:

ஒரு சக்தி நிலையை, உங்களை மேம்படுத்தக்கூடிய ஒரு சாத்தியக்கூற்றைத்தான் நீங்கள் குரு என்று பிரியமாக அழைக்கிறீர்கள். அவர் ஒரு குறிப்பிட்ட நபர் அல்ல. இந்த வெளி மற்றும் இதன் சக்தி ஆகியவற்றின் பிரதிநிதியாக செயல் புரிந்து கொண்டிருக்கும் ஒரு நபர்தான் அவர்!

குருவின் அருகிலேயே இருப்பவரைக் காட்டிலும் அவரிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளியிருப்பவருக்குக் கூட அபரிமிதமான குருவருள் கிட்டும் என்பதுதான் உண்மை!

நீங்கள் எதையாவது காண வேண்டுமெனில் ஒளி என்னும் ஒன்று தேவைப்படுகிறது. அப்போதும் உங்களுக்கு ஒளிதான் தேவையே தவிர, ஒளியை உமிழும் விளக்கு தேவை இல்லை! விளக்கிலிருந்து உங்களை வந்தடையும் ஒளிக்காகத்தான் ஏங்குகிறீர்களே தவிர, விளக்குக்காக நீங்கள் ஏங்கவில்லை. இதுதான் உண்மை!
ஆனால் இப்போதோ அந்த விளக்குத்தான் உங்களுக்கு ஒளியை வழங்கக்கூடிய ஒரே மூலமாகத் தெரிகிறது. எனவேதான் இந்த விளக்கு இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என்று எண்ணத் தோன்றுகிறது.

குருவின் தன்மையானது காலம் மற்றும் பிரபஞ்ச வெளிக்குக் கட்டுப்படாதது. விளக்கிற்கு வெகு அருகில் இருப்பவரை மட்டுமே மிக அதிகமான ஒளி வந்தடையும் என்பதல்ல! குருவின் அருகிலேயே இருப்பவரைக் காட்டிலும் அவரிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளியிருப்பவருக்குக் கூட அபரிமிதமான குருவருள் கிட்டும் என்பதுதான் உண்மை!

கௌதமர் மற்றும் ஆனந்த தீர்த்தரை மையமாகக் கொண்டு பழைமையான கதை ஒன்று உள்ளது. ஆனந்ததீர்த்தர் கௌதமரின் மூத்த சகோதரர். அவர் கௌதமரிடம் தீட்சை பெற்று துறவறம் பூணத் தீர்மானித்தார். அப்போது அவர், தான் எந்நேரமும் கவுதமரை விட்டு அகலாமல் அவருடைய அண்மையிலேயே இருக்கத் தீர்மானித்து, ஒரு திட்டம் வகுத்தார்.

அதன்படி அவர் கௌதமரிடம், “கௌதமா, நான் இன்னும் துறவறம் ஏற்கவில்லை. இப்போது உனது மூத்த சகோதரனாகவே விளங்குகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் நான் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யச் சொல்லி ஆணையிடலாம். தம்பியாக இருப்பதால் எனது உத்தரவுக்கு நீயும் கட்டுப்பட்டே ஆகவேண்டும். எனக்குத் துறவறம் அளித்து சீடனாக ஏற்றுக்கொண்ட பின்னர் என்னை உனது அருகிலேயே வைத்திருக்க வேண்டும். மற்ற சீடர்களை ‘அங்கே போ, இங்கே போ’ என்று அனுப்புவது போல் என்னை எங்கேயும் அனுப்பக்கூடாது..” என்று கூறினார்.

இதைக் கேட்ட கௌதமர் கூறினார்: “நீ கூறுவது, ஒரு மனைவியாகப் பட்டவள், கணவனைத் தனது கைக்குள் வைத்துக் கொள்வதற்காக நடந்து கொள்வதைப்போல் இருக்கிறது. வாழ்க்கையை இப்படி அமைத்துக் கொள்வது சரியல்ல. எனது மூத்த சகோதரனாக இருப்பதால் நீ கூறுவதை நான் கேட்டுத்தானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு நடந்து கொள்கிறாய். இது ஒரு போதும் உனக்கு நன்மை அளிக்காது.”

ஆனந்த தீர்த்தரோ, “பரவாயில்லை. ஆனால் நான் எப்போதும் உன் அருகிலேயே இருக்க வேண்டும்...” என்று வற்புறுத்தினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வேறு வழியின்றி கௌதமர் சம்மதித்தார். அதன்படி ஆனந்த தீர்த்தர் கௌதமரை விட்டு அகலாமல் அவர் கூடவே இருந்தார். கௌதமர் வீட்டை விட்டு வெளியேறி எட்டு ஆண்டுகள் கடந்த பின் திரும்பவும் வீட்டுக்குச் சென்று மனைவி யசோதராவைப் பார்த்து விட்டு வரலாம் என்று எண்ணினார்.

