குரு-சிஷ்ய உறவிற்கும் மற்ற உறவுகளுக்கும் உள்ள வித்தியாசம்?
உறவுகள் மனித வாழ்க்கையில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், அந்த உறவுகளைக் கையாள்வதில் பலர் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றனர். உறவுகளை உருவாக்கும் விதம் வேறொரு பரிமாணத்தில் நிகழ்வதன் சாத்தியங்கள் குறித்து இதில் சத்குரு கூறும்போது, உன்னத உறவுநிலைகளை உருவாக்கும் வழிமுறை புரிபடுகிறது!
 
குரு-சிஷ்ய உறவிற்கும் மற்ற உறவுகளுக்கும் உள்ள வித்தியாசம்?, guru sishya uravirkum matra uravugalukkum ulla vithiyasam
 

உறவுகள் மனித வாழ்க்கையில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், அந்த உறவுகளைக் கையாள்வதில் பலர் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றனர். உறவுகளை உருவாக்கும் விதம் வேறொரு பரிமாணத்தில் நிகழ்வதன் சாத்தியங்கள் குறித்து இதில் சத்குரு கூறும்போது, உன்னத உறவுநிலைகளை உருவாக்கும் வழிமுறை புரிபடுகிறது!

சத்குரு:

உறவுநிலையில் ஒரு பரிமாணம் இருக்கிறது. அந்தப் பரிமாணம் உடல் அல்லது பொருள்தன்மை தொடர்பானதல்ல, தோழமை அல்லது உணர்ச்சி தொடர்பானதல்ல. அது வெறுமனே அடிப்படையான உயிர்சக்தி தொடர்பானது. உறவுநிலையின் அந்தப் பரிமாணம்தான் குரு - சிஷ்ய பரிமாணம். உங்களுக்கு உடல், மனம், உணர்ச்சி, உயிர்சக்தி என்னும் நான்கு அம்சங்கள் உள்ளன. உங்களது உடல், மனம் மற்றும் உணர்ச்சி ஆகிய மூன்றின் தன்மைகள் மிகவும் சிறிய அம்சமாகிப் பின்வாங்கி மங்கிவிட்டால், பிறகு, பொதுவாக, நீங்கள் சக்தியின் பெரும் வடிவமாகி விடுகிறீர்கள். அப்போது நீங்கள் மிகச்சரியாக அந்த குரு - சிஷ்ய உறவிற்குள் பொருந்தி வரமுடியும். மிகச் சரியாக என்று நான் கூறும்போது, அந்த உறவு வாழ்வு மற்றும் மரணம் கடந்து இருக்கக்கூடும் என்று சொல்கிறேன். அதனால்தான், எப்போதும் குரு - சிஷ்ய உறவுநிலைக்கு மிக உயரிய இடத்தை நமது மரபில் அளித்து வந்தார்கள். உங்கள் குழந்தையையோ அல்லது உங்கள் கணவரையோ அல்லது உங்கள் மனைவியையோ நீங்கள் நேசித்ததைவிட அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இன்னும் அதிகமாக நேசிக்கிறார்கள் என்று அதற்கு அர்த்தம் அல்ல. ஆனால் இந்த மூன்று அம்சங்கள் - தனித்தன்மையுடன் இருக்கும் உடல் மனம் மற்றும் உணர்ச்சி - முக்கியமாக குரு - சிஷ்ய உறவில் விலக்கி வைக்கப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம். இப்போது இது அந்த உறவிற்குள் சரியாகப் பொருந்துகிறது. உங்களது சக்திநிலையின் தளத்தில் ஒரு உறவு உருவானால், நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல, எங்கிருந்தாலும் என்னால் உங்களை அதிர்வுறச் செய்ய முடியும். ஐம்பது வருடங்கள் நீங்கள் யாருடனாவது வாழ்ந்தாலும், சாத்தியப்படாத ஒருவித நெருக்கத்தை நான் உங்களுக்குள் ஏற்படுத்த முடியும்.

உறவுநிலைகள் என்பவை ஒத்துப் போவது குறித்ததோ, தோழமை குறித்ததோ அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தவரிடமிருந்து மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வது குறித்ததோ அல்ல. உறவுநிலைகள், ஒரு குறிப்பிட்டவிதமான ஒருமையை அடைவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கின்றன.

ஒவ்வொருவரின் சக்திநிலையும் தனித்தன்மை கொண்டது. ஒவ்வொருவரின் சக்திநிலைக்கும் தனிப்பட்ட மணம் உண்டு. ஏதோ இருவரின் சக்திநிலைகள் கூட ஒரேமாதிரி இருக்காது. ஆனால் அடிப்படை அம்சம், சக்தியின் அடிப்படை அம்சம் மட்டும் எல்லோருக்கும் எப்போதும் ஒரேமாதிரிதான் இருக்கிறது. அந்தத் தனிப்பட்ட வாசனையை, சக்திநிலையின் வாசனையைத் துளைத்து உள்ளே சென்று அனைவருக்கும் பொதுவாக உள்ள அந்த அடிப்படை அம்சத்தைத் தொடும் திறன் உங்களுக்கு இருக்குமேயானால், அங்கே இருவருக்கும் உடனடித் தொடர்பு நிகழ்கிறது. அதற்கு எந்தப் பேச்சு வார்த்தையோ அல்லது எந்தவிதமான பரிவர்த்தனையோ தேவைப்படுவதில்லை. அது ஒரு வெறும் ஒன்றிணைதலாக மட்டுமே இருக்கிறது.

