இவ்வுலகில் பல அற்புதமான குருமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களை சுற்றியிருந்த மனிதர்கள் அறிந்தார்களோ இல்லையோ, அவர்கள் தாங்களாகவே மிகவும் அற்புதமானவர்களாக விளங்கினார்கள். ஒவ்வொருவரும் தனித்துவமான வெவ்வேறு வித்தியாசமான வழிகளில் செயல்பட்டார்கள்.

அவருக்கென்று ஓர் இயல்பு இருந்தால் அவர் குருவே இல்லை. அவருக்கென்று தனி இயல்பு என்று ஏதும் இல்லை. செயல்பாட்டுக்குத் தகுந்தவாறு அவருடைய மனப்பான்மை, குணநலன் என்ற அனைத்தையும் அவரே அப்படி வடிவமைத்துக் கொள்கிறார். அவர் கடந்து வந்த வளர்ச்சிப் பாதையை பொருத்தும் இது அமையும். அதனால், அது அந்த மனிதர் சம்பந்தப்பட்டதில்லை.

அவதூதர்கள்

அவதூதர்கள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட குருமார்கள் உள்ளனர். மக்கள் அவர்களை வணங்குவார்கள். ஆனால், குரு என்ற பாத்திரத்தில் அவர்களால் இயங்க முடிந்ததில்லை. அவர்கள் குழந்தையைப் போல இருப்பவர்கள். அவர்கள் மிகவும் அற்புதமான நிலையில் இருப்பவர்கள். அவர்களுடைய இருப்பு மக்களுக்கு அற்புதமான விஷயங்களை செய்திருந்தாலும், அவர்கள் தாங்களாகவே எதையும் செய்ய முடியாதவர்களாய் இருந்தார்கள். எப்போது சாப்பிட வேண்டும், எப்போது என்ன செய்யவேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் சாப்பிடுவது, தூங்குவது முதலானவைக்கூட யாராவது அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களுடைய சக்திநிலை மிக அற்புதமானது. அதனால், அவர்களை வணங்கவேண்டும், பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

கனிகாட் நித்யானந்தர்

முக்தாநந்தரின் குருநாதர் தான் கனிகாட் நித்யானந்தர். கனிகாட் நித்யானந்தர் நிர்வாண யோகியாக வாழ்ந்தார். மரத்தின் மீது உட்கார்ந்து கொள்வார். அவரிடம் அபாரமான சக்திகள் இருந்தன. தன் மீது முழுமையான ஆளுமை வைத்திருந்தார். அத்தனை உயரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு பரவசத்தில் ஆழ்ந்திருப்பார். யாரும் அவரைத் தொந்தரவு செய்வதை அவர் விரும்பிடவில்லை. அப்படியொரு நிலையில் இருக்கும் மனிதருக்கு தொந்தரவு தேடி வரும். “சுவாமி, சுவாமி...” என்று யாராவது வந்தால், அவர் பைத்தியம்போல் நடிப்பார், கற்களை வீசத் துவங்கிவிடுவார். ஆனாலும் சிலர் கற்களை கடந்து அவரை நோக்கி சென்றனர். அவர் எறியும் கற்கள் ஒருவர் மீதுகூட படாது. அப்படித்தான் அவர் வீசுவார். மக்களை மிரட்டுவதற்காக அப்படிச் செய்வார். இவற்றை எல்லாம் மீறி அவரிடம் மக்கள் சென்றடையும்போது அவர்களை மகிழ்வுடன் வரவேற்றார். அவர்களுக்கு யோகப் பயிற்சிகளை வழங்கினார், இன்னும் பல விஷயங்களை அவர் செய்தார். இதுதான் கனிகாட் நித்யானந்தரின் வழி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

கௌதம் புத்தர்

புத்தர் இப்படி செய்யவில்லை. அவரும் கல் எறிந்திருக்கலாம். போதி மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, யார் அங்கு வந்தாலும் அவர்கள் மீது கல் எறிந்திருக்கலாம். ஆனால், மக்கள் அவரிடம் வரவேண்டும் என்றே அவர் நினைத்தார். மக்கள் வராவிட்டால் அவர்களை நான் பின்தொடர்ந்து செல்வேன் என்று கூறினார். அவருடைய 45 வருட ஞானோதய வாழ்வில் கிராமம் கிராமமாக நடந்து, மக்களைத் தேடி சென்று, அவர்களை அழைத்து, அவர்களிடம் பேசி, அவர்களின் வளர்ச்சிக்காக படிப்படியாக அவர்களுக்கு வெவ்வேறு விதமான சாதனாவிற்கு தீட்சை அளித்தார்.