கௌதமரை மணந்து கொண்ட யசோதரா ஒரு குழந்தைக்குத் தாயானாள். அந்தக் குழந்தையின் அறியாத வயதில், தாயையும், சேயையும் விட்டு விட்டு ஒரு நள்ளிரவில் திருடனைப் போல் அரண்மனையை விட்டு வெளியேறினார் கௌதமர்.

ஏன் அவ்வாறு வெளியேற நேர்ந்தது என்ற கேள்விக்கு கௌதமரே ஒரு சமயம், “அவர்கள் விழித்திருக்கும் நிலையில், என் மனைவி ஏறெடுத்து என் கண்களில் உற்று நோக்கியிருந்தால் உண்மையைத் தேடி நான் மேற்கொண்ட பயணமானது தொடங்காமலே போயிருக்கும். குழந்தை என்னைப் பார்த்து ‘அப்பா..’ என்று ஒரு முறை தீனமாக அழைத்திருந்தாலும் அவ்வளவுதான்.. உண்மையை அறிய வேண்டும் என்ற எனது ஏக்கம் அப்போதே அற்றுப் போயிருக்கும். அதனால்தான் ஒரு பேடியைப் போல் நள்ளிரவில் அவர்களை விட்டுப் பிரிந்தேன்” என்று கூறியிருக்கிறார்.

தான் பிரிந்து வந்ததால் யசோதரா என்ன பாடு பட்டிருப்பாள் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். அவளது வாழ்க்கையில் நடந்த அவலங்கள் காரணமாக அவள் இன்னும் எவ்வளவு கோபத்துடன் இருப்பாள் என்பதும் அவருக்குப் புரிந்திருந்தது..

பிரிந்து வந்த கௌதமரின் வாழ்க்கையில் ஓர் உன்னத நிகழ்வு நிகழ்ந்தது. ஆனால் யசோதராவின் வாழ்க்கையில் அவலங்களைத் தவிர வேறு எதுவும் நிகழவில்லை. இதெல்லாம் கௌதமருக்குத் தெரிந்துதான் இருந்தன.

எனவே யசோதராவுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு தன்னால் ஏதாவது ஒரு வகையில் ஈடுகட்ட இயலுமா என்று முயல்வதற்காகவே அவர் அவளை நோக்கிச் செல்ல விழைந்தார்.

உங்கள் கவனத்தை அவர் பால் திருப்பினீர்களேயானால் அவர் எப்போதுமே சூரிய ஒளியைப் போல் உங்கள் அண்மையிலேயே இருப்பதை உணர்வீர்கள். ஒரு தென்றல் உங்களைத் தீண்டுவதைப் போல அவரது இருப்பை உணர்வீர்கள்.

இப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில் கௌதமர் ஆனந்த தீர்த்தரிடம், “ஆனந்த தீர்த்தா.. உன்னை அருகிலேயே வைத்துக் கொள்கிறேன் என்று நான் வாக்குறுதி அளித்திருப்பது உண்மைதான். ஆனால் இந்த ஒரு தருணத்தில் மட்டும் விலக்கு கொடு. இதை நான் எனக்காகக் கேட்கவில்லை. என்னைப் பொறுத்தவரை யசோதராவை எனது மனைவியாகவே கருதவில்லை. சொந்தங்களை எல்லாம் எப்போதோ கடந்து முன்னேறி விட்டேன். ஆனால் யசோதராவைப் பொறுத்த மட்டிலோ, அவளிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் விட்டு ஓடி வந்த பொறுப்பற்ற கணவனாகவே விளங்குகிறேன். அவளைச் சந்திக்கும் போது அங்கே ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை நிலவும். இந்த சந்தர்ப்பத்தில் நீ அருகில் இருப்பது நல்லதல்ல. இந்தச் சந்திப்பினால் ஆன்மிக ரீதியாக நீ எதையும் தவற விடவும் போவதில்லை. அதனால் இப்போது மட்டும் அனுமதி கொடு...” என்று மன்றாடினார்.

ஆனந்த தீர்த்தரோ, “அதெப்படி? வாக்குறுதி அளித்திருக்கிறாய். அதை நீ மீறக் கூடாது..” என்று கௌதமரின் வேண்டுகோளை நிராகரித்தார்.

கௌதமர் ஆனந்ததீர்த்தரின் மறுப்பையும் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார். மனைவியைச் சந்திக்க, ஆனந்ததீர்த்தரையும் உடன் அழைத்துச் சென்றார்.