மேலும், நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்கான ஒரேவழி, இணைத்துக் கொள்ளுதல் மட்டுமே. மக்கள் எப்போதும், “எனக்கு என்ன செய்ய விருப்பமோ அதனை நான் செய்வேன். நான் எங்கு இருப்பதற்கு விரும்புகிறேனோ அங்கு நான் இருப்பேன்” என்றிருக்கும் நிலையைத்தான் சுதந்திரம் என்று புரிந்துகொள்கின்றனர். தனித்திருப்பதையே, தனிப்பட்ட தன்மையில் இருப்பதையே மக்கள் சுதந்திரம் என்று புரிந்துகொள்கின்றனர். நீங்கள் தனிப்பட்டவர் என்றால், உங்களுக்குள்ளேயே நீங்கள் ஒரு பிணைப்புக்கு உள்ளாகிறீர்கள். உங்களுடைய இருப்பே ஒரு பிணைப்பாகிவிடும். உங்கள் எண்ணத்திலும், உணர்ச்சியிலும் நீங்கள் எந்த அளவுக்கு அதிகமாக தனிப்பட்டு இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமாக நீங்கள் வாழ்வின் இயல்பான செயல்முறையிலிருந்து விலக்கப்படுகிறீர்கள்.

இணைத்துக்கொள்ளுதலின் வழியாகமட்டுமே, சுதந்திரத்தை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். இணைத்துக்கொள்வதுதான் அடிப்படையான பரிமாணமாக இருக்கிறது. இணைத்துக் கொள்ளுதல் என்பது “நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசி” என்பதன் அடிப்படையில் எழுவதல்ல. உங்களது சம்மதத்தைப் பெறுவதற்காக, அது மேலோட்டமான நிலையில் தேவைப்படலாம். ஆனால் அன்பு என்பது ஒரு கரைப்பான், அது ஒரு திரவமல்ல. அது உங்களிடமுள்ள கரடுமுரடான ஓரங்களைக் கரைத்து இன்னும் நெருக்கமாக உங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. அப்போதுதான் ஒரு சாத்தியம் உங்களுக்கு நிகழும்.

உறவுநிலைகள் என்பவை ஒத்துப் போவது குறித்ததோ, தோழமை குறித்ததோ அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தவரிடமிருந்து மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வது குறித்ததோ அல்ல. உறவுநிலைகள், ஒரு குறிப்பிட்டவிதமான ஒருமையை அடைவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கின்றன. இந்த ஒருமை மாபெரும் சாத்தியத்திற்கு வழிகாட்டும். அந்த ஒருமை நிகழவில்லை என்றால், பிறகு அந்த உறவானது வேறு எந்த விஷயத்தையும் விட அதிக சுமையாகவும், தடையாகவும் இருக்கிறது. ஏனென்றால், ஒருமை ஏற்படாத உறவுகளைக் நீங்கள் கைக்கொள்ளும்பொழுது, இன்னும் அதிகமாக தனிப்பட்டுப் போகிறீர்கள்.

நீங்கள் யாரோ ஒருவருடன் ஒரு உறவைக் கைக்கொள்ளும்பொழுது, அந்த உறவில் எந்த அளவுக்கு நெருக்கம் அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக மற்ற உலகத்திடமிருந்து நீங்கள் தனிப்பட்டுப் போகிறீர்கள். ஏனென்றால் உங்களுடைய தனிப்பட்ட தன்மையுடன் இணைந்து கொள்ள இப்போது உங்களுக்குக் கூட்டாளி கிடைத்து விட்டது. நீங்கள் வெளியில் பார்வை செலுத்தத் தேவையில்லாதபடிக்கு, உங்களுக்கென ஒரு சிறு கூட்டத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். குறிப்பாக, அந்த உறவுநிலை நல்லவிதமாக நீடித்தால், மற்றவர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் விலகிவிடுகிறீர்கள். இத்தகைய உறவுநிலை ஒரு மனிதரை மேலான இடத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை. வாழ்க்கையில் அது மேன்மேலும் சிக்கலான சூழலுக்குத்தான் அவரை அழைத்துச் செல்லும்.

இயல்பான இணைதல் ஏற்படும்படியான ஒரு பரிமாணத்தில், உங்களைச் சுற்றியுள்ள அனைத்துடனும், விழிப்புணர்வுடன் நீங்கள் உறவுகளை வளர்த்துக்கொள்ள வில்லை என்றால், இந்த உலகத்தில் வாழ்ந்திருப்பதன் ஆனந்தத்தை நீங்கள் ஒருபோதும் அறியமாட்டீர்கள். இந்த உலக வாழ்க்கையின் பயம் மற்றும் பரபரப்பை மட்டுமே அறிந்துகொள்வீர்கள். உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றுடனும் இந்த ஒருமையை நீங்கள் அறிந்துவிட்டால், இந்த உலகில் இருப்பதே கூட ஒரு முழுமையான, நம்புவதற்கு அரிதான பரவச அனுபவமாக இருக்கமுடியும். ஒரு மலையைப் பார்த்தாலே நீங்கள் கண்ணீரில் நனைய முடியுமென்றால், ஒரு சிறு பூச்சியைப் பார்த்தாலே அதை உங்களில் ஒரு பாகமாக உணர முடிந்தால், கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் உயிரின் தீவிரத்தை நீங்கள் புரிந்துகொண்டால், அந்த வெடித்தெழச் செய்யும் தீவிரமானது தனிமைப்படுவதற்கு உங்களை அனுமதிக்காது. அது, இயல்பாகவே உங்களை, அனைத்தையும் இணைத்துக்கொள்ளும் மனிதராக உருவாக்கிவிடும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1