கோரக்நாதர்

கோரக்நாத் என்றொரு மகத்தான யோகி. அவர் பேச்சில் வல்லமை மிகுந்தவர் இல்லை என்பதால், அவரிடம் மக்களை துளைத்துச் செல்லும் வார்த்தைகள் இருந்திருக்கவில்லை. அவரிடம் மக்கள் வந்தால், சரியான அந்தவொரு கணத்திற்காக காத்திருப்பார். அப்போது அவர்களுடைய மார்புப் பகுதியில் ஓர் உதை விடுவார். அதுதான் அவருடைய வழியாக இருந்தது. அவருடைய பல வழிகளில் ஒன்றாக இது இருந்தது. ஆனால், நான் உங்களிடம் அந்த ஒரு சிறு துவாரத்தை கண்டு கொள்வதற்கு, உங்களிடம் உட்கார்ந்து நாட்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரிடம் இப்படி வார்த்தைகள் எல்லாம் இல்லை. அதற்கான பொறுமையும் இல்லை. பொதுவாக, இந்த யோகிகள் தர்க்கமிகுந்த வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால், அது நேரத்தை விரயம் செய்வது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், இன்றைய உலகில் இப்படி பேசாமல், நாள்கணக்கில் பேசாமல், அந்த ஒரு சின்ன இடத்தை கண்டுபிடிப்பதற்கு வேறு வழி இல்லை. அதனால் அவர் சரியான கணத்தைப் பார்த்தபோது, மார்பிலேயே உதைத்தார். என்ன நடக்க வேண்டுமோ அதுவும் நிகழ்ந்தது. அவர் சொன்னார், நான் ஒருமுறை நெஞ்சில் உதைத்தால், அதன்பின், அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எனது பாதம் ஈட்டியைப்போல், அவர்களுக்குள் மேலும் மேலும் ஆழமாக இறங்கிக்கொண்டே இருக்கும். அதனை நிறுத்த இயலாது. அதில் உங்களின் விருப்பத்திற்கு இடமில்லை. இது உங்களுக்கு வேண்டாம் என்றால், என் முன்னே உட்கார வேண்டாம் என்று கூறினார். கோரக்நாத்திகள், இன்றும் யோகிகளின் வட்டத்தில் மிக சிறப்பானதொரு அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் மிக மிக உக்கிரமாக இருப்பவர்கள்.

சத்குரு

பலவிதமான குருமார்கள் இருந்தனர். அவர்களுடைய வழிகளும் பலவிதமாக இருந்தது. நான் இதை எப்படி பார்க்கிறேன் என்றால், “வேலை செய்யாத ஏதோவொன்றை செய்வதில்தான் என்ன பயன்?” என்னுடைய திருப்திக்காக, “இல்லை, நான் இப்படித்தான் செய்வேன்,” என்று நினைக்கலாம். இது அழகாக தெரியலாம். ஆனால், நடைமுறையில் சரிப்பட்டு வராது. அதனால், நாம் இப்போது பக்குவப்பட்டுவிட்டோம். இதனை நீங்கள் சத்குரு ஸ்ரீபிரம்மாவிடம் கூறியிருந்தால், அவர் உங்கள் முகத்திலேயே உதைத்து விட்டு சென்றிருப்பார். நீங்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவர் கவலைப்படுவதில்லை. அவர் எப்படி செய்கிறாரோ அப்படித்தான் அதனைச் செய்வார். இப்போது நாம் அப்படியில்லை. நான் இப்படிச் செய்வேன். நீங்கள், “இப்படி இல்லை” என்று கூறினால், அதற்கும் நான் இசைவேன். நான் உங்களுடன் மூன்று அடிகள் சேர்ந்து நடப்பேன். பின்னர், எப்படியிருந்தாலும் நீங்கள் என் வழிக்கு வந்துவிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

குருமார்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வழி

ஆக அந்த கணத்தில் எது சிறந்தது என்பதைப் பொருத்து, பல்வேறு குருமார்கள் பல்வேறு வழிகளில் செயல்பட்டார்கள். அதில் பெரும்பாலானோர் மற்றவர்களுக்கு அது புரிந்ததா இல்லையா என்று அக்கறை கொண்டதில்லை. ஒன்றே ஒன்று அவர்கள் தங்கள் உயிர்சக்தியை உலகெங்கும் பரப்பினார்கள். எப்படி இருந்தாலும், யார் அதைப் பெற வேண்டுமோ அவர்கள் பெறுவார்கள். அதனால் இவரையும் அவரையும் தேடிச்சென்று ஒவ்வொருவராக ஏன் கற்பிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது மனப்பான்மையாக இருந்தது. சிலர் மக்கள் பின் சென்று, அவர்களுக்கு பலவற்றை கற்பித்து, தங்களுடைய உயிர்சக்தியை அவர்கள் பெறுவதற்கு தயார்படுத்துவார்கள். அப்புறம் அதனை நிகழ்த்துவார்கள்.

சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்

ஓவியம்: திரு. மது சித்திரன்