எட்டு ஆண்டுகள் கழித்துத் தன்னைச் சந்திக்க வரும் கணவன், கூடவே ஓர் ஆண்டியையும் அழைத்துக் கொண்டு வந்ததைப் பார்த்ததும் யசோதரா கோபத்தின் விளிம்புக்கே சென்று விட்டாள். ஆனந்ததீர்த்தரைக் கண்டபடி ஏசினாள். கௌதமருக்கு அப்படி நடக்கும் என்று தெரிந்து இருந்ததால் அந்த நிகழ்வை ஒரு புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனந்ததீர்த்தரின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. கௌதமரின் வாழ்க்கையில், அவர் ஆற்றிய பணியானது பலருக்கு ஞானத்தை அளித்தது. ஆனால் ஆனந்ததீர்த்தரோ கடைசி வரையிலும் ஞானம் வரப்பெறாதவராகவே இருந்தார். அவர் இந்த உலகுக்காக ஒரே ஒரு சேவையை மட்டும் புரிந்திருக்கிறார். கௌதமரின் அத்தனை உபதேசங்களையும் தனக்குப் புரிந்த மட்டிலும், மிகச் சீரிய முறையில் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கிறார்.

மக்கள் கௌதமரைப் பார்க்க நேரும் போதெல்லாம், “எவ்வளவோ பேர் உங்களை வந்து சந்திக்கிறார்கள். சந்தித்த மட்டிலேயே ஞானமும் அடைந்திருக்கிறார்கள். ஆனால் எப்போதும் உங்களுக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் ஆனந்ததீர்த்தர் மட்டும் ஏன் இன்னும் ஞானம் வரப் பெறாதவராகவே இருக்கிறார்..?” என்று வினவுவதுண்டு.

கௌதமர் அவர்களிடம் சிரித்துக் கொண்டே, “கரண்டியால் ஒரு போதும் குழம்பின் சுவையை அறிய முடியாது...” என்று கூறுவார்.

ஆக குருவின் உடல் ரீதியான அண்மை என்பது அவசியமே இல்லை. குருவருள் என்பது அவரைச் சுற்றி மட்டுமே இருக்க முடியும் என்று நீங்களாகக் கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

உங்கள் உடலைத் தொட்டுக் கதகதப்பாக்கும் ஒளியை உணர்கிறீர்கள்! உங்களைத் தழுவிச் செல்லும் தென்றலின் இருப்பை உணர்கிறீர்கள்! குருவின் அருள் என்பதும் அது போலத்தான். சூரிய ஒளியைப் போல் அது எப்போதும் உங்கள் அருகிலேயேதான் உள்ளது!

குருவாகப்பட்டவர் அவரது சொற்களில் இல்லை. அவரது உரை இருக்கிறதோ இல்லையோ குரு என்பவர் எப்போதும் இருக்கிறார்.

உங்கள் கவனத்தை அவர் பால் திருப்பினீர்களேயானால் அவர் எப்போதுமே சூரிய ஒளியைப் போல் உங்கள் அண்மையிலேயே இருப்பதை உணர்வீர்கள். ஒரு தென்றல் உங்களைத் தீண்டுவதைப் போல அவரது இருப்பை உணர்வீர்கள்.

குருவின் அண்மை என்பது ஒரு எல்லையோடு நின்று போகிற விஷயம் அல்ல. துவக்கத்தில் குருவை நீங்கள் உங்களது பார்வையாலும், காதுகளாலும் மற்றும் ஐம்புலன்களாலும் மட்டுமே உணர்கிறீர்கள் என்பதால் அந்தச் சமயத்தில் மட்டும் அவரது உடல் ரீதியான அண்மை அவசியமாகிறது.

ஆனால் எப்போதுமே இப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர் வெவ்வேறு வழிகளில் உங்கள் அருகிலேயே இருப்பார்.

ஒளிதான் தேவைப்படுகிறது. ஒளியை வெளிப்படுத்தும் விளக்கை நீங்கள் தழுவத் தேவையில்லை. சூரியனைத் தழுவ வேண்டும் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா என்ன? நீங்கள் சூரியன் இருக்கும் திசையில் திரும்பிக் கூடப் பாராமல் சூரிய ஒளியை அனுபவிக்கிறீர்கள். இருந்தும் சூரிய ஒளி உங்களைப் போஷித்து, வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டுதான் உள்ளது. குருவும் அவ்வாறேதான்!

குரு பௌர்ணமி

இவ்வருடம் குரு பௌர்ணமி கொண்டாட்டங்கள் ஈஷா யோக மையத்தில் ஜூலை 9ம் தேதி நடைபெறவிருக்கிறது. வாருங்கள்... குருவின் அருளில் கரைந்திடுங்கள்.